பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தான் தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் ஆறு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, தாலிபன் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுதான்.
உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா காபூலில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறக்கும் என்று அறிவித்தது.
முத்தக்கியின் இந்தியப் பயணத்தின் நடுவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் இரு நாடுகளும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தன.
இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உடனடியாகச் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக கத்தார் கூறியது.
கடந்த வாரத்தின் இந்த நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
முத்தக்கியின் இந்தியப் பயணம் ஏன் இவ்வளவு முக்கியமானது? இதை பாகிஸ்தான் எப்படிப் பார்க்கிறது? இது இந்தியாவின் கொள்கைகளில் மாற்றத்தின் அறிகுறியா? மேலும், இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலம் தாலிபன் எதை அடைய விரும்புகிறது?
‘தி லென்ஸ்’ நிகழ்ச்சியில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் இயக்குநர் முகேஷ் ஷர்மா இந்தக் கேள்விகள் குறித்து விவாதித்தார்.
இந்த விவாதத்தில் இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரி விவேக் காட்ஜு, மூத்த பத்திரிகையாளர் நிரூபமா சுப்ரமணியன் மற்றும் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத் ஆகியோர் பங்கேற்றனர்.
1990களின் பிற்பகுதியிலும், தற்போதைய நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளிலும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவின் உறவுகளில் குறிப்பிடத்தக்க கசப்புணர்வு ஏற்பட்டது.
இந்தியாவின் அணுகுமுறை மிகவும் கடுமையாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தாலிபன் அடிப்படைவாதத்தின் சின்னமாகவே பார்க்கப்பட்டது.
இந்தியா தாலிபன் நிர்வாகத்துடன் உறவுகளைப் பேணவில்லை. மேலும், அமெரிக்க தலைமையிலான படைகள் தாலிபன்களை காபூலில் இருந்து வெளியேற்றியபோது, இந்தியா தனது தூதரகத்தை அங்கு மீண்டும் திறந்தது.
2021 ஆம் ஆண்டில் தாலிபன் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இந்தியா மீண்டும் தூதரகத்தை மூடியது.
இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகள், முந்தைய தாலிபன் ஆட்சியின்போது இருந்ததைப் போல இல்லை என்றாலும் இந்தியா தனது கதவுகளைத் திறந்து வைத்து, தொடர்பைப் பேணி வந்தது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் உறவுகள்
மாறிவரும் இந்தக் காட்சிகளுக்கு மத்தியில், தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் இந்தியப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் பிபிசியின் ‘தி லென்ஸ்’ நிகழ்ச்சியில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரி விவேக் காட்ஜு, “இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேம்படுவது அவசியம், இது இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்” என்கிறார்.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மிகவும் பழமையான கலாசார உறவுகள் உள்ளன, அதை இந்தியாவால் விட்டுவிட முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் நிரூபமா சுப்ரமணியன்.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய தாலிபன் நிர்வாகத்துடன் உறவுகளை ஏற்படுத்துவது இந்தியாவின் சரியான முடிவு என்று நிரூபமா சுப்ரமணியன் நம்புகிறார்.
இந்தியாவின் கொள்கை மாற்றம் ஏன்?
பட மூலாதாரம், Getty Images
தாலிபன் வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம், தாலிபன் மீதான இந்தியாவின் இதுவரை இருந்த கொள்கையில் ஏதேனும் மாற்றத்தைக் காட்டுகிறதா?
இந்தக் கேள்விக்கு, இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரி விவேக் காட்ஜு பதிலளிக்கையில், “இப்போது இந்தியாவுக்குத் தாலிபனுடன் வெளிப்படையாகத் தொடர்புகொள்ள எந்தத் தயக்கமும் இல்லை. காபூலில் இருந்த இந்திய தூதரகத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை ஒரு நல்ல நடவடிக்கையாகும். தாலிபன் இதை நீண்ட நாட்களாக விரும்பியது. இதன் மூலம் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும்” என்றார்.
ஆனால், உறவுகளை மேம்படுத்துவதற்கான அல்லது மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு, பெண்கள் மற்றும் மனித உரிமைகள் மீதான தாலிபன் நிர்வாகத்தின் அணுகுமுறை உள்ளிட்டவற்றுக்கு சில தரப்புகளிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்த விவகாரங்களில் இந்தியா வரலாற்று ரீதியாக எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளது. அப்படியானால், இந்தியாவின் அணுகுமுறையில் ஏதேனும் முரண்பாடு உள்ளதா?
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த விவேக் காட்ஜு, பாலினப் பிரச்னைகள் மற்றும் மனித உரிமைகள் பிரச்னைகளில் இந்தியாவின் அரசியலமைப்பு அங்கீகாரத்துக்கு முரணான அணுகுமுறைகளைக் கொண்ட பல நாடுகள் உள்ளன என்றார்.
காட்ஜுவின் கூற்றுப்படி, இரு நாடுகளின் உறவுகளுக்கு மனித உரிமைகளை ஓர் அளவுகோலாக வைப்பது சரியல்ல.
அவர், “தாலிபனின் நம்பிக்கைகள் இந்தியாவிலிருந்து மிகவும் வேறுபட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெவ்வேறு கண்ணோட்டங்களின் அடிப்படையில் கதவுகளை அடைப்பது சாத்தியமில்லை. ஏனெனில், ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்குப் பெரிய நலன்கள் உள்ளன. மேலும், இந்த நலன்களில் உத்தி ரீதியான நலன்களும் அடங்கும். அவற்றைப் பாதுகாப்பது அவசியம்” என்கிறார்.
ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடைய இந்தியாவின் நலன்களைப் பற்றி நிரூபமா சுப்ரமணியன் கூறுகையில், “இந்தியாவின் நலன்கள் தெளிவாக உள்ளன, ஒன்று பாதுகாப்பு தொடர்பான நலன். மற்றொன்று, இந்தியா மேலும் பல பகுதிகளை சென்றடைய ஒரு வழிமுறையாகவும் ஆப்கானிஸ்தான் உள்ளது,” என்கிறார்.
“இதில் ஒரு சிரமம் என்னவென்றால், இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நிலப் பாதையை பாகிஸ்தான் மூடிவிடுகிறது. நேரடி நிலத் தொடர்பு இல்லாததால் அது பிரச்னையை உருவாக்குகிறது” என்று அவர் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம் மிகவும் அதிகம் என்பதால், இந்தியா அதை அணுகுவதை உறுதிப்படுத்த விரும்புகிறது என்று நிரூபமா சுப்ரமணியன் கூறுகிறார்.
முத்தக்கியின் இந்தியப் பயணம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட தாலிபனுக்கு மிகவும் முக்கியமானது என்று நிரூபமா சுப்ரமணியன் நம்புகிறார்.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் உலகளாவிய சக்தியுடன் இணைவது, தாலிபன் சர்வதேச சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறுகிறார். இரண்டாவதாக, இந்தச் சுற்றுப்பயணம் தாலிபன் தரப்பிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது என்று அவர் கருதுகிறார்.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையைத் தான் தீர்மானிக்கும் என்று பாகிஸ்தான் நினைக்கக் கூடாது என்பதற்காக, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவின் உறவுகள் முக்கியம் என்று விவேக் காட்ஜு மற்றும் நிரூபமா சுப்ரமணியன் இருவரும் நம்புகின்றனர்.
முத்தக்கியின் இந்தியப் பயணத்தால் பாகிஸ்தானில் ஏன் கோபம்?
பட மூலாதாரம், Getty Images
முத்தக்கியின் இந்தியப் பயணம் குறித்து பாகிஸ்தானில் நேர்மறையான எதிர்வினை இல்லை என்று இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத் கூறுகிறார்.
இதற்கு ஒரு பெரிய காரணம், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துள்ளதே என்கிறார் அவர்.
“2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் தாலிபன் காபூலின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியபோது, பாகிஸ்தானில் ஒரு பெரிய கொண்டாட்டம் இருந்தது. பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கொண்டாடினர், ஆனால் பாகிஸ்தான் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை” என்று ஃபர்ஹத் ஜாவேத் கூறுகிறார்.
