பட மூலாதாரம், ANI
“பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏன்? ஆர்எஸ்எஸ்ஸுக்கும், பாஜகவுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லையா?”
“பாஜகவின் பாதுகாவலர் என்ற முறையில், கடந்த பதினோரு ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாட்டை சங்கம் எப்படி பார்க்கிறது?”
“மத்திய அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டிய அல்லது மேலும் நேர்மையுடன் செயல்பட வேண்டிய விவகாரங்கள் என்ன?”
அண்மையில், பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில இந்திய பிரதிநிதிகள் சபை கூட்டத்தில், சங்க பிரதிநிதிகளிடம் பாரதிய ஜனதா குறித்த கேள்விகள் எழுப்பிய போது, சங்கத்தின் பதில்கள் எச்சரிக்கை உணர்வுடனும், பாஜகவிடமிருந்து பாதுகாப்பான தூரத்துக்கு விலகி இருப்பதைப் போன்றும் தோன்றின.
நிறுவப்பட்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் சங்கம் இந்த கூட்டத்தில் ஒளரங்கசீப், மணிப்பூர், வங்கதேசத்தில் இந்துக்களின் நிலை, மொழி சர்ச்சை, தொகுதி மறுவரையறை போன்ற விவகாரங்களில் வெளிப்படையாக பேசிய நிலையில், பாஜகவை குறிப்பிட்டவுடன் எச்சரிக்கையுடனும் கட்டுப்பாடுடனும் பேசியதாக தோன்றக் காரணம் என்ன?
பாஜக தொடர்பான கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ் பதில்
பட மூலாதாரம், Getty Images
அகில் பாரதிய பிரதிநிதி சபாதான் (ஏபிபிஎஸ்) ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் முடிவுகளை எடுக்கும் உச்ச அமைப்பு. ஒவ்வோர் ஆண்டும், ஏபிபிஎஸ்-ன் வருடாந்திர கூட்டத்தில், அதன் கொள்கைகளும் தொலைநோக்கும் விவாதிக்கப்பட்டு, சங் பரிவார் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தனது வருடாந்திர அறிக்கையையும் வெளியிடுகிறது.
பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் மூன்றாவது மற்றும் இறுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே பல விஷயங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
‘பாஜகவின் பாதுகாவலராக ஆர்எஸ்எஸ் இருப்பதால், கடந்த 11 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசின் செயல்பாட்டை ஆர்எஸ்எஸ் எப்படி மதிப்பிடுகிறது’ என பிபிசி கேட்டபோது அவர், “மதிப்பீட்டை இந்த நாட்டு மக்கள் செய்துள்ளனர். நாட்டிலிருந்து ஆர்எஸ்எஸ் வேறுபட்டதல்ல, பாதுகாவலர் பொறுப்பை பொருத்தவரை, நாங்கள் பாஜக அரசு மட்டுமல்ல, எந்த அரசின் பாதுகாவலராகவும் மாற தயாராக இருக்கிறோம்,” என தெரிவித்தார்.
“ஏதேனும் கட்சி வந்து எங்கள் எண்ணத்துடன் ஒத்துப் போனால், நாங்கள் பாதுகாவலர்களாக முடியும். யாரும் வராவிட்டால், அது மாறுபட்ட விவகாரம்.” என்றார் அவர்.
மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அல்லது மேலும் நேர்மையாக செயல்பட வேண்டிய விஷயங்கள் என்னவென்று பிபிசி கேட்ட போது, “இதுதான் நிலை என்றால் நாங்கள் அவர்களை சந்தித்து அவர்களிடம் தெரிவிப்போம். தற்போது அதுபோல் எந்த சூழ்நிலையும் இல்லை. எல்லாம் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது,” என்றார் ஹோசாபலே.
பட மூலாதாரம், www.rss.org
தனது வாதத்தை மேலும் விவரித்த ஹோசாபலே, “ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த ஸ்வயம்சேவக்குகள் ஒவ்வொரு நாளும் எழுந்ததும் அரசிடம் இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என சொல்ல மாட்டார்கள். பல்வேறு துறைகளில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் தொழிலாளர்களால் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அவையனைத்தும் பெரிய அமைப்புகள். அவை ஆர்.எஸ்.எஸ்-யிடமிருந்து ஊக்கத்தைப் பெறுகின்றனர். இதைப் போன்ற விஷயங்களை ஆலோசிக்க ஒரு நடைமுறையை வைத்திருக்கிறோம். ஏதேனும் பிரச்னைகள் இருந்தால். ஆர்எஸ்எஸ் அதை நிச்சயம் முன்னிலைக்குக் கொண்டுவரும்.”
ஹோசாபலே, “தற்போது அனைத்து விஷயங்களும் நன்றாக செல்வதாக நாங்கள் நினைக்கிறோம். தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், அனைத்து விஷயங்களிலும் நன்றாக சென்று கொண்டிருக்கின்றன. இப்போது மக்களுக்கு மாநில மற்றும் மக்களவை தேர்தல்களில் வாய்ப்பு உள்ளது. மக்களும் அவர்களுடைய கருத்தை தெரிவிக்கின்றனர். எனவே, இன்று மதிப்பீடு செய்ய தேவையான சூழ்நிலை ஏதும் இல்லை. சங்கம் தனது மதிப்பீட்டை ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் வெளியிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் மதிப்பீடு செய்து அதை தினமும் தெரிவிக்கும் நடைமுறை ஏதும் எங்களிடம் இல்லை. எனவே மதிப்பீடு அவ்வப்போது செய்யப்படுகிறது.” என்றார்.
அதே செய்தியாளர் சந்திப்பில், பாஜக தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆர்எஸ்எஸ்-ன் கருத்தை பாஜக கேட்டதா, அப்படி கருத்து கேட்கப்பட்டிருந்தால், ஆர்எஸ்எஸ் ஏதேனும் அறிவுறுத்தல் வழங்குமா என ஹோசாபலேவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஹோசாபலே, “மற்ற 35 அமைப்புகளுக்கும், பிஎம்எஸ் அல்லது வேறு யாருக்கேனும் இதேபோன்ற கேள்வியை நீங்கள் கேட்டதே இல்லை. எங்களை பொருத்தவரை எல்லாரும் சமம். எல்லாரும் நாட்டுக்காக உழைக்கிறார்கள், அவைகள் அனைத்தும் சுதந்திரமான அமைப்புகள். அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-ன் தன்னார்வலர்கள், எனவே அதுதான் எங்கள் உறவு.” என்று கூறினார்.
“அவர்களது அமைப்புக்கான கடமைகளை அவர்கள் செய்ய வேண்டும், அதை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கேட்க வேண்டும் என்று கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும், அவர்களது அட்டவணைப்படி எப்போது செய்ய வேண்டும், அது அங்கிருப்போரின் வேலை. நாங்கள் அதில் தலையிடுவதில்லை. அது எங்கள் வேலை கூட இல்லை. நாங்கள் அதை செய்வதில்லை.”
செய்தியாளர் சந்திப்புக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு சங்கம் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் ஒளரங்கசீப், வஃக்ப் மற்றும் மணிப்பூர் தொடர்பான கேள்விகளுக்கு ஹோசாபலே அளித்த பதில்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் பாஜக தொடர்பான கேள்விகள் குறித்து குறிப்பிடப்படவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம்.
நாக்பூருக்கு பிரதமர் மோதி பயணம்
பட மூலாதாரம், ANI
‘நாக்பூரில் மாதவ் நேத்ராலயா அறக்கட்டளையால் கட்டப்படும் மாதவ் நேத்ராலயா பிரீமியம் சென்டருக்கு மார்ச் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுவார்’ என்ற செய்தி வெளியானவுடனேயே, அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு பிரதமர் செல்வாரா என்ற விவாதம் வலுப்பெற்றது. பிரதமர் மோதியும், சர்சங்கசலக் (ஆர்எஸ்எஸ் தலைவர்) மோகன் பாகவத்தும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மேடையை பகிர்ந்துகொள்வார்கள் என சில செய்திகள் வெளியாயின. ஆனால், பிரதமருக்கும் சர்சங்கசாலக்குக்கும் இடையே சந்திப்புகளோ, பேச்சுவார்தைகளோ நடைபெறுமா என்பது குறித்தும் யூகங்கள் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலேவிடம் கேட்டபோது, “நிகழ்ச்சி குறித்த எந்த விவரமும் எங்களுக்குக் கிடைக்கவில்லை,” என தெரிவித்தார். “இயல்பாகவே, நாங்கள் (பிரதமரை) வரவேற்போம்.” எனவும் அவர் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு, மோதியும், பாகவத்தும் ஒன்றாக காணப்பட்ட சந்தர்ப்பங்கள் வெகு குறைவே.
