• Sat. Jan 11th, 2025

24×7 Live News

Apdin News

“ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான்” – முத்தரசன் கண்டனம் | CPI state secretary Mutharasan condemns Seeman for his degrading speech about Peritar

Byadmin

Jan 11, 2025


சென்னை: “ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியாரையும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து, மூடப்பழக்க வழக்கங்களுக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபடும் சீமானின் தரம் தாழ்ந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை. மண்ணின் விடுதலைக்காக தனது சொத்தை விற்றவர் வஉசி. ஆனால், சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார்.” எனப் பேசியிருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “பகுத்தறிவு இயக்கத் தலைவர் பெரியார் ஈவெராவை, நாம் தமிழர் கட்சி சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி அவமதித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த 08.01.2025 ஆம் தேதி ஊடக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தனிப் பெரும் தலைவர் பெரியார் ஈவெரா மீது எழுத முடியாத, திரும்பவும் எடுத்துச் சொல்ல முடியாத ஆபாச குப்பைகளை அள்ளிக் கொட்டி இழிவுபடுத்தியுள்ளார்.

இது ஏதோ முதல்முறை அல்ல, தமிழ் மொழிக்கும், தமிழர் நலனுக்கும் வாழ்நாள் முழுவதும் இடைவிடாது இயங்கி வந்த பெரியார் ஈவெரா, சமூக மேலாதிக்க சக்திகளும், புல்லுருவித்தன்மையில் உருவாக்கப்பட்ட மனுதர்ம, சனாதன நடைமுறைகளும், கடவுள் அவதாரப் புராணங்களும் கற்பித்து வரும் மூடப்பழக்க வழக்கக் குப்பைகளை அறிவுத் தீ மூட்டி எரித்து விழிப்புணர்வூட்டும் சுயமரியாதை இயக்கம் கண்டவர். இன்றும் சமூக தளங்களில் கருத்தியல் ரீதியாக இயங்கி வருபவர்.

சிந்தனை சிற்பி சிங்கார வேலர் மீது பெரும் நம்பிக்கை வைத்து, சமதர்ம, அறிவியல் கருத்துக்களை குடியரசு இதழில் வெளியிட்டு அவருடன் தோழமை உறவை வளர்த்து கொண்டவர்.

சாதிய அடுக்குமுறை சமூக அமைப்பில் சமூக நீதி ஜனநாயக கொள்கையை முன்மொழிந்து, மக்களின் பேராதரவைத் திரட்டி இடஒதுக்கீடு பெறும் உரிமையை சட்டபூர்வமாக ஏற்கச் செய்தவர்.

சனாதன மூடக் கருத்துக்களை பண்பாட்டு தளத்தில் இருந்து வெளியேற்றி, அரசியல் தளத்தை அண்டா நெருப்பாக கட்டமைத்ததில் சிங்காரவேலர், பெரியார், பேராசான் ஜீவானந்தம், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோர் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் மதவெறியை விசிறி விட்டு, வெறுப்பு அரசியலை முன்னெடுத்து, சமூக ஆதிக்க சக்திகளின் அடி வருடிகளாக செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ், சங் பரிவார் கும்பலில் கரைந்து போன சீமான் பெரியார் ஈவெராவையும், தமிழுக்கும், தமிழர் நலனுக்கும், நாட்டு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட பெரியோர்களையும் இழிவுபடுத்தி அவமதித்து, மூடப்பழக்க வழக்கங்களுக்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபடும் சீமானின் தரம் தாழ்ந்த செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க>> விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்



By admin