பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், அன்ஷுல் சிங்
- பதவி, பிபிசி நிருபர்
-
2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டுடன் சீனா தனது தொடர்புகளை அதிகப்படுத்த தொடங்கியது. தற்போது இந்தியாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தாலிபனுடனான தொடர்புகளை இந்தியா அதிகரித்து வருகிறது, ஆனால் முதல் முறையாக தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி டெல்லிக்கு வந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் முத்தக்கியும் உள்ளார்.
வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனான உயர்மட்ட கூட்டத்தில் முத்தக்கி கலந்து கொண்டார்.
அதே நேரத்தில் காபூலில் உள்ள இந்தியாவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மிஷனை தூதரகமாக மாற்றுவதாக ஜெய்சங்கர் அறிவித்தார். 2021 ஆகஸ்டில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு காபூலில் இருந்த தூதரகத்தை மூடியது இந்தியா.
தற்போது வரை இந்தியாவும் மற்ற நாடுகளைப் போல தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ரஷ்யா மட்டுமே தாலிபன்களை அங்கீகரித்துள்ள ஒரே நாடாக உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளை “பிராந்திய நிலைத்தன்மை மற்றும் வலிமையை நோக்கியது” என ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை “நெருங்கிய நண்பர்” என அழைத்துள்ள முத்தக்கி இந்திய நிறுவனங்களை ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் பரஸ்பர நலன்கள்
1990களில் தாலிபன்கள் முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தபோது இந்தியா அவர்களின் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.
ஆனால் 2021-இல் தாலிபன் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து ஆப்கானிஸ்தானின் நிலைமை முற்றிலுமாக மாறிய பிறகு இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு அளவான தொடர்பை மேற்கொண்டது. இன்று இந்தியா மற்றும் தாலிபன் நலன்கள் இணையும் பல்வேறு இடங்கள் உள்ளன.
இரு தரப்பும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் குறியாக இருப்பதாக இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களுடைய கூட்டறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் மட்டுமல்ல, பிராந்தியம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்லாமிய அரசு கோரசான் (ISIS-K) அமைப்பை தாலிபன்கள் கருதுகின்றனர். பல்வேறு சர்வதேச மன்றங்களிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா குரல் கொடுத்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆப்கானிஸ்தான் மண் பயன்படுத்தப்படாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய விரும்புகிறது. இதற்கிடையில், தாலிபன்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த ஐஎஸ்ஐஎஸ்-கே போன்ற அமைப்புகளை பலவீனப்படுத்த விரும்புகின்றனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸின் ஓய்வு பெற்ற பேராசிரியரும் தலைவருமான அனுராதா சினோய், முத்தக்கியின் வருகையை இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளின் எதிர்காலத்திற்கு நேர்மறையான நகர்வாகப் பார்க்கிறார்.
பிபிசியிடம் ஹிந்தியிடம் பேசுகையில், “அமீர் கான் முத்தக்கியை வரவேற்று இந்திய வெளியுறவு அமைச்சகம் நல்ல நகர்வை மேற்கொண்டுள்ளதாக நினைக்கிறேன். தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லையென்றால் இந்தப் பிராந்தியத்தில் (தெற்கு ஆசியா) நிலையற்றத்தன்மை அதிகரிக்கும், ஏனென்றால் பக்ரம் விமானப்படை தளத்தை திருப்பி எடுத்துக் கொள்ளப்போவதாக டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானும் இந்தியாவை ஆதரித்தது. எனவே இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பின் நலன்களும் உள்ளன.” என்று தெரிவித்தார் அனுராதா சினோய்.
பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், இந்தியாவிற்கும் தாலிபன்களுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதில் ஆப்கானிஸ்தானில் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். தனது அதிருப்தியை எக்ஸ் ஊடகத்தில் பதிவு செய்த ஆப்கானிய பத்திரிகையாளர் ஹபீப் கான், “ஆப்கானிஸ்தான் குடிமகனாக, இந்தியாவை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் இந்தியா இங்கு நிறைய பணிகளைச் செய்துள்ளது. சல்மா அணை, பாராளுமன்றம் மற்றும் சாலைகளை இந்தியா கட்டியது. ஆனால், தாலிபன்களுடனான உறவை இயல்பாக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் எனக்கு ஏமாற்றம் அளிக்கின்றன. தாலிபன்கள் எங்கள் நாட்டை சட்டவிரோதமாக கைப்பற்றி ஆட்சி செய்துவருகின்றனர். அவர்கள் அதை நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு பதிவில், இந்தியர்கள் பாகிஸ்தானை வெறுக்கிறார்கள், ஆனால் இந்தியர்களைவிட ஆப்கானியர்கள் அதிகமாக பாகிஸ்தானை வெறுக்கிறார்கள். பாகிஸ்தானின் பினாமியாக செயல்பட்ட தாலிபன்கள், தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, பெண்களின் கல்வியைத் தடை செய்தவர்கள். தாலிபனை நண்பனாக இந்தியா நினைப்பது தவறான புரிதலைக் கொடுக்கிறது, இது வரலாற்றில் இந்தியாவை தவறான பக்கத்தில் நிறுத்துகிறது,” என்று ஹபீப் கான் என்று தெரிவித்துள்ளார்.
தாலிபன்கள் நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வருகின்றனர். உலகளாவிய நிலையற்றத்தன்மையால் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து பொருளாதார சவால்களைச் சந்தித்து வருகிறது.
2021-க்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள அணைகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் நாடாளுமன்ற கட்டடம் போன்ற திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. அந்த கட்டமைப்புகளை பராமரிக்க தாலிபானுக்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுகிறது.
இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ‘ஆழமான கலாசார உறவுகள்’ அதிகார மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று முன்னாள் இந்திய தூதர் அனில் திரிகுணாயத் நம்புகிறார்.
“இந்தியாவிற்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் ஆப்கானிஸ்தான் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது. தாலிபனைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் மாறியிருக்கலாம், ஆனால் பொது மக்களிடையே இந்தியா-ஆப்கானிஸ்தான் பிணைப்பு எப்போதும் வலுவாகவே இருந்து வருகிறது, இதுவே இந்தியாவின் உண்மையான பலம்” என்று அனில் திரிகுணாயத் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தற்போது தாலிபன்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளதாக அந்தப் பேட்டியில் குறிப்பிடும் அணில், “இந்தியாவின் முக்கியமான கவலை தாலிபன்கள் அல்ல, பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்கள் தான். அவர்கள் தரப்பிலிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்கிற தெளிவான உத்திரவாதத்தை தாலிபன் அரசு வழங்கியுள்ளது. முன்பு இது போன்றதோரு சூழ்நிலை இல்லை. ஆனால் இப்போது அவர்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. புல்வாமா தாக்குதலையும் அவர்கள் கண்டித்துள்ளனர், மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.”
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) ஆப்கானிஸ்தானில் தனது எல்லையை விரிவுபடுத்துகிறது. சீனா அல்லது பாகிஸ்தானின் ஆதிக்கத்திற்குள் ஆப்கானிஸ்தான் முழுமையாக சென்றுவிடுவதை இந்தியா விரும்பவில்லை.
தாலிபன்களும், ஒரு நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரிப்பதை விரும்பவில்லை, எனவே அதுவும் இந்தியா போன்ற மாற்று நட்பு நாடுகளைத் தேடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
‘பாகிஸ்தானுக்கு அடி’
இந்தப் பயணம் ‘பாகிஸ்தானுக்கு அடி’ மற்றும் தாலிபன் அரசை மறைமுகமாக அங்கீகரிப்பதை நோக்கிய முக்கியமான படி என்று உத்தி சார்ந்த விவகாரங்கள் வல்லுநரான பிரம்மா செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இது இந்தியா-தாலிபன் உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக உள்ளது. இதில் ஒவ்வொரு தரப்பும் தங்களின் உத்தி சார்ந்த நலன்களை மேம்படுத்த நடைமுறை ஒத்துழைப்பை வலியுறுத்துகின்றன.” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் ஆப்கானிஸ்தானில் பிராந்திய அதிகார சமநிலையில் சாத்தியமான மாற்றத்தை குறிப்பதாகவும் செலானி தெரிவிக்கிறார்.
இந்தப் பயணம், இந்தியா-பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்-தாலிபன் இடையேயான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது.
பிபிசி ஹிந்தி நிகழ்வில் பேசிய அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஹர்ஷ் வி.பந்த், “பாகிஸ்தானுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவு, தாலிபன்களுக்கு தங்கள் விருப்பங்களைத் திறந்து வைத்துள்ளது. அவர்கள் இனிமேலும் பாகிஸ்தானைச் சார்ந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பாகிஸ்தானை அதிகமாகச் சார்ந்திருப்பதிலிருந்து விடுபட்டு, ஆப்கானிஸ்தான் ஒரு சுதந்திர நாடாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது” என்று அவர் கூறினார்.
தாலிபன்கள் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் “உத்தி சார்ந்த கூட்டாளிகள்” எனக் கருதப்பட்டனர், ஆனால் சமீப ஆண்டுங்களில் இரு தரப்புக்கும் இடைய உறவு இறுக்கமாகிவிட்டது. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கு தாலிபன்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தெற்கு ஆசிய விவகாரங்களைக் கவனித்து வரும் வல்லுநர் மைக்கேல் கூகல்மேன் முத்தக்கியின் பயணத்தை இந்தியாவிற்கான வாய்ப்பாகப் பார்க்கிறார்.
“இந்தியா-தாலிபன் உறவுகள் சுமூகமாகி வருவது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் நடைமுறை சார்ந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட அணுகுமுறை இருப்பதை பிரதிபலிக்கிறது. இது ஆப்கானிஸ்தானில் தனது நலன்களை மேலும் சிறப்பாக முன்னிறுத்த இந்தியாவை அனுமதிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் தாலிபன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை ராஜாங்க ரீதியாக பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கிறது.” என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார் மைக்கேல் கூகல்மேன்.
பட மூலாதாரம், Getty Images
சவால்கள் என்ன?
சமீப ஆண்டுகளில் இந்தியா நடைமுறை சார்ந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு தாலிபன் அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது, ஆனால் இந்த உறவுகளை வலுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.
இந்தியாவிற்கு அரசியல், பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சர்வதேச அளவில் பிரச்னைகள் உருவாக்கக்கூடிய பல பெரிய சவால்கள் உள்ளன.
இந்தியா தற்போது வரை தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இந்தியா பேச்சுவார்த்தையை தொடர விரும்புகிறது. ஆனால் சர்வதேச அரங்கில் அதன் பிம்பம் பாதிக்கப்படாமல் இருக்க அங்கீகாரம் வழங்குவதை தவிர்த்து வருகிறது.
தாலிபன் ஆட்சியின் கீழ் மனித உரிமைகள், பெண்களின் கல்வி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் என்பது கவலையளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. பெண்களின் உரிமைகளை மதிப்பதாகக் கூறும் தாலிபன் அரசு, அது ஆப்கன் கலாசாரம் மற்றும் இஸ்லாமிய சட்டம் பற்றிய தனது சொந்த புரிதலுக்கு உட்பட்டு இருக்கும் எனத் தெரிவிக்கிறது.
மேற்கத்திய நாடுகளும் தாலிபன் அரசை எச்சரிக்கையுடனே பார்க்கின்றன. தாலிபன் உடன் இந்தியா மிகவும் நெருக்கமானால் சர்வதேச விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
தாலிபன்களை இந்தியா உடனடியாக அங்கீகரிக்காது எனக் கூறும் அனுராதா சினோய் பேச்சுவார்த்தைகளை நிறுத்த முடியாது என்கிறார்.
மேலும் அவர், “பெண்களின் உரிமைகளை தாலிபன்கள் மொத்தமாக பறித்துவிட்டார்கள் என்பது உண்மை தான். மேற்குலக நாடுகள் தொடர்ந்து தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன, ஆனால் அழுத்தம் கொடுப்பதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது என இந்தியாவிற்கு தெரியும். பெண்களின் சுதந்திரம் தொடர்பான கேள்விகளும் தற்போதும் உள்ளன. இந்த விவகாரங்கள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்பட முடியும் என்பது தெளிவாகிறது.” என்றார்.
தி இந்து நாளிதழின் ராஜாங்க விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைதர் தனது எக்ஸ் பதிவில், “தற்போது உள்ள மிகப்பெரிய கேள்வி, காபூலில் இந்தியா தூதரகத்தை திறந்தால், இந்தியாவிற்கு தாலிபன்கள் நியமித்த தூதரை அழைக்குமா? என்பது தான். ஆப்கன் குடியரசு கொடி இருந்த இடத்தில் தாலிபன்களின் கொடி பறக்குமா? தூதரக்த்தில் தாலிபன் அதிகாரிகள் வேலை செய்வார்களா? ரஷ்யாவைப் போல இந்தியாவும் தாலிபன் அரசை அங்கீகரிக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு