• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் | Armstrong Murder Case transferred to CBI: Madras HC

Byadmin

Sep 24, 2025


சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 6 மாதங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செம்பியம் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என, முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரனுடன் நெருக்கமாக இருந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வராமல் அவசரமாக காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலையிட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறை தரப்பில், “27 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்துள்ளதாகவும், விசாரணை நிலுவையில் உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கூடாது.” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (செப்.23) தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதி, 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறித்தினார்.



By admin