2020ஆம் ஆண்டில், அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையில் இருவரும் ஒன்றாக காணப்பட்டனர்.
மோதியும், பாகவத்தும் ஜனவரி 2024ஆம் ஆண்டில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்ட நிகழ்ச்சியின் போது மீண்டும் ஒன்றாக காணப்பட்டனர். முதலில் ராமர் கோவில் கர்ப்பகிரகஹத்தில் மோதியுடன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். பின்னர் அவர் மேடையில் ஆற்றிய உரையில் பிரதமரை வெகுவாக புகழ்ந்தார்.
ஆனால், அவ்வப்போது பாகவத்திடமிருந்து வெளிவந்த சில கருத்துகள் அவர் பிரதமரை குறிவைப்பதாக தோன்றச் செய்தன.
எடுத்துக்காட்டாக 2024 டிசம்பரில், பாகவத்திடமிருந்து வெளியான அறிக்கை ஒன்றில், ராமர் கோவில் கட்டப்பட்ட பின்னர் புதிய இடங்களில் இதே போன்ற பிரச்னைகளை எழுப்பி அதன் மூலம் இந்துக்களின் தலைவராக முடியும் என சிலர் கருதுவதாகவும், இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், எல்லா மசூதிகளிலும் சிவலிங்கத்தை கண்டெடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை என பாகவத் தெரிவித்திருந்தார்.
மாறும் சமன்பாடுகள்?
பட மூலாதாரம், Getty Images
ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா இடையே சமன்பாடுகள் மாறுகின்றனவா?
“பிரதமர் – சர்சங்கசாலக் இருவருக்கும் இடையே எல்லாம் முற்றிலும் இயல்பாக இருப்பதாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால், மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு அவர் தெரிவித்த கருத்துகள், அவர் பிரதமரின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், யார் குறிவைக்கப்படுகிறார் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்,” என மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங் சொல்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு நடுவில் பாஜக வலிமையுடன் இருப்பதாகவும் அதற்கு ஆர்எஸ்எஸ் தேவையில்லை எனவும் பாஜக தலைவர் ஜேபி நட்டா தெரிவித்ததை பிரதீப் சிங் குறிப்பிடுகிறார்.
நட்டாவின் கருத்துக்கு பதிலளித்த ஆர்எஸ்எஸ் இந்த விவகாரத்தை குடும்ப விவகாரம் என விவரித்து, இதுபோன்ற விஷயங்களை ஆர்எஸ்எஸ் பொதுவெளியில் விவாதிப்பதில்லை என்றும் தெரிவித்தது.
“இந்த கருத்தை ஜே.பி. நட்டா அவராக தெரிவிக்கவில்லை, அந்த கருத்தை சொல்ல வைக்கப்பட்டார் என ஆர்.எஸ்.எஸ்-யில் இருப்பவர்கள் நம்புகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மை எதுவென்று தெரியவில்லை, ஆனால் தேசிய தலைவர் இதுபோன்ற ஒரு கருத்தை மேலிடத்துடன் ஆலோசிக்காமல் தெரிவித்திருக்க மாட்டார் என நாம் எடுத்துக்கொள்ளலாம்” என பிரதீப் சிங் சொல்கிறார்.
“எனவே, ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு தூரம் தலையிட அனுமதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பாஜகவில் மறுஆய்வு செய்யப்படுவதாக நம்பப்பட்டது. அதன்பின்னர், எம்பிக்கள் எண்ணிக்கை குறைந்த பின்னர், சங்கம் இல்லாமல் காரியம் நடக்காது என்பது புரிந்துகொள்ளப்பட்டது,”
பிரதீப் சிங்கின் கூற்றின்படி, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-க்கும் பாஜகவுக்கும் இடையே நிகழ்ந்த ஒருங்கிணைப்பின் விளைவுகள் ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி தேர்தல் முடிவுகளில் தெரிந்தது.
