பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசியலமைப்பு, தேசியக் கொடி மற்றும் சாதி அமைப்பு பற்றிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கருத்துகள் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் இந்த மூன்று முக்கியமான விஷயங்கள் தொடர்பாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல முறை தனது கருத்துகளை மாற்றியுள்ளது.
இந்திய அரசியலமைப்புடன் ஆர்எஸ்எஸ்-ன் உறவு மிகவும் சிக்கலானது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர், ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில் “நமது அரசியலமைப்பு மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியலமைப்புகளின் பல்வேறு பிரிவுகளின் சிக்கலான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கலவை. அதில் நம்முடையது என்று சொல்லும் எதுவும் இல்லை. அதன் வழிகாட்டும் கொள்கைகளில் நமது தேசிய நோக்கம் என்ன, வாழ்வில் நமது முக்கிய நோக்கம் என்ன என்று சொல்லும் ஒரு குறிப்பாவது உள்ளதா? இல்லை!” என்று குறிப்பிடுகிறார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு நாள் முன்னதாக 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர், “அதிர்ஷ்டத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள் மூவர்ணக் கொடியை நம்மிடம் ஒப்படைக்கலாம். ஆனால் இந்துக்கள் அதை ஒருபோதும் மதிக்க மாட்டார்கள். அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியானது, நிச்சயமாக மிகவும் மோசமான உளவியல் விளைவை உருவாக்கும் மற்றும் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும்,” என்று எழுதியதாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏ.ஜி. நூரானி ஒரு பிரபலமான வழக்கறிஞர் மற்றும் அரசியல் விமர்சகராக இருந்தார். அவர் உச்சநீதிமன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார். அவர் எழுதிய ‘The RSS: A Menace to India’ என்ற புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் இந்திய அரசியலமைப்பு நிராகரிப்பதாக எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Reuters
“அது (ஆர்எஸ்எஸ்) 1993 ஜனவரி 1ஆம் தேதி தனது ‘வெள்ளை அறிக்கையை’ வெளியிட்டது. இது அரசியலமைப்பை ‘இந்து எதிர்ப்பு’ என்று விவரித்தது மற்றும் நாட்டில் எந்த வகையான அரசியலை நிறுவ விரும்புகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டியது. அதன் அட்டைப் பக்கத்தில், ‘இந்தியாவின் ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை அழித்தவர் யார்?’ மற்றும் ‘பசி, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் மற்றும் சட்டமின்மையைப் பரப்பியது யார்?’ என இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கான பதில் வெள்ளை அறிக்கை மூலம் ‘தற்போதைய இந்திய அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1992 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த வெள்ளை அறிக்கையின் ஹிந்தி தலைப்பில் ‘இண்டியன்’ என்ற வார்த்தை ஒரு நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டதாக ஏஜி நூரானி எழுதுகிறார். “இது ஒரு இந்து (அல்லது பாரதிய) அரசியலமைப்பு அல்ல, அது ஒரு இண்டியன் அரசியலமைப்பு.”
வெள்ளை அறிக்கையின் முன்னுரையில், சுவாமி ஹிரானந்த், “தற்போதைய அரசியலமைப்பு நாட்டின் கலாசாரம், குணாதிசயங்கள், சூழ்நிலைகள் போன்றவற்றுக்கு முரணானது. இது வெளிநாட்டு பார்வையைக் கொண்டது” என்றும், “தற்போதைய அரசியலமைப்பை ரத்து செய்த பின்னரே நமது பொருளாதாரக் கொள்கை, நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் பிற தேசிய அமைப்புகள் குறித்துப் புதிதாகச் சிந்திக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளதாக நூரானி பதிவு செய்துள்ளார்.
கடந்த 1993ஆம் ஆண்டு ஜனவரியில், முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் ராஜேந்திர சிங், அரசியலமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் நெறிமுறை மற்றும் திறமைக்கு ஏற்ப அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் எழுதியதாக நூரானி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1993ஆம் ஆண்டு, ஜனவரி 24ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூரில், அப்போதைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், அரசியலமைப்பை புதிதாகப் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
அரசியலமைப்பை மாற்ற முயற்சி?
பட மூலாதாரம், BJP
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் சில தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு மத்தியில், ‘இம்முறை 400 இடங்கள்’ என்ற கோஷத்தை பா.ஜ.க உண்மையில் சாதித்தால் அது அரசியலமைப்பை மாற்றும் என்று கூறப்பட்டது.
அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை என்று பா.ஜ.க பலமுறை தெளிவுபடுத்தியது. ஆனால் அக்கட்சி, அரசியலமைப்பில் பெரிய அடிப்படை மாற்றங்களைச் செய்ய முயன்ற சந்தர்ப்பங்களும் உள்ளன.
