4
ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து துருப்புகள் பின்வாங்கியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் அந்நாட்டில் பணியாற்றிய இங்கிலாந்து வீரர்களை மனதார பாராட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் போரில் 457 இங்கிலாந்து வீரர்கள் உயிரிழந்ததுடன், பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த பின்னணியில், இங்கிலாந்து வீரர்கள் “அனைத்து வீரர்களிலும் மிகச் சிறந்தவர்கள்” என ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஐக்கிய இராச்சியத்தின் மகத்தான மற்றும் மிகவும் துணிச்சலான வீரர்கள் எப்போதும் அமெரிக்காவுடன் இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையிலான உறவு “ஒருபோதும் உடைக்க முடியாத அளவுக்கு வலுவான பிணைப்பு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வலியுறுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.