அவர், “எனவே ஒருவர் இல்லாமல் மற்றொருவர் பணியாற்ற முடியாது என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டதன் 100ஆம் ஆண்டு என்பதால், மோதல் ஏற்படக்கூடிய எந்த ஒரு சர்ச்சையையும் சங்கம் விரும்பவில்லை. ஆனால் அதற்காக அனைத்தும் நன்றாக இருக்கின்றன என்று பொருளல்ல. அனைவரின் பார்வையும் தற்போது பிரதமர் நரேந்திர மோதிக்கும், மோகன் பாகவத்துக்கும் இடையே நடைபெறவுள்ள சந்திப்பின் மீதுதான் இருக்கிறது.” என சொல்கிறார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதீப் சிங் கூறுகையில்,” பிரதமர் நாக்பூருக்கு சென்று அங்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு செல்லாமல் இருந்தால் அது தரும் செய்தி மிகவும் மோசமானதாக இருக்கும். அவர் நாக்பூருக்கு சென்று சங்க அலுவலகத்துக்கும் சென்று, ஆர்.எஸ்.எஸ். தலைவர் அங்கு இல்லாமல் இருந்தால், அந்த செய்தியும் மிக மோசமானதாக இருக்கும். எனவே, விருப்பம் இல்லாவிட்டாலும் கூட இருவரும் கண்டிப்பாக சந்திப்பார்கள்.” என்று தெரிவித்தார்.
இவ்வாறான பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மோதியும் மோகன் பாகவத்தும் அந்த நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டார்கள்.
பாஜக தலைவர் தேர்தல் விவகாரம்
பட மூலாதாரம், ANI
பாஜக தலைவராக ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் ஜனவரி 2023ல் முடிவுக்கு வந்தது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பதவிக்காலத்தை பாஜக ஜூன் 2024 வரை நீட்டித்தது. கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, நட்டா மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், அதே நேரம் அவர் கட்சித் தலைவர் வேலையையும் கவனித்து வந்திருக்கிறார்.
பாஜக அதன் புதிய தலைவரை 2024 டிசம்பர் மாதத்துக்குள் தேர்ந்தெடுக்கும் என நம்பப்பட்டது. ஆனால் இது நடக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் தாமதம் குறித்து அரசியல் விவாதமும் யூகங்களும் தீவிரமடையத் தொடங்கின.
மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி கூறுகையில், “பாஜக வரலாற்றில் ஒரு தலைவர் இவ்வளவு காலம் பதவி நீட்டிப்பில் இருப்பது இது கிட்டத்தட்ட முதல்முறையாக இருக்கலாம். ஏன் அவர் பதவி நீட்டிப்பில் இருக்கிறார். பிராந்திய, மாவட்ட அளாவில் உட்கட்சித் தேர்தல் இன்னும் முடியவில்லை எனவும், 18 மாநிலங்களில் தேர்தலை முடிக்க வேண்டியிருப்பதாகவும் நுணுக்கமான காரணத்தை கூறமுடியும். ஆனால் இது உண்மையில்லை. தேசிய தலைவர் குறித்து ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதுதான் இதன் பொருள்.” என்றார்.
பிரதீப் சிங்கும் இதேபோன்றதொரு கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்.
அவர் கூறுகையில், “கருத்தொற்றுமை எட்டப்படவில்லை என்பது ஒரு காரணம், மற்றொன்று பாஜகவின் கட்சி விதிகளின்படி, பாதி மாநிலங்களில் தேர்தல்கள் முடியும் வரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை தொடங்காது. ஆனால் அது நுட்பமான ஒரு காரணம்தான். இரண்டு தரப்புக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை என்பதுதான் உண்மையான காரணம் என நான் நினைக்கிறேன். காரணம் ஆர்.எஸ்.எஸ். அதன் தரப்பிலிருந்து பெயர்களை தருவதில்லை. எந்தெந்த பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக பாஜக கேட்கும் போது, அதன் பின்னர் அதில் சங்கம் தனது விருப்பு, வெறுப்புகளை தெரிவிக்கும்.” என்றார்.