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நீலாஞ்சன் முகோபாத்யாய், ‘ஆர்எஸ்எஸ்: ஐகான்ஸ் ஆஃப் தி இந்தியன் ரைட்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
“அடல் பிஹாரி வாஜ்பேய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தபோது அரசியலமைப்பை மறு ஆய்வு செய்ய அரசு ஒரு குழுவை அமைத்தது. பெரும் அமளி ஏற்பட்டதன் காரணமாக கமிட்டியை அமைப்பதற்கான காரணத்தை மாற்றிய அரசு, இந்த கமிட்டி அரசியலமைப்பை முழுமையாகப் பரிசீலனை செய்யாது. ஆனால் இதுவரை அரசியலமைப்பு எவ்வாறு செயல்பட்டது என்று ஆய்வு செய்யும்” என்று தெரிவித்ததாகத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“வாஜ்பேய் அரசால் அரசியலமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கான குழு உருவாக்கப்பட்டது. ஏனென்றால் தற்போதுள்ள அரசியலமைப்பிற்குப் பதிலாக புதிய அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-ம் பா.ஜ.கவும் நம்பின,” என்று எழுதியுள்ளார் முகோபாத்யாய்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றவுடன் நரேந்திர மோதி, அரசியலமைப்பை இந்தியாவின் ஒரே புனித நூல் என்றும் நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோவில் என்றும் கூறி தனது பதவிக் காலத்தை தொடங்கினார்.
பட மூலாதாரம், Reuters
‘ஆர்எஸ்எஸ் ஏற்கெனவே அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது’
கடந்த சில ஆண்டுகளில் அரசியலமைப்பு தொடர்பான தனது நிலைப்பாட்டை ஆர்எஸ்எஸ் தெளிவுபடுத்த முயன்றது.
கடந்த 2018ஆம் ஆண்டில் அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத், “இந்த அரசியலமைப்பு நமது மக்களால் தயாரிக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பு நமது நாட்டின் ஒருமித்த கருத்து. எனவே அரசியலமைப்பின் ஒழுக்கத்தைப் பின்பற்றுவது அனைவரின் கடமை. சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஏற்கெனவே இதை ஏற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் சுதந்திர இந்தியாவின் அனைத்துச் சின்னங்களுக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் முழு மரியாதை அளித்து நடக்கிறோம்,” என்று கூறினார்.
பத்ரி நாராயண் ஒரு சமூக வரலாற்றாசிரியர் மற்றும் கலாசார மானுடவியலாளர். இவர் தற்போது கோவிந்த் பல்லப் பந்த் சமூக அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
“அரசியலமைப்பை ஆதரிக்கிறோம், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது முழு நம்பிக்கை, கொண்டுள்ளோம் என்று சங்கம்(ஆர்எஸ்எஸ்) பலமுறை தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. பிரச்னைகளை எழுப்புபவர்கள் எல்லாவற்றிலும் அரசியலைக் பார்க்கிறார்கள். சங்கத்தின் கருத்துக்களை பார்த்தால், அதாவது மோகன் பாகவத் அல்லது பாலாசாஹேப் தியோரஸ் போன்றோர் முன்பு கூறியதைப் பார்க்கும்போது, சங்கம் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது என்பதையே காட்டுகிறது,” என்று கூறுகிறார் பத்ரி நாராயண்.
அரசியலமைப்புடனான சங்கத்தின் தொடர்பு ஆழமானது. கடந்த இருபது ஆண்டுகளில் அரசியலமைப்பு தொடர்பாக சங்கம் காட்டிய நிலைப்பாடு அரசியலமைப்பிற்கு ஆதரவானது மற்றும் அதில் எந்த முரண்பாடும் இல்லை என்று பேராசிரியர் பத்ரி நாராயண் குறிப்பிட்டார்.
மனுஸ்மிருதி மற்றும் அரசியலமைப்பு
பட மூலாதாரம், Getty Images
இந்திய நாடாளுமன்றம் 2024 டிசம்பரில் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடிய தருணத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியலமைப்பு மற்றும் மனுஸ்மிருதி குறித்து சாவர்க்கரின் எழுத்துகளை மேற்கோள் காட்டி பா.ஜ.கவை தாக்கினார்.
வலது கையில் அரசியல் சாசனத்தையும், இடது கையில் மனுஸ்மிருதியின் நகலையும் பிடித்தபடி ராகுல் காந்தி, “நமது அரசியலமைப்பில் இந்திய தன்மை என எதுவும் இல்லை என்றும் அரசியலமைப்பு சட்டத்தை மனுஸ்மிருதியாக மாற்ற வேண்டும் என்றும் சாவர்க்கர் தனது எழுத்துகளில் தெளிவாகக் கூறியுள்ளார்,” எனத் தெரிவித்தார்.
மனுஸ்மிருதி மற்றும் அரசியலமைப்பு தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஆர்எஸ்எஸ்-ஐ தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலை கற்பித்தவர். ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து தேசியவாதம் பற்றிய பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
“அரசியல் சாசன நிர்ணய சபை 1949 நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பை நிறைவேற்றியது. நான்கு நாட்களுக்குப் பிறகு சங்கத்துடன்(ஆர்எஸ்எஸ்) தொடர்புடையவர் ஒரு தலையங்கம் எழுதினார். இந்த அரசியலமைப்பில் இந்திய தன்மை என்று எதுவும் இல்லை” என்று அதில் கூறப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பை விமர்சிக்கும்போது ‘நாம் பயன்படுத்தக் கூடிய எதுவும் மனுஸ்மிருதியில் காணப்படவில்லையா’ என்ற கேள்வியையும் ஆர்எஸ்எஸ் எழுப்பியதாக பேராசிரியர் இஸ்லாம் குறிப்பிட்டார்.
“நமது இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் மதிக்கப்படுவது மனுஸ்மிருதி என்றும், மனுஸ்மிருதி என்பது இந்து சட்டம் என்றும் முன்பு சாவர்க்கர் கூறியிருந்தார்,” என்று ஷம்சுல் இஸ்லாம் தெரிவித்தார்.
கோல்வால்கரின் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் புத்தகத்தை மேற்கோள் காட்டிய பேராசிரியர் இஸ்லாம், “கோல்வால்கர் செய்தது போல முஸ்லிம் லீக் கூட இந்திய அரசியலமைப்பை கேலி செய்யவில்லை,” என்று குறிப்பிட்டார்.
“அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிந்தனை இப்போதும் முன்பு போலவே உள்ளது. அவர்கள் சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள்,” என்கிறார் பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம்.
நீலாஞ்சன் முகோபாத்யாவும் பேராசிரியர் இஸ்லாத்துடன் உடன்படுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
கடந்த சில ஆண்டுகளில் அரசியலமைப்பில் ஏற்பட்ட பெரிய மாற்றங்கள் குறித்துப் பேசிய முகோபாத்யாய், “சிஏஏவின் கீழ் குடியுரிமை, மத அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வெளியில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கானது. ஆனால் முஸ்லிம்கள் இதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
கடந்த 1973இல் உச்சநீதிமன்றம் எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்று உத்தரவிட்டதோ, அந்த அடிப்படைக் கட்டமைப்பைப் பற்றிய விவாதத்தைத் தற்போதைய அரசு தொடங்கியுள்ளதாக முகோபாத்யாய் கூறுகிறார்.
“குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், முன்னாள் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் ‘அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பு’ என்று எதுவும் இல்லை, எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்று வாதிடுகின்றனர். நாடாளுமன்றமே அனைத்திலும் உயர்ந்தது. அரசியலமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மட்டுமே தேவை என்று அவர்கள் கூறுகிறார்கள்,” எனச் சுட்டிக்காட்டினார்.
தேசியக்கொடி குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாறி வரும் நிலைப்பாடு
பட மூலாதாரம், Getty Images
இன்று ஆர்எஸ்எஸ் பொதுவெளியில் மூவர்ணக் கொடியை ஏற்றுகிறது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகளில் மூவர்ணக் கொடியை அடிக்கடி பார்க்க முடிகிறது. தேசியக் கொடியை மதிப்பதாக ஆர்எஸ்எஸ் கூறுகிறது.
ஆனால் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பல தசாப்தங்களாக மூவர்ணக் கொடி தொடர்பான ஆர்எஸ்எஸ்-ன் நிலைப்பாட்டில் பல கேள்விக்குறிகள் இருந்தன.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர் இந்தியாவின் மூவர்ணக் கொடியை விமர்சித்தார். பஞ்ச் ஆஃப் தாட்ஸ் என்ற தனது புத்தகத்தில் அவர் “மூவர்ணக் கொடி, நமது தேசிய வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையிலான தேசியப் பார்வை அல்லது உண்மையால் ஊக்கம் பெற்று உருவாக்கப்பட்டது அல்ல,” என்று அவர் எழுதினார்.
மூவர்ணக் கொடியை ஏற்றுக்கொண்ட பிறகு அது வெவ்வேறு சமூகங்களின் ஒற்றுமையைக் குறிப்பதாக விளக்கப்பட்டது. அதாவது இந்துக்களுக்கு காவி நிறம், முஸ்லிம்களுக்கு பச்சை மற்றும் மற்ற அனைத்து சமூகங்களுக்கு வெள்ளை நிறம் என்று கோல்வால்கர் குறிப்பிட்டார்.
“இந்து அல்லாத சமூகங்களில் முஸ்லிம்களின் பெயர் குறிப்பாக எடுக்கப்பட்டது. ஏனெனில் அந்த முக்கியத் தலைவர்களின் மனதில் முஸ்லிம்கள் முதன்மையானவர்கள் என்ற எண்ணம் இருந்தது. அந்தப் பெயரை எடுக்காமல் நமது தேசியவாதம் முழுமையடையும் என்று அவர்கள் நினைக்கவில்லை. இது வகுப்புவாத மனப்பான்மையைக் குறிப்பதாக சிலர் சுட்டிக்காட்டியபோது, காவி நிறம் தியாகத்தின் அடையாளம், வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம், பச்சை நிறம் அமைதியின் அடையாளம் என்று புதிய விளக்கம் எழுந்தது,” என்று அவர் எழுதினார்.
“கடந்த 1929இல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்ஜியம் பற்றிப் பேசப்பட்டபோது, 1930 ஜனவரி 26ஆம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடி மூவர்ணக் கொடி ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அன்றும் ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடியின் இடத்தில் காவிக்கொடியை ஏற்றியது,” என்று எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான நீலாஞ்சன் முகோபாத்யாய் சுட்டிக்காட்டினார்.
திரேந்திர ஜா ஆர்எஸ்எஸ் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்த புகழ்பெற்ற எழுத்தாளர். சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வால்கர் பற்றிய அவரது புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்கு முன் அவர் நாதுராம் கோட்ஸே மற்றும் இந்துத்துவம் பற்றிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
ஹெட்கேவார் 1930 ஜனவரி 21ஆம் தேதி எழுதிய கடிதத்தில் ‘சங்கத்தின் கிளைகளில் மூவர்ணக் கொடியை அல்ல, காவிக்கொடி ஏற்றுவது’ பற்றியே பேசியதாக ஜா கூறுகிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆர்எஸ்எஸ் மறுத்து வருகிறது. 1930இல் மூவர்ணக் கொடிக்கு தேசியக் கொடி அந்தஸ்து இருக்கவில்லை.
“ஹெட்கேவரின் வாழ்க்கையின் ஒரே நோக்கம் தேசத்தின் பெருமை மற்றும் சுதந்திரத்தை அடைவது. அப்படி இருக்கும்போது சங்கத்திற்கு வேறு இலக்கு எப்படி இருக்க முடியும்? சங்கத்தினர் நமது சுதந்திரத்தின் அனைத்து சின்னங்கள் மீதும் அபரிமிதமான மரியாதையும் அர்ப்பணிப்பும் கொண்டுள்ளனர். இதுதவிர வேறு எதையும் சங்கத்தால் நினைக்க முடியாது,” என்று 2018ஆம் ஆண்டில் மோகன் பாகவத் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
‘தொடக்கத்தில் மூவர்ணக் கொடி காங்கிரஸின் கொடி, தேசியக் கொடி அல்ல’
ராம் பகதூர் ராய் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளராக இருந்து தற்போது இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் தலைவராக உள்ளார். அவர் இந்திய அரசியலமைப்பு மற்றும் முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாஹேப் தியோரஸ் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
கடந்த 1930இல் ஆர்.எஸ்.எஸ் மூவர்ணக் கொடியை ஏற்றியதா என்பது பற்றி கருத்து தெரிவித்த அவர், “மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டிருக்காது என்று நான் நம்புகிறேன். நீங்கள் உளவியல் கண்ணோட்டத்தில் பாருங்கள். மூவர்ணக் கொடி அப்போது சுதந்திரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அந்தக் காலத்தில் மூவர்ணக் கொடி காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தியது” என்றார்.
“அப்போது தேசிய அளவில் சுதந்திரப் போராட்டத்தின் மையமாக காங்கிரஸ் இருந்தது உண்மைதான். ஆர்எஸ்எஸ் அமைப்பும் சுதந்திரக் குறிக்கோளால் ஈர்க்கப்பட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் காங்கிரஸில் இருந்து வேறுபட்டது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடையாளம் காவி நிறம். எனவே ஹெட்கேவர் எழுதிய கடிதத்தில் இரண்டு விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ‘நாம் சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆனால் நம் அமைப்பு தனிப்பட்டது. எனவே நாம் நம் கொடியை ஏற்ற வேண்டும்’ என்று அவர் கூறியதாக நான் கருதுகிறேன்,” என்று ராய் குறிப்பிட்டார்.
ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் ஆம்பேகர் தனது ‘RSS: Roadmap for the 21st Century’ என்ற புத்தகத்தில், “ஹிந்தியில் ‘திரங்கா’ என்று அழைக்கப்படும் தேசியக் கொடி நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த நாளன்றும், 1950 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்றும் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது,” என்று எழுதியுள்ளார்.
கடந்த 1963ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றபோது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றதாகவும் ஆம்பேகர் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், The Organiser
கடந்த 1962இல் நடந்த சீனாவுடனான போருக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963 குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ள ஆர்எஸ்எஸ்-ஐ பிரத்யேகமாக அழைத்தார் என ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்கள்.
“கடந்த 1963ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக சங்கத்தினரின்(ஆர்எஸ்எஸ்) கைகளில் மூவர்ணக் கொடி காணப்பட்டது” என்று திரேந்திர ஜா கூறுகிறார். ஆனால் இந்த அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் மட்டுமே அழைக்கப்படவில்லை. அனைத்து தொழிற்சங்கங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அழைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“இந்த அணிவகுப்பு மக்கள் அணிவகுப்பாகக் கருதப்பட்டது. ஏனெனில் 1962 போர் முடிந்து படைகள் எல்லையில் இருந்தன. பாரதிய மஸ்தூர் சங்கம், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் போன்ற அமைப்புகள் அழைக்கப்பட்டன. அவர்கள் (ஆர்எஸ்எஸ்) சீருடை அணிந்து பங்கேற்றனர். ஏனென்றால் அவர்களுக்கு அங்கீகாரம் தேவைப்பட்டது. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்த அமைப்பு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது,” என்று ஜா கூறுகிறார்.
யாரும் தங்கள் சொந்தக் கொடியை கொண்டு வரக்கூடாது என்றும், அனைவரும் மூவர்ணக் கொடியை மட்டுமே கைகளில் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தெளிவாகக் கூறியதால் அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் கைகளில் மூவர்ணக் கொடி காணப்பட்டதாக ஜா கூறுகிறார்.
“நேரு, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அழைப்பு விடுத்ததாக ஆர்எஸ்எஸ் பின்னர் ஒரு கட்டுக்கதையைப் பரப்பத் தொடங்கியது,” என்று திரேந்திர ஜா குறிப்பிட்டார். “ஆர்எஸ்எஸ்-க்கு மூவர்ணக் கொடியுடன் சுமுகமான உறவு இருக்கவில்லை. வெகுகாலத்திற்குப் பிறகு மூவர்ணக் கொடி, அரசியலமைப்பு மற்றும் காந்தி இந்த நாட்டின் ஆன்மா என்பதை சங்கம்(ஆர்எஸ்எஸ்) புரிந்துகொள்ளத் தொடங்கியது. அதன் பிறகு அவர்கள் மூவர்ண கொடி மீது மரியாதை இருப்பதாக காட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்குப் பிறகும் தேசியக்கொடியை ஏற்றவில்லை என்ற குற்றச்சாட்டு
பட மூலாதாரம், Getty Images
ஆர்எஸ்எஸ் தன் தலைமையகத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்று ஒரு விமர்சனம் நிலவுகிறது. கடந்த 1950க்குப் பிறகு முதன்முறையாக ஆர்எஸ்எஸ் தனது தலைமையகத்தில் 2002 ஜனவரி 26ஆம் தேதி மூவர்ணக் கொடியை ஏற்றியது.
இதற்குப் பதிலளித்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களும் தலைவர்களும், ‘2002 வரை ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை ஏற்றவில்லை. ஏனென்றால் 2002 வரை தனிப்பட்ட முறையில் குடிமக்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி இருக்கவில்லை’ என்று தெரிவித்தனர்.
ஆனால் 2002ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த கொடி சட்ட விதிகள் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் எந்தவொரு இந்தியரும் அல்லது அமைப்பும் கொடி ஏற்றுவதைத் தடுக்கவில்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
கடந்த 1950, 60 மற்றும் 70களில் கூட தனியார் நிறுவனங்கள் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆகிய தேதிகளில் தேசியக் கொடியை ஏற்றியதாக முகோபாத்யாய் கூறுகிறார். “தேசியக் கொடியின் அவமதிப்பைத் தடுப்பதே கொடி சட்ட விதிகளின் நோக்கம்,” என்றார் அவர்.
“பல அமைப்புகள் மற்றும் அரசுத் துறைகளைப் போலவே, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அதன் சொந்தக் கொடி உள்ளது. அதாவது காவிக்கொடி. காவிக்கொடி பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் கலாசார டிஎன்ஏவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2004ஆம் ஆண்டு கொடிச் சட்ட விதிகள் தாராளமயமாக ஆக்கப்பட்டதில் இருந்து ஆர்எஸ்எஸ் அலுவலங்களில் உச்ச மரியாதையுடன் முவர்ணக் கொடி ஏற்றப்படுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்படுகிறது. இந்த விழாக்களில் காவிக் கொடியும் ஏற்றப்படுகிறது,” என்று ஆம்பேகர் எழுதுகிறார்.
மூவர்ணக் கொடி இந்தியாவின் தேசியக் கொடியாக மாறியபோது அதுவொரு மோசமான கொடி என்று ஆர்எஸ்எஸ் கூறியது என்று பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம் குறிப்பிட்டார்.
“இந்தியாவின் ஜனநாயகத்தின் அடையாளங்களாக இருந்தவற்றை ஆர்எஸ்எஸ் மதிக்கவில்லை. ஏனெனில் அவர்களின் கருத்துப்படி இந்தச் சின்னங்கள் இந்து தேசத்திற்குச் சொந்தமானவை அல்ல,” என்றார் அவர்.
சாதி அமைப்பு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
பட மூலாதாரம், Getty Images
ஆர்எஸ்எஸ்-ன் ஆரம்பக் காலத்தில் அதன் தலைவர்கள் சாதி அமைப்பை இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாகக் கருதினர்.
“நம் சமூகத்தின் மற்றொரு சிறப்பு சாதி அமைப்பு. ஆனால் இன்று அது ‘சாதிவெறி’ என்று கேலி செய்யப்படுகிறது. நம் மக்கள் சாதி அமைப்பைக் குறிப்பிடுவதையே அவமதிப்பதாகக் கருதுகிறார்கள். அவர்கள் சமூக அமைப்பை, சமூகப் பாகுபாடு என்று அடிக்கடி தவறாக நினைக்கிறார்கள்,” என்று கோல்வால்கர் ”பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ புத்தகத்தில் எழுதுகிறார்.
“இந்த நூற்றாண்டுகளில் நமது வீழ்ச்சிக்கு சாதி அமைப்புதான் காரணம்” என்று சிலர் தொடர்ந்து பிரசாரம் செய்தார்கள் என்று கோல்வால்கர் கூறினார்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தே சாதிகள் இருந்தன என்றும், சாதிகளால் சமூகத்தின் ஒற்றுமை துண்டாடப்பட்டதற்கோ, அதன் முன்னேற்றத்திற்குத் தடை ஏற்பட்டதற்கோ எந்தவொரு உதாரணமும் இல்லை என்றும் கோல்வால்கர் கூறினார்.
கோல்வால்கரின் மறைவுக்குப் பிறகு பாலாசாகேப் தியோரஸ் ஆர்.எஸ்.எஸ் தலைவராக ஆனபோது, ஆர்.எஸ்.எஸ்-ஐ விரிவுபடுத்தி மற்ற சாதி மக்களைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசியதாக நீலாஞ்சன் முகோபாத்யாய் குறிப்பிட்டார்.
“சமூக நல்லிணக்கம் என்பது நாம் இப்போது கேட்கும் ஒரு சொல். 1974இல் நல்லிணக்கத்தின் அவசியத்தைப் பற்றி தியோரஸ் முதலில் பேசினார். ஆனால் ஆர்எஸ்எஸ் பட்டியல் சாதி மக்களுக்குத் தனது கதவுகளை மூடிக்கொள்ளும் கொள்கையைத் தொடர்ந்தது. 1980களின் பிற்பகுதியில்தான் அவர்கள் கதவுகளைத் திறந்து மற்ற சாதியினரை சேர்க்கத் தொடங்கினர்,” என்று முகோபாத்யாய் கூறுகிறார்.
கடந்த 1989 நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவை நினைவுகூர்ந்த நீலாஞ்சன் முகோபாத்யாய், அடிக்கல் நாட்டியவர் ராமர் கோவில் அறக்கட்டளை உறுப்பினராக இருந்து இந்த ஆண்டு பிப்ரவரியில் காலமான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பட்டியல் சாதி தலைவர் காமேஷ்வர் சௌபால் என்று கூறினார்.
“இது மிகவும் விசித்திரமான விஷயம். மக்களைச் சென்றடைய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-க்கு தெரியும். ஆனால் அவர்களால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் எவ்வளவு காலம் தொடர்ந்து போராடுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது இப்போதும் உள்ளது,” என்று முகோபாத்யாய் கூறுகிறார்.
இதுகுறித்து 2018ஆம் ஆண்டு பேசிய மோகன் பாகவத், “ஐம்பதுகளின் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்), நீங்கள் பிராமணர்களை மட்டுமே பார்ப்பீர்கள். இன்றைய சங்கத்தில் அனைத்து சாதிகளில் இருந்தும் தொண்டர்கள் இருக்கிறார்கள்”
சாதி அமைப்பு மீதான மாறி வரும் நிலைப்பாடு
பட மூலாதாரம், Getty Images
ஒருபுறம் இந்து சமூகத்தினரிடையே ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திய ஆர்எஸ்எஸ் மறுபுறம் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த பல திட்டங்களைத் தொடங்கியது.
