• Sun. Mar 30th, 2025

24×7 Live News

Apdin News

ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரி மனு: காவல் துறை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு | Petition seeking permission to Hiking to Armstrong Memorial: HC orders police to consider

Byadmin

Mar 27, 2025


சென்னை: பொத்தூரில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க ஆவடி காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் தாக்கல் செய்திருந்த மனுவில், “சமூகத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் முன்னேற்றம், கல்விக்காக பாடுபட்ட முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்காக கீழ்ப்பாக்கத்தில் இருந்து அவரது நினைவிடம் வரை நடைபயணம் மேற்கொள்ள வரும் மார்ச் 30 அல்லது ஏப்.6 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஆம்ஸ்ட்ராங் மூலமாக சட்டம் படித்த வழக்கறிஞர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவப்படம் மற்றும் பேனாவுடன் கீழ்ப்பாக்கத்தில் இருந்து பொத்தூர் வரை நடைபயணம் மேற்கொள்ள முறையாக அனுமதி கோரியும், போலீஸார் அனுமதியளிக்கவில்லை,” என வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கோபிநாத், “மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள், இறந்த நாள் என எந்த நிகழ்வுகளும் இல்லாமல் திடீரென இந்த நடைபயணத்துக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் 4 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளின் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்,” என்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக ஆவடி காவல் ஆணையர் 4 வார காலத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.



By admin