பாஜக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் தலையீடு எந்த அளவு இருக்கிறது?
பட மூலாதாரம், ANI
ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. பல மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றிபெற அடிமட்ட அளவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இருந்ததே காரணம் என கருதப்படுகிறது.
எனவே, பாஜக விவகாரங்கள் ஆர்.எஸ்.எஸ் தலையீடு எந்தளவு இருக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்.
பாஜகவில் தாங்கள் தலையிடுவதில்லை என்பதுதான் ஆர்எஸ்எஸ்-ன் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்றும் கட்சியின் தினசரி செயல்பாட்டில் அவர்கள் தலையிடுவதில்லை என்பது உண்மைதான் என்றும் மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி சொல்கிறார்.
அகில இந்திய பிரதிநிதிகள் சபை குறித்து பேசிய திரிவேதி, சங்கத்தின் அனைத்து அமைப்புகளை சேர்ந்த முக்கியமானவர்கள் அனைவரும் பங்கேற்கும் கூட்டம் இது என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “பிரதிநிதி சபை கூட்டம் என்பது இந்த அனைத்து அமைப்புகளின் வருடாந்திர தணிக்கை அறிக்கைக்கானது. எனவே, தணிக்கை அறிக்கைக்காக பிரதிநிதிகள் சபை கூட்டத்தை நடத்துகிறீர்கள் என்றால், நீங்கள் அதில் தலையிட உரிமையுள்ளது என்றுதானே பொருள்? நீங்கள் பாஜக, மஸ்தூர் சங்கம், ஏபிவிபி ஆகியவற்றை என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். அல்லது, ஆர்.எஸ்.எஸ். கொள்கை மற்றும் கோட்பாட்டை பின்பற்றுகிறீர்களா? வேலை சரியாக நடத்தப்பட்டிருக்கிறதா இல்லையா? 2024 தேர்தல் முடிவுகள் என்ன? பாஜகவின் வலிமை குறைந்தது ஏன்? இது போன்ற தணிக்கை அறிக்கைகளே உங்களுக்கு தலையிடும் உரிமை இருக்கிறது என்பதை காட்டுகிறது.” என்று தெரிவித்தார்.
விஜய் திரிவேதியை பொருத்தவரை, பாஜக – ஆர்.எஸ்.எஸ் உறவில் முன்னெப்போதையும் விட பாரதிய ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதான் இப்போது ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம்.
அவர் கூறுகையில்,” ஜே.பி. நட்டா சொன்னது தவறல்ல. நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்க்கு ஒரு கோடி தன்னார்வலர்கள் இருக்கின்றனர். பாரதிய ஜனதாவுக்கு 12 கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். இதன் பொருள் ஆர்.எஸ்.எஸ் தவிர அவர்களுக்கு 11 கோடி பேர் இருக்கிறார்கள். எனவே, ஒரு அமைப்பாக பாஜகவின் வலிமை அதிகரித்திருக்கிறது. இரண்டாவது, பாஜக அதிகாரத்தில் உள்ளது.” என்றார்.
பிரதீப் சிங் கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ் பாஜகவில் தலையிட விரும்புகிறது. அதாவது எடுக்கப்படும் கொள்கைகள் முதலில் சங்கத்துடன் ஆலோசிக்கப்பட வேண்டும் என்பது போன்ற தலையீடு. அரசை நடத்துவது எங்கள் வேலை, நீங்கள் அமைப்பை நடத்துங்கள் என பாஜக சொல்கிறது.”
கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ்-க்கு இருந்த செல்வாக்கை குறிப்பிட்ட விஜய் திரிவேதி, “கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து அத்வானி விலகியது ஆர்எஸ்எஸ்-ஆல் நடந்தது. அந்த நேரத்தில் மோகன் பாகவத் பொதுச் செயலாளராக இருந்தார். அவரது அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டது.” என்று தெரிவித்தார்.
“ஆர்எஸ்எஸ் தலையீட்டால், அத்வானியின் அதிருப்தியையும் மீறி 2013-ல் நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார். ஆர்எஸ்எஸ்-ன் தலையீடு அதிகரித்துள்ளது. ஏனென்றால், இப்போது எம்எல்ஏக்கள், துணை வேந்தர்களின் பெயர்களை ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கிறது. பாஜகவில் மாநில அளவிலும் கூட அமைப்பு பொதுச் செயலாளர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பரப்புபவராக இருக்கிறார். அப்படியென்றால் தலையீடு இல்லையென எப்படி சொல்ல முடியும்?” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், ANI
முன்னோக்கி செல்லும் பாதை
கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று பாஜக மத்தியில் அதிகாரத்தில் உள்ளது. அந்த கட்சி பல சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
அதே நேரம், நிறுவப்பட்டு நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் உள்ள ஆர்எஸ்எஸ் சங்கமும் வலுவான நிலையில் உள்ளது. சங்கத்தின் கூற்றுப்படி, ஷாகாவில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாஜகவின் தேர்தல் வெற்றிகளில் சங்கத்தின் அடிமட்ட அமைப்புக்கு ஒரு பெரிய பங்கு இருப்பது ஒன்றும் ரகசியம் அல்ல.
ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவுக்குமான உறவு வரவிருக்கும் காலங்களில் எப்படி இருக்கும்?
பிரதீப் சிங்கின் கூற்றுப்படி ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவுக்கும் இடையிலான உறவு ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது.
“இது ஒரு இணைவாழ்வு உறவு. இரு தரப்பும் பயனடைகின்றன. எனவே இது தொடரும். எந்தவொரு உறவிலும் ஒருவர் மட்டும் பயனடைந்தால், அதில் பிரச்னைகள் எழும். கடந்த மக்களவத் தேர்தலும், அதற்கு பிந்தைய சட்டப்பேரவைத் தேர்தல்களும் சங்கம் இல்லாமல் அவர்களால் இயங்க முடியாது என்பதை பாஜகவுக்கு தெளிவாக தெரிவித்தன”, என்கிறார் அவர்.
“அவர்கள் மூன்றுமுறை தடைகளை சந்தித்தது ஆர்.எஸ்.எஸ்-க்கு தெரியும். அரசு உங்களுடன் இல்லாவிட்டால், பணி செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. அரசு உங்களுடையதாக இருந்து உங்களை ஆதரித்தால் பல அனுகூலங்கள் உள்ளன. எனவே, இப்போதிருக்கும் ஒரே கேள்வி, யார் சொல்வது கேட்கப்படும், அது எவ்வளவு தூரம் கேட்கப்படும் என்பதுதான். அதற்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.”
ஆர்.எஸ்.எஸ்-க்கு எந்த நேரடி அரசியல் நோக்கமும் இல்லை, அதன் நோக்கம் பாஜகவின் மூலம்தான் என்கிறார் சிங். அவர் கூறுகையில், “இன்றும் கூட, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அமைப்பை சேர்ந்த ஒருவர் பாஜகவில் ஒரு அமைச்சராக இருந்தால் அவர் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர். அந்த உறவில் பெரிய மாற்றங்கள் இருக்க முடியாது. அப்படி ஒரு மாற்றத்தால் யாரும் பயனடையப் போவதில்லை, இருவரும் இழப்புகளை சந்திப்பார்கள். எனவே இந்த மேல்-கீழ் நிலை தொடரும்.
அதற்காக எதிர்காலத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்-ன் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் என்றோ, ஆர்எஸ்எஸ் பாஜகவின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் என்றோ அர்த்தமில்லை என்கிறார் பிரதீப் சிங். “பல விஷயங்களில், நீங்கள் என் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம் என பரஸ்பர ஒப்பந்தமாக இருக்கிறது.”
ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு குடும்பம் போன்றது என புரிந்துகொண்டால் இது தெளிவாகும் என்கிறார் விஜய் திரிவேதி.
அவர் கூறுகையில், “ஒரு குடும்பத்தில் நான்கு மகன்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் ஒரு மகன் ஐஏஎஸ் அதிகாரி ஆகிவிட்டால், பெற்றோருக்கு எத்தனை செல்வாக்கு இருக்கிறது?”
திரிவேதியின் கூற்றுப்படி, ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி இடையிலான உறவு இதேபோல் தொடரும், எந்த குடும்பத்தையும் போல் அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு