படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டத்திலிருந்து புத்தகங்களை நீக்குமாறு கூறப்பட்டுள்ளன.கட்டுரை தகவல்
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களில் இருந்து பெண்கள் எழுதிய புத்தகங்களை தாலிபன் அரசு நீக்கியுள்ளது. மனித உரிமைகள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை கற்பிப்பதும் புதிய தடையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 680 புத்தகங்கள் “ஷரியா மற்றும் தாலிபன் கொள்கைக்கு எதிரானவை” என்று கூறி நீக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 140 புத்தகங்கள் பெண்கள் எழுதியவையாகும். “வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு” (“Safety in the Chemical Laboratory”) போன்ற தலைப்புகளும் அதில் அடங்கும்.
மேலும் பல்கலைக்கழகங்களில் 18 பாடங்களை கற்பிக்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவை “ஷரியாவின் கொள்கைகளுக்கும் தாலிபன் அமைப்பின் கொள்கைக்கும் முரண்படுகின்றன” என்று ஒரு தாலிபன் அதிகாரி கூறினார்.
தாலிபன்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். அந்த வரிசையில், இந்த ஆணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த வாரம், தாலிபன் உச்சத் தலைவர் உத்தரவின் பேரில் குறைந்தது 10 மாகாணங்களில் ஃபைபர்-ஆப்டிக் இணைய சேவை தடை செய்யப்பட்டது. ‘ஒழுக்கக்கேட்டைத் தடுப்பதற்காக’ இவ்வாறு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விதிகள் வாழ்க்கையின் பல பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதனால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், 2024 இறுதியில் மகப்பேறு மருத்துவப் பாடங்கள் மூடப்பட்டதால், மேலதிக பயிற்சி பெறும் அவர்களின் கடைசி வாய்ப்பும் முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது பல்கலைக்கழகங்களில் பெண்களைப் பற்றிய பாடங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட 18 பாடங்களில் ஆறு பாடங்கள் பெண்களைப் பற்றியவை. அவற்றில் பாலினம் மற்றும் மேம்பாடு, தகவல் தொடர்புகளில் பெண்களின் பங்கு, பெண்கள் சமூகவியல் ஆகியவை அடங்கும்.
ஆப்கானிஸ்தான் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த தங்கள் விளக்கத்தின்படி பெண்களின் உரிமைகளை மதிக்கிறோம் என்று தாலிபன் அரசு கூறியுள்ளது.
‘கல்வியில் ஏற்படும் வெற்றிடம்’
புத்தகங்களை மதிப்பாய்வு செய்யும் குழுவின் உறுப்பினர் ஒருவர், பெண்கள் எழுதிய புத்தகங்கள் மீதான தடையை உறுதிப்படுத்தினார். “பெண்கள் எழுதிய எந்தப் புத்தகமும் கற்பிக்க அனுமதிக்கப்படாது” என்று அவர் பிபிசி ஆப்கானிடம் தெரிவித்தார்.
தாலிபன்கள் ஆட்சிக்கு திரும்புவதற்கு முன் நீதித்துறையின் முன்னாள் துணை அமைச்சராக இருந்த ஜாகியா அடேலி, தடைசெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் தனது புத்தகங்களையும் கண்டுள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்து அவர் ஆச்சரியப்படவில்லை.
“தாலிபன்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகளைப் பார்த்தால், அவர்கள் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வது பெரிய ஆச்சரியமல்ல,” என்கிறார் ஜாகியா அடேலி.
“பெண்களை வெறுக்கும் தாலிபனின் மனநிலை மற்றும் கொள்கைகளை கருத்தில் கொண்டால், பெண்களே படிக்க அனுமதிக்கப்படாத சூழலில், அவர்களின் சிந்தனைகள், கருத்துகள், எழுத்துகள் அடக்கப்படுவது ஆச்சரியமல்ல,” என்றும் அவர் கூறினார்.
பிபிசி ஆப்கானால் காணப்பட்ட புதிய வழிகாட்டுதல்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்டன.
தாலிபன் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சக துணை கல்வி இயக்குநர் ஜியாவுர் ரஹ்மான் ஆரியுபி பல்கலைக்கழகங்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்த முடிவுகள் “மத அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள்” கொண்ட குழுவால் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் எழுதிய புத்தகங்களைத் தவிர, இரானிய எழுத்தாளர்கள் அல்லது வெளியீட்டாளர்களின் புத்தகங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. “ஆப்கானிய பாடத்திட்டத்தில் இரானிய உள்ளடக்கம் ஊடுருவுவதைத் தடுக்க” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புத்தக மதிப்பாய்வு குழுவின் ஒரு உறுப்பினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்ட 50 பக்க பட்டியலில் 679 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 310 தலைப்புகள் இரானிய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை அல்லது இரானில் வெளியிடப்பட்டவை.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், இந்த வெற்றிடத்தை நிரப்புவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அஞ்சுவதாகக் கூறினார்.
“இரானிய எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் புத்தகங்கள் ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களுக்கும் உலகளாவிய கல்வி சமூகத்திற்கும் இடையே முக்கிய இணைப்பாக இருந்தன. அவற்றை நீக்குவது உயர்கல்வியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், தாலிபன் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, பாடப்புத்தக அத்தியாயங்களை தாங்களே தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக காபூல் பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர் கூறினார்.
ஆனால், அவை உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.
இதுகுறித்து கருத்து கேட்க பிபிசி தாலிபனின் கல்வி அமைச்சகத்தை அணுகியுள்ளது.