அதற்குப் பிந்தைய நான்கு ஆண்டுகளில், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தன.
தஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தானுக்கு (TTP) ஆப்கானிஸ்தான் அரசாங்கம் ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
பாகிஸ்தானில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களில் TTP இன் தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. TTP ஐ ஒழிக்கவும், அதன் தலைவர்களைப் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கவும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது,” என்கிறார் ஃபர்ஹத் ஜாவேத்.
அதே சமயம், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது என்று ஃபர்ஹத் கூறுகிறார்.
“தாலிபன் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இஸ்லாமாபாத்தில் ஒரு பிராந்திய மாநாடு நடைபெற்றது. அதில் ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசாங்கங்களை ஆதரித்தவர்களும் கலந்து கொண்டனர் என்கிற அளவுக்கு நிலை மாறியிருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
தாலிபனும் இந்தியாவும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவே பார்க்கப்பட்டனர். எனவே, இருவரும் நெருங்கி வருவார்கள் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை என்று ஃபர்ஹத் ஜாவேத் கூறுகிறார்.
முத்தக்கியின் இந்தியப் பயணம் குறித்து பாகிஸ்தானில் கோபம் இருப்பதாகவும், இந்த உறவு மேலும் எவ்வளவு வளரும் என்ற கவலை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு இடையிலான சமீபத்திய மோதல்
சமீப நாட்களாக, அமீர் கான் முத்தக்கி இந்தியாவில் இருந்தபோது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் ஒரு ராணுவ மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறினர்.
“பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது இது அனைத்தும் நடந்தது. அதில் பெரிய வெற்றி எதுவும் இல்லை என்றாலும், பேச்சுவார்த்தைக்கான ஒரு கதவு திறந்திருந்தது. இப்போது அந்தக் கதவு மூடப்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது,” என்று இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத் கூறினார்.
“பாதுகாப்பு விவகாரங்களில் உள்ள பல நிபுணர்களும் ஆய்வாளர்களும் இது ஒரு அநாவசியமான மோதல் என்றும், காபூலின் உள்ளே சென்று ஆப்கானிஸ்தான் பகுதி மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இது பாகிஸ்தான் தரப்பால் தொடங்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடக்கிறது என்று ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கமும் இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கிறது” என்று அவர் கூறுகிறார்.
இரு தரப்பிலும் கோபம் உள்ளது என்று ஃபர்ஹத் ஜாவேத் கூறுகிறார். இருப்பினும், பாகிஸ்தான் இந்த நேரத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நிலைத்தன்மையுடன் இல்லை. எனவே, ஆப்கானிஸ்தானுடனான எல்லை மற்றும் இந்தியாவுடனான எல்லை என இரண்டு தரப்பிலும் பதற்றத்தைச் சமாளிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தில் உள்ள பலரும் ஆப்கானிஸ்தானுடனான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதற்கும் இதுதான் காரணம் என்பது ஃபர்ஹத் ஜாவேத்தின் கருத்து.
பாகிஸ்தான் என்ன விரும்புகிறது?
“ஆப்கானிஸ்தானில் எந்த வகையான அரசாங்கம் இருந்தாலும், அதன் வெளியுறவுக் கொள்கையில், குறிப்பாக இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தானின் கொள்கையில், தனது தாக்கம் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எப்போதும் விரும்புகிறது” என்று விவேக் காட்ஜு கூறுகிறார்.
“2021 இல் தங்களால்தான் தாலிபனுக்கு வெற்றி கிடைத்தது என்றும் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசைத் தோற்கடித்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் கட்டுப்பாட்டை நிலைநாட்டியது போன்றும் ஒரு உணர்வு பாகிஸ்தானில் இருந்தது என்று நான் நினைக்கிறேன்.”
ஆயினும், ஆப்கானிஸ்தானில் இருந்த எந்த அரசாங்கமும் அதன் கொள்கைகளில் பாகிஸ்தானின் தலையீட்டை எப்போதும் நிராகரித்துள்ளது என்று காட்ஜு கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு