• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

ஆர்ப்பரிப்புடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 3 சுற்றுகள் முடிவில் 12 பேர் காயம் | Madurai Avaniyapuram Jallikattu 12 injured after 3 rounds

Byadmin

Jan 14, 2025


மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 3 சுற்றுகள் முடிவில், இதுவரை 12 பேர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 4-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் இன்று (ஜன.14) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை மாநகர காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். போட்டி தொடங்கியதில் இருந்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தாவிப்பிடித்தனர். இதனை பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

3 சுற்றுகள் நிறைவு: இதுவரை முடிந்த 3 சுற்றுகளின் முடிவில் 89 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 3-வது சுற்றில் களமிறங்கிய மாடுபிடி வீரர்கள் நீல நிற உடையணிந்து காளைகளை அடக்கினர். இதுவரை நடந்த போட்டியில் சமயநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் 3 காளைகளை அடக்கி முன்னணியில் இருக்கிறார்.

12 பேர் காயம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில், இதுவரை 12 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில், 6 மாடுபிடி வீரர்கள், 5 காளை உரிமையாளர்கள் மற்றும் ஒரு பார்வையாளர் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

13 காளைகள், 5 வீரர்கள் தகுதிநீக்கம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 250 பேர் வந்திருந்த நிலையில், 5 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள், காயம் காரணமாக, 13 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.



By admin