படக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் தான் காரணம் என பாகிஸ்தான் அரசாங்கம் நம்புகிறதுகட்டுரை தகவல்
கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கைபர் பக்துங்வா மற்றும் பலுசிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், இந்த வாரம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
நவம்பர் 11 அன்று இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 27 பேர் காயமடைந்தனர்.
இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்பு, வானா கேடட் கல்லூரியும் தாக்குதலுக்கு இலக்கானது. கட்டடத்திற்குள் மறைந்திருந்த நான்கு பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை பல மணி நேரம் தொடர்ந்தது.
நவம்பர் 11 அன்று, கைபர் பக்துங்வா மாவட்டத்தின் தேரா இஸ்மாயில் கான் பகுதியில் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட ஐ.ஈ.டி (IED – மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள்) தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.
நவம்பர் 14 அன்று, இஸ்லாமாபாத் தற்கொலைத் தாக்குதலில் தொடர்புடைய தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரைக் கைது செய்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தாலிபன் அமைப்பின் பாகிஸ்தான் தளபதிகள், டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு இஸ்லாமாபாத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துமாறு கேட்டுக்கொண்டதாக தற்கொலை தாக்குதலை நடத்தியவரை ‘வழிநடத்தியவரிடம்’ மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்ததாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.
இஸ்லாமாபாத் தாக்குதலில் தொடர்புடைய வலையமைப்பை ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி-இன் உயர் தலைமை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துவதாக பாகிஸ்தான் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ள டிடிபி அமைப்பு, இந்தத் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்
‘தாக்குதலைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான்’
இந்த பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டனர். எதிர்வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நிராகரிக்கவில்லை.
இஸ்லாமாபாத் தாக்குதலைக் கண்டித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ‘”இந்தியா தீவிரமாக ஆதரிக்கும்” தீவிரவாதக் குழுக்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தான் தலைமையின் ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை’ மறுப்பதாக இந்தியா கூறியது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், “நாம் போர் போன்ற சூழலில் இருக்கிறோம்” என்று கூறி கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார்.
“இவை ஆப்கானிஸ்தானில் இருந்து எதிர்காலத்தில் நடத்தப்படும் தாக்குதலுக்கு முன்னோடியாகக் கருதப்படலாம், உண்மையில் இது ஆப்கானிஸ்தான் வழியாக நடத்தப்படும் ‘இந்தியாவிலிருந்து வரும் தாக்குதலாக’ இருக்கலாம்” என்று அவர் மேலும் கூறினார்.
மறுபுறம், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கம் இஸ்லாமாபாத் தாக்குதல் மற்றும் வானா கேடட் கல்லூரி சம்பவங்களைக் கண்டித்து, ‘விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு வருத்தம்’ தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், ISPR/SCREENGRAB
படக்குறிப்பு, தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு வானா கேடட் கல்லூரியின் நுழைவுவாயில் (கோப்புக் காட்சி)
இஸ்லாமாபாத் தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு பேசிய பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இஸ்லாமாபாத் தாக்குதல் அவர்கள் தலைநகரை அடைய முடியும் என்பதற்கான செய்தி என்றும், ‘ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு நேர்மையானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்’ என்றும் கூறினார்.
புதன்கிழமை இரவு ஜியோ டிவியிடம் பேசிய உள்துறை இணை அமைச்சர் தலால் செளத்ரி, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் தாக்கப்பட்டால், ‘நீண்ட தூர தந்திரங்களைப்’ பயன்படுத்தி லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தை குறிவைப்போம் என அச்சுறுத்தியதாகக் கூறினார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் பெயர்கள் எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் இருப்பதாக தலால் செளத்ரி கூறினார்.
“மத்தியஸ்தர்கள் முயற்சி செய்யட்டும், ஆனால் தனது நாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளது, மேலும் நேரத்திற்கு தக்கவாறு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.
இந்த சிக்கலான சூழ்நிலையில் அரசியல் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
சில ஆய்வாளர்கள் இந்தத் தாக்குதல்களுக்கு காபூலில் உள்ள தாலிபன் அரசாங்கத்தைக் குறை கூறுகிறார்கள், ஆனால் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதற்கு காரணம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்பு தோல்விகளின் விளைவு என்று சிலர் நம்புகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாதுகாப்புக்காக நிற்கும் ஆப்கன் தாலிபன் சிப்பாய்
‘பாகிஸ்தானுக்கு மிகவும் ஆபத்தானது என்று நிரூபிக்கக்கூடிய ஒன்று எங்களிடம் உள்ளது’
பாகிஸ்தான் ‘போர் சூழ்நிலையில்’ இருப்பதாக கூறும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்பு நிபுணர் எஜாஸ் ஹைதர் உடன்படுகிறார்.
“எங்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லை… ஆனால் பாகிஸ்தானுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்று எங்களிடம் உள்ளது, அதாவது, பாகிஸ்தானில் உள்ள மக்களை சித்தாந்த ரீதியாக சென்றடைவது” என்று தாலிபன் தலைவர் அப்துல்சலாம் ஜயீஃப் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியை எஜாஸ் ஹைதர் மேற்கோள் காட்டுகிறார்.
அவருடைய கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் “நாங்கள் இஸ்லாமாபாத்தை குறிவைக்க முடியும் என்ற செய்தியை அனுப்புகிறார்கள்” என்ற பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையில் உண்மை உள்ளது.
ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா மையத்தின் (Centre for Afghanistan, Middle East and Africa (CAMEA)) இயக்குநரான முனைவர் அமீனா கான், இஸ்லாமாபாத்தில் உள்ள மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்துடனும் தொடர்புடையவர்.
சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று கூறும் அவர், தோஹா ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் பாகிஸ்தானை ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு’ பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் பொறுமையைக் கடைப்பிடித்து வருவதாக கூறுகிறார்.
“ஆனால் டிடிபி-க்கு ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான புகலிடங்களையும் வசதிகளையும் வழங்கியுள்ள ஆப்கானிஸ்தான் தாலிபன்கள், அவர்களைக் கட்டுப்படுத்துகின்றனர்” என முனைவர் அமீனா கான் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்லாமாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் போலீசார்
‘இதுபோன்ற தாக்குதல்களை உளவுத்துறை மூலம் மட்டுமே தடுக்க முடியும்’
இதுபோன்ற போரை முற்றிலுமாக நிறுத்துவது “கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என்று எஜாஸ் ஹைதர் நம்புகிறார், ஏனெனில் இது எதிரில் இருக்கும் எதிரி யார் என்பதைத் தெரிந்து போரிடும் வழக்கமான போர் அல்ல.
“இத்தகைய போரில், தெளிவான முன்னணி இருக்காது, மறைந்திருக்கும் எதிரி ரகசியமாகத் தாக்குகிறான்” என்று அவர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இதைத் தடுக்க இருக்கும் ஒரேயொரு வழி புத்திசாலித்தனம் மட்டுமே.
“எதிரி கவனத்தை திசைதிருப்பி திடீர் தாக்குதல் முறையை பின்பற்றினால், அதை சமாளிப்பதற்கான வழி, எதிரியின் எல்லைகளுக்குள் ஊடுருவி, உள் தகவல்களைப் பெற்று, அடையாளம் கண்டு அதனை முறியடிப்பதாகும்.”
“வெற்றிகரமான உளவுத்துறை நடவடிக்கைகள் செய்தியாக மாறுவதில்லை. இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதல் போன்ற ஏதாவது நடக்கும்போது செய்தியாகிறது,” என்று முஷ்தாக் ரஹீம் கூறுகிறார்.
இது தவிர, பாகிஸ்தானில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு மற்றும் பலவீனமான பாதுகாப்பு அமைப்பு ஆகியவை “தீவிரவாதிகளுக்கு உகந்த களமாக அந்நாட்டை மாற்றுகிறது” என்று அவர் நம்புகிறார்.
பிராந்தியம் முழுமையும் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், “பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மட்டுமே அமைதி வரும், குற்றச்சாட்டுகள் மூலம் அல்ல” எனவும் முஷ்தாக் ரஹீம் கருதுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, டிடிபி போன்ற ஆயுதக் குழுக்கள் எந்தவொரு நாட்டுக்கும் சவாலாக இருக்க முடியும், மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பரஸ்பர புரிதல் மூலம் மட்டுமே அவற்றை எதிர்கொள்ள முடியும்.
முஷ்தாக் ரஹீமின் கருத்தில் இருந்து மாறுபடும் முனைவர் அமீனா கான், “இது பாகிஸ்தானின் பிரச்னையாக இருந்தாலும், அண்டை நாடுகளிடமிருந்தும், டிடிபிக்கு வசதிகளை வழங்கும் நாடுகளிடமிருந்தும் எங்களுக்கு உதவி தேவை” என்று கூறுகிறார்.
“தாலிபன்கள் தான் இதற்குப் பொறுப்பு, ஏனென்றால் அவர்கள் டிடிபி உடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப முன்வந்தனர், இது ஆப்கானிஸ்தானில் டிடிபியின் இருப்பை மட்டுமல்ல, தாலிபன்களுக்கு அவர்கள் மீதான செல்வாக்கு இருப்பதையும் நிரூபிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
தாலிபன் அரசாங்கத்தின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட ‘தீவிரவாத குழுக்கள்’ ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருவதாகக் கூறும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையை அமீனா கான் சுட்டிக்காட்டுகிறார்.
பாகிஸ்தானுடன் வலுவான உறவுகள் தேவையா அல்லது டிடிபி உடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்பதை ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் முடிவு செய்ய வேண்டும் என்று முனைவர் அமீனா கான் கூறுகிறார்.