பூந்தமல்லி: பூந்தமல்லி தனி கிளை சிறையில் கஞ்சா, மொபைல் போன்கள் பறிமுதல் சம்பவம் எதிரொலியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தனி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சிறைத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில், 20 கிராம் கஞ்சா, 5 மொபைல் போன்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, பூந்தமல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் சம்பவம் தொடர்பாக துணை ஜெயிலர் உட்பட 5 பேரை சிறைத்துறை உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.
இந்நிலையில், இச்சம்பத்தின் எதிரொலியாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஷ்வத்தாமன் உட்பட 23 பேர், மற்ற வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் என, மொத்தம் 38 பேர் நேற்று நள்ளிரவில், பலத்த போலீஸ் பாதுகாப்பு புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து, பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சிறைக் கைதிகளை பார்க்க வரும் அவர்களின் உறவினர்கள் தீவிர சோதனைக்கு பிறகே சிறை வளாகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.