படக்குறிப்பு, 2015, டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம்.கட்டுரை தகவல்
எழுதியவர், சிராஜ்
பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு ‘சுனாமி’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை 2004, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்ததைப் போல, ‘செம்பராக்கம் ஏரியின்’ முக்கியத்துவத்தை 2015, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்தது, குறிப்பாக சென்னைவாசிகளுக்கு.
சென்னை அதற்கு முன்பு, 1943, 1978, 2005 ஆகிய ஆண்டுகளில் கடுமையான மழை வெள்ளத்தை பார்த்திருந்தாலும் கூட, 2015 வெள்ளம் சென்னைவாசிகள் பலருக்கும் கனமழை குறித்த ஒரு பயத்தை உருவாக்கிவிட்டது என்றே கூறலாம்.
ஆனால் கனமழை என்றில்லாமல், ஒரு சிறு தூறலுக்கு கூட பயப்படுவது பற்றி கேள்விப்பட்டதுண்டா? மழை பெய்வதைக் கண்டு அல்லது அதை நினைத்து ஏற்படும் அதீத பயத்திற்கு ‘ஆம்ப்ரோஃபோபியா’ (Ombrophobia) எனப் பெயர். அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆஸ்ட்ராஃபோபியா என்பது இடி, மின்னல் குறித்த பயம்
இயற்கைச் சூழல் குறித்த பயங்கள்
அமெரிக்க மனநல சங்கம், ஃபோபியா (Phobia) என்பதை ‘ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சூழ்நிலையைப் பற்றிய பயம் அல்லது பதற்றம்’ என்று வரையறுக்கிறது.
பலவகையான ஃபோபியாக்கள் உள்ளன, அதில் இயற்கைச் சூழல் குறித்த பயங்கள் அல்லது ஃபோபியாக்கள் பொதுவான ஒன்றாக உள்ளன (தோராயமாக 9% முதல் 12% வரை) என்றும், 10% அமெரிக்கர்களுக்கு மோசமான வானிலை குறித்த அதீத பயம் உள்ளது என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
இடி, மின்னல் குறித்த பயம் (ஆஸ்ட்ராஃபோபியா),
மேகங்கள் குறித்த பயம் (நெபோஃபோபியா),
சூறாவளி (லிலாப்சோபோபியா),
பனி (சியோனோஃபோபியா),
குளிர் (கிரையோஃபோபியா),
காற்று (அன்க்ராஃபோபியா)
மழை குறித்த பயம் (ஆம்ப்ரோஃபோபியா) என இயற்கை மீதான பயங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
இதில், “ஆம்ப்ரோஃபோபியா என்பது மழையைப் பற்றிய அதீத பயம். கனமழை, மோசமான வானிலை முதல் சிறு தூறல் கூட இந்த பயத்தை சிலருக்கு ஏற்படுத்தும்” என அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் மருத்துவ மையத்தின் இணையதளம் விவரிக்கிறது.
ஆம்ப்ரோஃபோபியாவின் அறிகுறிகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘மனிதர்களுக்கு காற்று, நீர், நெருப்பு போன்ற இயற்கைச் சக்திகள் மீதான பயம் எப்போதுமே உள்ளது’
தலைச்சுற்றல்
பதற்றம்
அதிகப்படியான பயம் அல்லது பீதி உணர்வு.
குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு.
அதிகப்படியான வியர்வை
இதயத் துடிப்பு அதிகரிப்பது
உடல் நடுக்கம்.
மூச்சுத் திணறல்.
உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்தல்
ஒளிந்து கொள்ள வேண்டுமென்ற தூண்டுதல்
தூங்க இயலாமை
சாப்பிட இயலாமை
இவை ஆம்ப்ரோஃபோபியா மட்டுமல்லாது, இயற்கைச் சூழல் குறித்த பிற பயங்களுக்கும் பொருந்தும்.
“மனிதர்களுக்கு காற்று, நீர், நெருப்பு போன்ற இயற்கைச் சக்திகள் மீதான பயம் எப்போதுமே உள்ளது. அதுவே மனித பரிணாமத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. நமது முன்னெச்சரிக்கை உணர்வை அதிகரித்துள்ளது. ஆனால், சிலருக்கு மட்டுமே அது அதீத பயமாக மாறுகிறது.” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த மனநல மருத்துவர் சிவ நம்பி.
ஆம்ப்ரோஃபோபியா சில குறிப்பிட்ட நடத்தைகளுக்கு வழிவகுக்கும்,
வெளியே செல்வதைத் தவிர்ப்பது.
மழை பயம் காரணமாக சமூகத்திலிருந்து தனித்து இருப்பது.
செய்தி ஊடகங்களில் வானிலை முன்னறிவிப்பை விடாமல் பார்ப்பது அல்லது வானத்தையே தொடர்ந்து கண்காணிப்பது.
மழை பெய்ய வாய்ப்பு இருந்தால் சில வேலைகளை செய்ய மறுப்பது.
அன்புக்குரியவர்கள் மழையை எதிர்கொள்வது பற்றி அதிகமாக கவலைப்படுவது.
“உதாரணத்திற்கு, 2015 சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதை நேரில் பார்த்த சிலருக்கு மழை, வெள்ளம் குறித்த பயம் இருக்கும். ஒரு இயற்கைப் பேரழிவின்போது கிடைக்கும் தனிப்பட்ட அனுபவங்களைப் பொறுத்து இந்த பய அளவு மாறுபடும்.” என்கிறார் சிவ நம்பி.
அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு (PTSD) போலதான் இதுவும் எனக் குறிப்பிடும் சிவ நம்பி, “அந்தச் சம்பவத்தை விட்டு அவர்களால் மனதளவில் வெளியே வரமுடியாது. அதை ஞாபகப்படுத்தும் எந்தவொரு விஷயத்தையும் அவர்கள் தவிர்க்க முயற்சிப்பார்கள்” என்கிறார்.
அதீத பயம் Vs முன்னெச்சரிக்கை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2023, டிசம்பர் மாதம், மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சென்னை, வடபழனியைச் சேர்ந்த வெங்கடேசன் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிபவர். 2015 சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், இவரையும் இவரது குடும்பத்தையும் கடுமையாகப் பாதித்தது.
“அப்போது சூளைமேட்டில், சொந்த வீட்டில் வசித்து வந்தோம். 2015 டிசம்பர் 1-ஆம் தேதி பெய்த மழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. எங்கள் வீட்டில் தரை தளம் மட்டும்தான். இரவு நேரத்தில் தண்ணீர் புகுந்ததால், கட்டில் மீது ஒரு மேஜையை வைத்து அதில் ஏறி அமர்ந்தோம். தண்ணீரின் அளவு கூட கூட, நாங்கள் அடைந்த பீதியை விவரிக்க முடியாது. எனது அப்பா தான் மிகவும் பயந்துவிட்டார்” என்கிறார் வெங்கடேசன்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒருகட்டத்தில், நாங்கள் மூழ்கிவிடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது. விடியும் வரை அந்த மேஜை மீது அமர்ந்திருந்தோம். பிறகு மீட்புப்படையினர் வந்து எங்களை மீட்டனர். இப்போது நாங்கள் வடபழனிக்கு குடிபெயர்ந்துவிட்டோம். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 5வது தளத்தில் உள்ளோம். ஆனால், அந்தச் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து அப்பாவால் இன்னும் மீள முடியவில்லை.” என்கிறார்.
டிசம்பர் மாதம் வந்தாலே, தனது தந்தை முடிந்தளவு வெளியில் செல்வதைத் தவிர்த்துவிடுவார் எனக் குறிப்பிடும் வெங்கடேசன், “எங்களையும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாமென கூறுவார். தொடர்ந்து மழை குறித்த தொலைக்காட்சி செய்திகளையே பார்ப்பார். அதிலும், 2023 டிசம்பர் மாதத்தில் அவர் பல இரவுகள் தூங்கவில்லை. இப்போதும் இடி சத்தம் கேட்டால் எழுந்துவிடுவார்.” என்று கூறுகிறார்.
