• Fri. Apr 18th, 2025

24×7 Live News

Apdin News

ஆயிரம் விளக்கு மெட்ரோ நுழைவாயிலை மாற்றக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை | HC orders interim stay on Thousand Lights Metro station entrance case

Byadmin

Apr 15, 2025


சென்னை: ஆயிரம் விளக்கு மெட்ரோ நுழைவாயிலை யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன பகுதிக்கு மாற்றக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை – ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலையில் பழமையான ஸ்ரீ ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்கள் உள்ளன. சென்னை மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்காக, கோயிலின் ராஜகோபுரத்தை இடிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையைச் சேர்ந்த ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் தலைவரான பி.ஆர்.ரமணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலுக்காக கோயில் ராஜகோபுரத்தை இடிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தார். அதன்படி இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலை கோயில் கோபுரத்தை இடிக்காமல் அருகில் உள்ள யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 837 சதுர மீட்டர் பரப்பு கொண்ட காலியிடத்தை கையகப்படுத்தி அங்கு மாற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இது தொடர்பாக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அந்த நோட்டீஸை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஆயிரம் விளக்கு மெட்ரோ நுழைவாயிலை மாற்றும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அந்த நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஆலயம் காப்போம் கூட்டமைப்பு மற்றும் அறநிலையத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலயம் காப்போம் கூட்டமைப்பின் சார்பில், “ஆயிரம் விளக்கு பகுதி மெட்ரோ நுழைவு வாயில் பகுதிக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முன்பாக உள்ள காலியிடத்தை கையகப்படுத்தவே நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கில் 4 வார காலங்களில் பதிலளிக்க யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.



By admin