0
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘X’ சமூக வலைத்தளத்தின் ‘Grok’ செயற்கை நுண்ணறிவு கருவி, பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாக மாற்றும் ‘டீப்ஃபேக் (Deepfake)’ படங்களை உருவாக்க அனுமதிப்பதாகும் என்ற குற்றச்சாட்டுகள் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, புகைப்படங்களில் உள்ள உடைகளை டிஜிட்டல் முறையில் நீக்கும் ‘நூடிஃபிகேஷன்’ கருவியாக Grok பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, இது “வெட்கக்கேடானதும் அருவருப்பானதும்” என இங்கிலாந்து பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தேவையானால் ‘X’ தளத்திற்கு இங்கிலாந்தில் தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசுகளின் மற்றும் சமூகத்தின் அழுத்தம் அதிகரித்ததை அடுத்து, ‘X’ நிறுவனம் Grok கருவியின் மூலம் படங்களை எடிட் செய்யும் வசதியை பொதுப் பயன்பாட்டிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இனி, இந்த வசதி கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.