அந்தக் கொடூரமான அச்ம்பவம் நடக்கும்போது, பெர்னாடேட் ‘பெட்டி’ ஸாபோவின் வயது வெறும் 19 தான்.
ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து மூன்று மாதங்கள் கூட முழுமையடையாத நிலையில், மீண்டும் பாலியல் தொழிலுக்கு வந்த அவர் ஒரு இரவில் கொடூரமான முறையில் அவரது அறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தக் கொலையில் இதுவரை ஒரு குற்றவாளி கூட கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது நெதர்லாந்து காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக இருக்கும் இந்தக் கொலை வழக்கில் துப்பு துலக்க நவீன தொழில்நுட்பத்தை நாடியுள்ளது காவல்துறை.
ஆம்ஸ்டர்டாமில் பாலியல் தொழில் நடைபெறும் பகுதி ஒன்றில் ஸாபோவின் ‘ஹோலோகிராம்’ (முப்பரிமாண ஒளிப்படம்) நிழலாடுகிறது.
சாயம்போன டெனிம் காலாடை, சிறுத்தைப்புலி தோல் வடிவத்தில் அச்சிடப்பட்ட மேலாடை, வயிற்றில் துவங்கி மார்பகம் வரை வரையப்பட்டிருக்கும் டாட்டூ என்று கணினியால் உருவாக்கப்பட்ட ஸாபோவின் உருவம் அங்கே உள்ள ஜன்னலில் பிரதிபலிக்கிறது.
யார் அந்த இளம்பெண்?
சாலையில் நின்று பார்த்தால், ஸாபோ அந்த ஜன்னலில் ‘காப்பாற்றுங்கள்’ என்று எழுதுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஹோலோகிராம்.
ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஸாபோ 2009-ஆம் ஆண்டு, ஒரு குழந்தைக்குத் தாயான ஒரு சில மாதங்களிலேயே கொல்லப்பட்டவர்.
15 ஆண்டுகளாக அதில் துப்பு துலக்காத காவல்துறை முதன்முறையாக தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளது.
அவரைப் போன்று நூற்றுக் கணக்கான பெண்கள் பல சவால்களுக்கு மத்தியில் அங்கே பாலியல் தொழில் செய்து கொண்டிருக்க, ஸாபோ-வின் ஹோலோகிராம் அங்கிருக்கும் ஒரு அறையின் ஜன்னல் வழியே பொதுமக்களின் பார்வைக்குப்படும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.
துப்புதுலக்கப்படாத மரணம் குறித்த கவனத்தை ஈர்க்கவும், அது தொடர்பான ஞாபகத்தைத் தூண்டவும் இந்த ஹோலோகிராம் உதவும் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஒரு 19 வயது பெண்ணின் வாழ்க்கை இப்படி ஒரு மோசமான சூழலில் முடிவுக்கு வந்தது என்ற வரலாற்றை மாற்றும் முனைப்போடு பணியாற்றுகிறார் விசாரணை அதிகாரி அன்னே ரெய்ஹெர் ஹீம்ஸ்கெர்க். ஆனால் ஸாபோவை கொலை செய்த நபரோ 15 ஆண்டுகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிக்கிறார்.
ஸாபோவின் வாழ்க்கையும் பல சவால்களைக் கொண்டது. போராட்டம் மற்றும் தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்திருக்கிறார் என்கிறார் விசாரணை அதிகாரி.
சவாலான வாழ்க்கை வாழ்ந்த ஸாபோ
தன்னுடைய 18 வயதில் ஆம்ஸ்டர்டாம் வந்த ஸாபோ, கர்ப்படமடைந்தார். அப்போதும் தன்னுடைய பாலியல் தொழிலைச் செய்து பிழைத்து வந்திருக்கிறார். குழந்தை பிறந்தும் கூட, கொஞ்ச காலத்திற்குள் மீண்டும் அந்தப் பணிக்கு வந்துள்ளார் அவர்.
2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாலை, அவருடன் பாலியல் தொழில் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்காள், ஸாபோவின் அறையில் இருந்து அவரது வழக்கமான இசை கேட்கவில்லை என்பதை உணர்ந்து, இடைவேளையின் போது அவரைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
ப்ளாஸ்டிக் விரிப்பால் மூடப்பட்டிருந்த ஒரு படுக்கை, ஒரு மேஜை, ஒரு சிங்-கைக் கொண்டிருந்த அவரது சிறிய அறையில், ஸாபோவைப் பிணமாக பார்த்துள்ளனர் அந்த பெண்கள்.
மகன் பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், கத்தியால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஸாபோவின் மூன்று மாதக் கைக்குழந்தை பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டது. தன்னுடைய அம்மா எப்படிப்பட்டவர் என்பதை அறிய அந்தக் குழந்தைக்கு வாய்ப்பே இல்லாமல் போனது. இந்த ஒரு காரணம் தான், இந்தக் கொலையை செய்தவரைத் தேட காவல்துறையினர்பைத் தூண்டுகிறது.
விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டாலும் கூட, அந்தக் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அனைத்து சாட்சியங்களையும் விசாரணை செய்தாகிவிட்டது. ஆனாலும் இதுவரை இந்தக் கொலையில் துப்பு துலங்கவில்லை.
ரூ.27 லட்சம் சன்மானம்
சிவப்பு நியான் ஒளிர்விளக்குக்குப் பின்னால் அறைகுறை ஆடையுடன் இருக்கும் ஹோலோகிராம் பெண்ணைப் பார்க்கும் நபர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டினர்கள்.
காவல்துறையினரும் இந்த கொலைக்குற்றவாளி ஒரு வெளிநாட்டினராக இருக்கக் கூடும் என்று நம்புகின்றனர்.
இந்தக் கொலை நடந்த காலத்தில் ஆம்ஸ்டர்டாம் வந்த வெளிநாட்டினர் அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் அதை நினைவுகூர்ந்து தெரியப்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளது காவல்துறை. மேலும், தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானமாக 30 ஆயிரம் யூரோக்களை வழங்கவும் முன்வந்துள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சம் ரூபாய்.)
இந்தச் சூழலில், சிவப்பு விளக்குப் பகுதியாக அறியப்பட்ட இந்தப் பகுதியை நகரத்திற்கு வெளியே மாற்றத் திட்டமிடப்பட்டு வருவதாகச் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் செயல்பாட்டில் இருந்தும், பாலியல் தொழிலாளர்கள் எத்தகைய பாதிப்பைச் சந்திக்கின்றனர் என்பதற்குச் சாட்சியமாக ஸாபோவின் ஹோலோகிராம் வடிவம் அங்கே இரவு நேரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
பாலியல் தொழிலாளிகள், சிவப்பு விளக்குப் பகுதியை நகரத்திற்கு வெளியே மாற்றி அமைப்பது அவர்களை மேலும் ஆபத்தான சூழலுக்குள் தள்ளிவிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
நெதர்லாந்தின் பரப்பான நகரப் பகுதியில், இரவு நேரத்தில் எந்த ஒரு சாட்சியமும் இன்றி ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு ஒருவர் தப்பித்துச் செல்லக்கூடும் என்பது காவல்துறைக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில் இந்தப் பழமையான சிவப்பு விளக்குப் பகுதியில் தங்கிப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண்ணின் ஹோலோகிராம் அங்கு ஒளிர்வது, அந்தக் கொலைவழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை பார்ப்பவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.