16
இங்கிலாந்தைக் கடுமையாக தாக்கிய கோரெட்டி புயலின் (Storm Goretti) காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது குடிநீர் விநியோகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்ட சேதங்களால் பல பகுதிகளில் குடிநீர் முற்றாக துண்டிக்கப்பட்டு, மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சசெக்ஸ் மற்றும் கென்ட் பகுதிகளில் சுமார் 21,000 வீடுகளுக்கு தண்ணீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை முழுமையாக சீரடைய குறைந்தது செவ்வாய்க்கிழமை வரை காலம் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கென்டில் அமைந்துள்ள Hollingbourne கிராமத்தில் மட்டும் சுமார் 4,500 வீடுகளுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, குடிநீர் போத்தல்களைப் பெற மக்கள் தங்கள் வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாட்டில் தண்ணீர் விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் தண்ணீர் பெறுவதற்காக வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கான மாற்று விநியோக ஏற்பாடுகள் போதுமான அளவில் செய்யப்படவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. தண்ணீர் இன்றி அவர்கள் கடுமையான அவதிகளை அனுபவித்து வருவதாக சமூக அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
மேலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கென்ட் மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் உள்ள பல பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன. East Grinstead நகரில் உள்ள பொது நூலகங்களும் செயல்படவில்லை.

