பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அறிக்கை மீது பாகிஸ்தான் கடுமையான எதிர்வினையை வெளியிட்டுள்ளது.
“ஐசிசி மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷா ஆகியோரின் அறிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சேதப்படுத்துவதற்கான முயற்சி,” என பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஆசியக் கோப்பையின்போது, பாகிதான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாகவே ஜெய் ஷாவின் அறிக்கையை அதாவுல்லா தரார் பார்க்கிறார்.
ஆப்கன் கிரிக்கெட் வீரர்களான கபீர் ஆகா, சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) சமூக ஊடகங்களில் தகவல் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மூன்று நாடுகள் பங்கேற்கும் டி20 தொடரில் இருந்து விலக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.
இந்தத் தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் விளையாடவிருந்தன. தற்போது ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக ஜிம்பாப்வே அணி இந்தத் தொடரில் பங்கேற்கும்.
‘ஐசிசி எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை’
ஐசிசி மற்றும் ஜெய் ஷா ஆகியோரின் அறிக்கைகளை நிராகரித்து, இது ‘உறுதிப்படுத்தப்படாத தகவலை’ முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சி என்று பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் குறிப்பிட்டார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தானே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று” என்று கூறினார்.
“‘ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள்’ மூன்று பேரும் ‘வான்வழித் தாக்குதலில்’ கொல்லப்பட்டதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் ஐசிசியின் பக்கச்சார்பான மற்றும் அவசரமான அறிக்கையை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. இந்த கூற்றுகளை உறுதிப்படுத்த ஐசிசி எந்தச் சுயாதீனமான ஆதாரத்தையோ அல்லது நம்பகமான சான்றையோ வழங்கவில்லை,” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஐசிசியைப் போலவே ஜெய் ஷாவும் இதே கூற்றை முன்வைத்துள்ளார் என்று தரார் கூறுகிறார்.
“இது, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாகும்.. இதன் மூலம் ஐசிசி தலைமை மற்றும் ஜெய் ஷா ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சேதப்படுத்த விரும்புகிறார்கள்,” என அதாவுல்லா தரார் கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, சமீபத்தில் ஆசியக் கோப்பையின்போது நடந்த ‘கை குலுக்க மறுத்த சர்ச்சை’ மூலமும் பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பாதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் ஆசியக் கோப்பை போட்டிகளின்போது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸின் போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர், வெள்ளிக்கிழமை இரவு ‘உறுதிப்படுத்தப்பட்ட’ உளவுத் தகவலின் அடிப்படையில், ஹாஃபிஸ் குல் பகதூர் குழுவுக்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது 60 முதல் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.
ஐசிசி என்ன கூறியது?
பட மூலாதாரம், Getty Images
ஐசிசி தலைவர் ஜெய் ஷா, சனிக்கிழமை மாலை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்தச் சம்பவத்துக்குத் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.
“மூன்று இளம் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் கபீர் ஆகா, சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகியோரின் மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர்களின் கனவுகள் வன்முறையின் அர்த்தமற்ற செயலால் முடிந்துவிட்டன” என்று அவர் எழுதினார்.
இதேவேளையில், ஐசிசி தனது அறிக்கையில், மூன்று இளம் வீரர்களின் மரணத்தால் மிகவும் வருத்தப்படுவதாகத் தெரிவித்தது.
“மூன்று இளம் வீரர்களும் நட்பு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஐசிசி இந்த வன்முறைச் செயலைக் கண்டிக்கிறது. ஐசிசி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒருமைப்பாட்டுடன் நிற்கிறது மற்றும் அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறது,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) தனது அறிக்கையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் சமூகம் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் நிற்பதாகக் கூறியது.
“நிரபராதிகள், குறிப்பாக நம்பிக்கைக்குரிய வீரர்களின் இழப்பு மிகவும் துயரமானது மற்றும் கவலை அளிக்கிறது. பிசிசிஐ ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது மற்றும் அவர்களின் துக்கத்திலும் இழப்பிலும் பங்கெடுத்துக் கொள்கிறது” என்று பிசிசிஐ கூறியது.
ஐசிசி அறிக்கை வெளியிட்டதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அதற்கு நன்றி தெரிவித்தது.
ஏசிபி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் இந்த வன்முறைச் செயலைக் கடுமையாகக் கண்டிக்கிறது. ஐசிசியின் ஒருமைப்பாட்டைப் பாராட்டிய அதே வேளையில், இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகக் கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க ஏசிபி வலியுறுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளது.
ரஷித் கான் ‘எக்ஸ்’ சுயவிவரத்திலிருந்து லாகூர் குலாண்டர்ஸ் பெயரை நீக்கினார்
பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ரஷித் கான் பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அணியான லாகூர் குலாண்டர்ஸின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். மேலும், லாகூர் குலாண்டர்ஸைத் தனது விருப்பமான ஃப்ரான்சைஸி என்றும் முன்பு தெரிவித்திருந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, அவர் தனது ‘எக்ஸ்’ பயோவில் இருந்து லாகூர் குலாண்டர்ஸ் பெயரை நீக்கிவிட்டார்.
இந்தத் தாக்குதலை ‘சோகமானது’ என்று ரஷித் கான் வர்ணித்தார். மேலும், பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த முத்தரப்புத் தொடரில் இருந்து விலகும் ஏசிபி-யின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.
“பொதுமக்களை குறிவைப்பது முற்றிலும் தவறானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இத்தகைய சட்டவிரோத மற்றும் நியாயமற்ற செயல்கள் மனித உரிமைகளை மீறுவதாகும்” என்றார்.
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் இர்பான் பதான் உட்பட மற்ற வீரர்களும் இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“பாகிஸ்தான் எப்போதும் தனது ஆப்கன் சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தனது மண்ணில் 40 லட்சம் அகதிகளுக்கு இடமளித்துள்ளது. ஆனால், மிக வருத்தத்துடன் சொல்ல வேண்டியுள்ளது என்னவென்றால், சமீப நாட்களில் ஆப்கானிஸ்தான் இந்த எல்லா உதவிகளையும் மறந்துவிட்டது மற்றும் எல்லைகளில் வெளிப்படையாகத் தாக்குதல் நடத்துகிறது,” என்று பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி எக்ஸ் தளத்தில் எழுதினார்.
தாக்குதல் பற்றி இதுவரை தெரிந்தது என்ன?
கத்தாரில் பாகிஸ்தானுடன் தூதுக்குழுவின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டன. இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என, தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறினார்.
முழுமையான போர் நிறுத்தம் உட்பட பல விஷயங்களில் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக முஜாஹித் கூறினார்.
“இரு தரப்பினரும் அமைதி, பரஸ்பர மரியாதை மற்றும் நல்ல அண்டை உறவுகளுக்கான தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்க விரும்புகிறார்கள். இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார்கள். பாகிஸ்தான் அரசை எதிர்ப்பவர்களின் தாக்குதல்களை ஆதரிக்கவும் மாட்டார்கள்.” என அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் சமாதான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார்.
“இரு அண்டை நாடுகளும் பரஸ்பரம் மற்றவரின் மண்ணை மதிப்பார்கள். ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்படும்” என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ பாதுகாப்புப் படையினர் குறிவைத்ததாக வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதல் குறித்துப் பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் ‘பயங்கரவாத’ குழுவான ஹாஃபிஸ் குல் பகதூரின் நிலைகள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பிபிசி பஷ்தூவின்படி, ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தின் உர்கூன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு