சென்னை: தீபாவளியையொட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கல்வி, பணி நிமித்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்போர், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அக்.20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய 2 நாட்களும் வார இறுதி விடுமுறை என்பதால், அக்.17-ம் தேதியே ஊர்களுக்குச் செல்ல வெளியூர்வாசிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தொலைதூரம் செல்பவர் களில் பெரும்பாலானோர் தேர்வு செய்வது ரயில் பயணத்தைத்தான். இதற்கு அடுத்தபடியாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் அதிநவீன சொகுசு பேருந்துகளை நாடுவர். இவற்றுக்கான முன்பதிவு நிறைவடைந்த நிலையில், ஆம்னி பேருந்துகளையே நாட வேண்டியுள்ளது.
அதே நேரம், இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னிபேருந்துகளின் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுவது தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது தீபாவளி சமயத்தில், சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கே அதிகபட்சமாக ரூ.4,850 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சண்முகம் என்பவர் கூறியதாவது:நான் பணியாற்றுவது தனியார் நிறுவனம் என்பதால் 4 நாட்களுக்கு முன்புதான் விடுப்பு உறுதியாகும். இந்தச் சூழலில், ஆம்னி பேருந்து கட்டணத்தை பார்க்கும்போது, ஊருக்கே செல்ல வேண்டாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
குடும்பத்துடன் நெல்லை செல்ல குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் வரை செலவாகும். இதேபோல் திரும்பி வருவதற்கு மேலும் ரூ.6 ஆயிரம் என்றால் எனது மாத ஊதியத்தில் 30 சதவீதத்துக்கும் மேல் பயணத்துக்கே செலவழிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு பண்டிகையின்போது இந்த நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டணத்தை கட்டுக்குள் வைக்க உரிய அறிவுறுத்தல் களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இழப்பை ஈடு செய்ய… இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘பண்டிகை நாட்களில்தான் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, சாதாரண நாட்களில் ஏற்படும் இழப்பை இந்த நாட்களில் தான் ஈடுசெய்ய முடியும். அதேநேரம், உரிமையாளர்கள் ஒருசேர நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக சங்க உறுப்பினர்கள் யாரும் வசூலிப்பதில்லை.
அவ்வாறு வசூலிப்பதை அறிந்தால் நாங்களே போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து விடுவோம்’’ என்றனர். போக்குவரத்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா அழைப்பு மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை அமைத்து ஆம்னி பேருந்து இயக்கத்தை கண் காணிக்கிறோம். அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னையில் இருந்து மட்டும் 5,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்கலாம்’’ என்றனர்.