2023, டிசம்பர் மாதம், மிக்ஜாம் புயலால் சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல பகுதிகள் நீரில் மூழ்கின, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் வெங்கடேசனின் தந்தைக்கு ஆறு, குளங்கள் குறித்த எந்தப் பயமும் இல்லை என்பதுதான்.
“அப்பாவின் சொந்த ஊர் கும்பகோணம். ஊருக்கு சென்றால் அங்குள்ள ஆறு, குளங்களில் குளிக்க ஆர்வம் காட்டுவார். சென்னையில் மழை என்றால் மட்டும்தான் அதீத முன்னெச்சரிக்கையாக இருப்பார்.” என்று குறிப்பிடுகிறார் வெங்கடேசன்.
வேளச்சேரியைச் சேர்ந்த ரோஹித் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர் 2023இல் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அனுபவம் கொண்டவர்.
“மழை வந்தாலே ஒரு பய உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அதற்காக வேளச்சேரியில் நான் வாங்கியிருக்கும் சொந்த வீட்டை விட்டோ அல்லது சென்னையை விட்டோ செல்ல முடியாது அல்லது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்க முடியாது. கடந்த வருடம் மழை அதிகமானதும் வேளச்சேரி பாலத்தில் கொண்டு போய் காரை நிறுத்தியவர்களில் நானும் ஒருவன். இந்த வருடமும் மழையை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன்” என்று கூறுகிறார் ரோஹித்.
தீர்வு என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா
இது குறித்து விளக்கிய சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் மருத்துவர் பூர்ண சந்திரிகா, “சுனாமி பாதிப்பை எதிர்கொண்ட பின்பும் கூட, பல மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்கிறார்கள் அல்லவா?. அப்படி பலர் ஒரு இயற்கைப் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். மீண்டு வர முடியாதவர்கள் அந்த அதீத பயத்தை தங்கள் சுற்றத்தாருக்கும் கடத்துகிறார்கள், குறிப்பாக தங்கள் பிள்ளைகளுக்கு. ஒருகட்டத்தில் அதுவே அவர்களுக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது. இதனால் அவர்களுக்கு கடல் அல்லது மழையைப் பார்த்தவுடன் பதற்றம் ஏற்படுகிறது.” என்கிறார்.
ஆம்ப்ரோஃபோபியாவால் பாதிப்பை கண்டறிய (Diagnose) அல்லது சிகிச்சையளிக்க பிரத்யேக முறைகள் ஏதும் இல்லை எனக்கூறும் பூர்ண சந்திரிகா, “ஃபோபியா தொடர்பான அறிகுறிகள் ஒருவரிடம் காணப்பட்டால், அது அவரது அன்றாட வாழ்க்கை முறையை அல்லது வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியதாக இருந்தால், ஒரு மனநல மருத்துவரை அணுகலாம். அவர்கள் கவுன்சலிங் மூலம் இதற்கு தீர்வு அளிப்பார்கள்.” என்கிறார்.
ஊடகங்கள் இத்தகைய பயத்தை அதிகரிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன எனக் கூறும் அவர், “மழை தொடர்பான செய்திகளை, காணொளிகளை மீண்டும் மீண்டும் ஊடகங்களில் பார்ப்பதன் மூலம் ஆம்ப்ரோஃபோபியா போன்ற பயங்கள் அதிகரிக்கும். எனவே அவற்றைப் பார்ப்பதை குறைக்க வேண்டும்.” என்கிறார்.
“இயற்கைப் பேரழிவுகள் மூலம் நிகழும் பொருளாதார இழப்புகளை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், அதில் பிழைத்து வருபவர்களின் மனநல ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுவே இதற்கான நீண்டகால தீர்வாக இருக்கும்” என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா.