• Tue. Mar 4th, 2025

24×7 Live News

Apdin News

ஆரையம்பதியில் வாள்வெட்டுக்கு எதிராகக் கிளர்ந்த மக்கள்

Byadmin

Mar 4, 2025


மட்டக்களப்பு ஆரையம்பதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுக் கும்பலை அப்பிரதேசத்தில் இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தியும் காத்தான்குடி பொலிஸாரின் பக்கசார்பான செயற்பாட்டை கண்டித்தும் வாள்வெட்டால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் நீதி கோரியும் ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை (03) காலை 9 மணியளவில் பொதுமக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்குச் சென்று மகஜர் ஒன்றை கையளித்தனர்.

கடந்த மாதம் 20ஆம் திகதி இரவு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட குழு வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

பின்னர், அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், வாள்வெட்டுடன்  தொடர்புடைய மேலும் இருவரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பொலிஸார் செயற்பட்டுவருவதாகவும் இதனால் பிரதேசத்தில் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டி, இந்த வாள்வெட்டுக் கும்பலை பிரதேசத்தில் இல்லாதொழிக்குமாறு கோரி இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இன்று காலை 9 மணியளவில் மண்முனை மேற்கு ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்னாள் பொதுமக்கள் ஒன்றுகூடினர்.

இதன்போது “வாள்வெட்டுக் கும்பலை பிரதேசத்தில் இருந்து இல்லாமல் ஒழி”, “தாக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடு”, “வன்முறை சூத்திரதாரிகளை சிறையில் அடை”, “இளைஞர்களை கைகூலியாக்குபவர்களை கண்டுபிடி” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை  ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து, ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து பஸ்ஸில் மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்கு மாகாண பிரதி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக சென்று, அவருக்கான மகஜரை பொலிஸ் அத்தியட்சகரிடம் கைளித்தனர்.

இதன்போது  அவர் குறித்த சம்பவத்தில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பக்கசார்பாக செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறும் பின்னர் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவர் உறுதியளித்த பின்னரே அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் விலகிச் சென்றனர்.

The post ஆரையம்பதியில் வாள்வெட்டுக்கு எதிராகக் கிளர்ந்த மக்கள் appeared first on Vanakkam London.

By admin