சமாஜிக் சம்ரசதா வேதிகா, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற அமைப்புகள் மூலம் சாதிப் பாகுபாடு, தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளை ஒழிக்க ஆர்எஸ்எஸ் பல திட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த அமைப்புகள் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி கற்பிக்கவும், விளிம்புநிலை சமூகங்களைப் பிரதானமாகக் கொண்டு வரவும் முயற்சி செய்கின்றன.
ஆனால், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக ஆர்எஸ்எஸ் எதைச் செய்தாலும், அந்தச் சமூகங்களைச் ஆர்எஸ்எஸ்-க்கு விசுவாசமாக வைத்திருப்பது மட்டுமே அதன் நோக்கம் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
“சாதிகளிடையே இந்து ஒருமைப்பாட்டிற்கு, சாதிய அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம் என்பது ஆர்எஸ்எஸ்-க்கு தெரியும். சாதிப் பாகுபாடு தொடர்ந்தால் சங்கத்தால் (ஆர்.எஸ்.எஸ்) முன்னேற முடியாது என்பதும் தெரியும். ஆனால் ஆர்எஸ்எஸ் சாதி அமைப்பையும் நம்புகிறது. அதன் தலைமை வெகுகாலமாக உயர் சாதியினரின் கைகளில் இருந்தது. சமீபகாலமாக மட்டுமே வேறு சாதியினர் பெரிய பதவிகளில் வந்துள்ளனர். ஆனால் இன்றும்கூட அந்த அமைப்பு முதன்மையாக ஒரு உயர் சாதி அமைப்பாகவே உள்ளது,” என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் குறிப்பிட்டார்.
‘ புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்’
பட மூலாதாரம், Getty Images
ஓர் அமைப்பு உருவாகும்போது, அதன் கரு (மையம்) சாதியை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று பேராசிரியர் பத்ரி நாராயண் கூறுகிறார்.
“எந்தவொரு அமைப்பும் சமூக தொடர்பில் இருந்தே தொடங்கும். ஆனால் அந்த அமைப்பு வளரும்போது, அது மற்றவர்களை உள்ளே கொண்டு வருகிறது. மற்றவர்களை ஈடுபடுத்தாத எந்த அமைப்பும் வளர முடியாது, மேலும் ஆர்எஸ்எஸ் பெரிய அமைப்பாக மாறிவிட்டது, மக்களை ஈடுபடுத்தாமல் அது வளர முடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“சமீப காலங்களில் ஆர்எஸ்எஸ்-ன் பிரசாரகர்களின் விவரங்களைப் பார்த்தபோதும், ஆய்வு செய்தபோதும், ‘பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகள் அதிக எண்ணிக்கையில் சங்கத்தில் முன்னேறி உயர் பதவிகளுக்குச் செல்கிறார்கள்’ என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் பேராசிரியர் பத்ரி நாராயண்.
சங்கத்துடன்(ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய சரஸ்வதி சிஷு மந்திர் பள்ளிகளை உதாரணம் காட்டிய பேராசிரியர் பத்ரி நாராயண், “தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல குழந்தைகள் அங்கு படிக்க வருகிறார்கள். அங்கு படித்து முன்னேறுகிறார்கள். அவர்களில் பலர் பிரசாரகர்களாக ஆகிறார்கள். பலர் வேலைக்குச் செல்கிறார்கள். எனவே ஆர்எஸ்எஸ் அதிகாரம் அளிக்கும் அமைப்பாக உருவெடுத்துள்ளது. எல்லா வகையான சமூகங்களையும் உள்ளடக்கியதில் சங்கத்தின் பள்ளிகள் நிறைய வேலைகளைச் செய்துள்ளன.” என்று குறிப்பிட்டார்.
அரவிந்த் மோகன் ஒரு மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர். ‘சாதியும் தேர்தலும்’ என்ற புத்தகத்தை அவர் எழுதியுள்ளார்.
” ரஜ்ஜு பய்யாவை தவிர இன்று வரை சங்கத்திற்குள்(ஆர்எஸ்எஸ்) பிராமணரை தவிர வேறு எந்த சாதியில் இருந்தும் தலைவர் இல்லை. ஆர்எஸ்எஸ் இப்போது தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடினாலும்கூட, சாதிவெறி மற்றும் தீண்டாமை தொடர்பான சமூகத்தின் சிந்தனையை மாற்றவோ அல்லது தலித்துகளுக்கு உரிமைகளை வழங்கவோ அதன் தரப்பில் இருந்து எந்த முயற்சியும் இதுவரை காணப்படவில்லை,” என்கிறார் அரவிந்த் மோகன்.
“முயற்சி எடுத்தாலும் அது தலித் வீட்டில் உணவு உண்பது, பழங்குடியினரின் கால்களைக் கழுவுவது என்பது போலவே இருக்கிறது. அதிகாரப் பகிர்வில்கூட தலித்துகள் எங்கும் காணப்படுவதில்லை. சங்கத்தின் கட்டமைப்பில்கூட தலித்துகள் எங்கும் தெரிவதில்லை,” என்கிறார் அவர்.
சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு தொடர்பாக குழப்பம்?
பட மூலாதாரம், Getty Images
அதிக எண்ணிக்கையிலான ஆர்எஸ்எஸ் உயர் சாதி ஆதரவாளர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பதாக நம்பப்படுவதால், சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் குழப்பத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது.
கடந்த 2023 டிசம்பரில் விதர்பா பகுதியின் ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீதர் காட்கே, ”சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு இருக்கக்கூடாது. ஏனெனில் இதுபோன்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும்” என்று கூறினார்.
இந்த கருத்தால் ஓர் அரசியல் மோதல் தொடங்கியது. சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிர்க்கவில்லை என்று இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தெளிவுபடுத்தியது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சுனில் ஆம்பேகர், “சமீபத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் விவாதம் தொடங்கியுள்ளது. இது சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவ்வாறு செய்யும்போது, சமூக நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படாமல் இருப்பதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
நாட்டின் நலனில் உண்மையான அக்கறையும், சமூக சமத்துவத்தில் உறுதியும் கொண்ட நபர்களைக் கொண்ட குழு அமைத்து, எந்தப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும், எவ்வளவு காலம் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று பாகவத் அப்போது கூறியிருந்தார்.
இட ஒதுக்கீட்டின் பலன்கள் சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக பாகவத் இவ்வாறு கூறியதாக ஆர்எஸ்எஸ் பின்னர் தெளிவுபடுத்தியது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாகவத் தெரிவித்த கருத்து, பிகார் தேர்தலில் பாஜக சந்தித்த தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் என்று கருதப்படுகிறது. இதற்கு பிறகு ஆர்எஸ்எஸ், தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல என்பதைத் தெளிவுபடுத்த தொடர்ந்து முயன்றது.
கடந்த 2023 செப்டம்பரில் மோகன் பாகவத், “சாதிப் பாகுபாடு இருக்கும் வரை, இடஒதுக்கீடு நிலைத்திருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளாக கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்காக மக்கள் இருநூறு ஆண்டுகள் கஷ்டங்களை சகிக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2024 செப்டம்பரில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை ஆர்எஸ்எஸ் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியது.
“பின்தங்கிய சமூகங்கள் அல்லது சாதியினருக்கான மேம்பாட்டுப் பணி நடவடிக்கைகளுக்காக அரசுக்கு தரவுகள் தேவை. ஆனால் அத்தகைய தரவுகள் அந்தச் சமூகங்களின் நலனுக்காக மட்டுமே சேகரிக்கப்பட வேண்டும், தேர்தல் பிரசாரத்திற்கு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது” என்று தெரிவித்தார் சுனில் ஆம்பேகர்
கடந்த 1990களில், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷனுக்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடந்தபோது, ஆர்எஸ்எஸ்-ம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டது.
மண்டல் கமிஷன் விவகாரத்தில் வி.பி.சிங் தலைமையிலான கூட்டணி அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவை வாபஸ் பெற்றபோது, இட ஒதுக்கீடு தொடர்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க.வின் எதிர்ப்பு தெளிவாகத் தெரிந்தது.
மண்டல் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தின்போது ஆர்எஸ்எஸ்-ன் அணுகுமுறை பற்றிப் பேசிய அரவிந்த் மோகன், “மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பா.ஜ.க பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவை கொண்டிருந்தது. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பின்பற்றாவிட்டால், முடிந்துவிடுவோம் என்று கருதிய சுஷில் மோடி போன்ற சில தலைவர்கள் இருந்தனர். இந்த அழுத்தத்தால் பா.ஜ.க மாறியது. அதுவரை பா.ஜ.க வெளிப்படையாகவே இட ஒதுக்கீட்டை எதிர்த்து வந்தது. ஆர்எஸ்எஸ்-ம் அதையேதான் செய்தது,” என்றார்.
சாதி என்பது அடையாளக் கருவியாக ஆக்கப்பட்டு அது அரசியலில் பயன்படுத்தப்படுகிறது என்று பேராசிரியர் பத்ரி நாராயணன் குறிப்பிட்டார்.
“சாதியை வளர்ச்சிக்குப் பயன்படுத்த நினைக்கும் போதெல்லாம் அது அடையாளக் கருவியாக மாறுகிறது. இதைத் தவிர்ப்பது கடினம். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு என்று சொன்னால் அங்கு சாதி வரத்தான் செய்யும். அடையாள அரசியலாக அது வந்துவிடும். அடையாள அரசியல் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு அது அந்த அதிகாரத்தை நிறுத்துகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு