சென்னை: “1949-ல் கட்சித் தொடங்கி, 57-ல் தான் முதல்முறையாக தேர்தல் களத்துக்கே வந்தோம். ஆனால், இன்றைக்கு சில கட்சிகள் தொடங்கியவுடனே, ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்துகொண்டிருக்கிறது. நாங்கள் தான் அடுத்த முதல்வர், அடுத்த ஆட்சி எங்களுடையதுதான் என்று அனாதையான நிலையில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவ்வாறு பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சி இளைஞர்கள் திமுகவில் இணையும் விழா இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் நாதக நிர்வாகிகள் 51 பேர் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “இன்று மாற்றுக்கட்சியில் இருந்து தங்களை இணைத்துக் கொண்டவர்களை திமுக சார்பில் வரவேற்கிறேன்.
ராஜீவ்காந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் திமுகவுக்காக எப்படியெல்லாம் பணியாற்றுகிறார், உழைக்கிறார் என்பதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். மாவட்டச் செயலாளர்கள், கட்சியினர் அவரது பணிகள் குறித்து கூறுவதை எல்லாம் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அவர் திமுகவுக்கு கிடைத்ததை எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
திமுக என்பது ஏதோ நேற்று முளைத்த காளான் இல்லை. 1949-ல் திமுகவை அண்ணா உருவாக்கினார். அப்போது, திமுக என்பது ஆட்சிக்கு வரவேண்டும், பதவியில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். ஏழை எளியவர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்காக உழைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் திமுக தொடங்கப்படுகிறது என்று அண்ணா உறுதியெடுத்து இந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
1957-ல் முதல் தேர்தல் களத்தை சந்தித்தோம். 1949-ல் தொடங்கி, 57-ல் தான் முதல்முறையாக தேர்தல் களத்துக்கே வந்தோம். ஆனால், இன்றைக்கு சில கட்சிகள் தொடங்கியவுடனே, ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்துகொண்டிருக்கிறது. நாங்கள் தான் அடுத்த முதல்வர், அடுத்த ஆட்சி எங்களுடையதுதான் என்று அனாதையான நிலையில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவ்வாறு பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர் யார்? எப்படிப்பட்டவர்? எந்தக் கட்சி? எந்தக்கட்சித் தலைவர்? என்பது பற்றியெல்லாம் நான் கூற விரும்பவில்லை. அவர்களை எல்லாம் அடையாளம் காட்ட நான் தயாராக இல்லை. அதுதான் உண்மை.
அவர்களுடைய பெயரைக் குறிப்பிட்டு இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தை, கவுரவத்தை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் மாற்றுக்கட்சி என்றே கூறினோம். அந்தக் கட்சியின் பெயரைக்கூட கூறுவதற்ககு எங்களுக்கு வாய் வரவில்லை. காரணம் எத்தனையோ கட்சிகள் உள்ளன. அக்கட்சிகளின் பெயர்களை கூறுகிறோம். ஆனால், இந்த கட்சியின் பெயரைச் சொல்ல மறுப்பதற்கு என்ன காரணம்? உண்மையாக அரசியல் கட்சியாகவும், மக்களுக்குப் பாடுபடும் காட்சியாகவும், தமிழர்களுக்காக பாடுபடக்கூடிய கட்சியாக இருந்தால் அக்கட்சியின் பெயரைக் கூறலாம். வேடமிட்டவர்களையும், நாடகம் நடத்துபவர்களையும் நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை.
தேர்தல் களத்தில் ஈடுபடுவதா வேண்டாமா என்பதை அண்ணா, திருச்சியில் நடந்த மாநாட்டில் அங்கு கூடியிருந்த மக்களின் கருத்தைப் பெற்று தேர்தல் களத்தை திமுக சந்தித்தது. 57-ல் நடந்த தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்றோம். 62-ல் நடந்த தேர்தலில் 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தோம். அதைத்தொடர்ந்து 1967-ல் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அண்ணா மறைவுக்குப் பிறகு, கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றார். 5 முறை தமிழக முதல்வராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பிறகு தமிழக மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, 6 வது முறையாக திமுக தலைமையிலான அரசில் நான் முதல்வர் ஆனேன்.
திராவிட மாடல் என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில். மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருக்கும் நீங்கள்தான் திராவிட மாடலுக்கான அடையாளம். திராவிட மாடல் என்று கூறினாலே, சிலருக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆவேசம் வருகிறது. அவர்களுக்கு ஆவேசமும், கோபமும் வரட்டும், நாம் திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டே இருப்போம். அதற்காக மூலையில் சென்று நாங்கள் பயந்து ஒடுங்கிவிடமாட்டோம். நீங்கள் அவ்வாறு சொல்வதால்தான் திமுக மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தரக்குறைவாக பேசபேசத்தான், உங்களிடமிருந்தவர்கள் எல்லோரும் திமுகவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.
தமிழக ஆளுநர் தேவையில்லாத வேலைகளை எல்லாம் செய்கிறார். நம்மை எதிர்த்து பேசிக்கொண்டே இருக்கிறாரே? திராவிடத்துக்கு எதிராகவும், ஆரியத்துக்கு ஆதரவாகவும் பேசிக்கொண்டே இருக்கிறாரே? மதத்தை மையமாக வைத்து பேசிக்கொண்டே இருக்கிறாரே? என்று எல்லாம் வருத்தப்படுவது உண்டு. அவர் பேசட்டும். ஆளுநர் அப்படி பேச பேசத்தான் நமக்கு ஆதரவு அதிகமாகிறது. சிலர் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். இதுவரை நாங்கள் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோமா? நாங்கள் அப்படியொரு தீர்மானமே நிறைவேற்றவில்லை. அவர் இருக்க வேண்டும். அவர் இருந்தால்தான் திமுக இன்னும் வளர்கிறது.
அடுத்த முறையும் ஆளுநர் சட்டப்பேரவைக்கு வர வேண்டும். ஆளுநர் உரையை நாங்கள் கொடுப்போம். அதை அவர் படிக்காமல் வெளியே போக வேண்டும். அதையும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். நான் பிரதமருக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து ஆளுநரை மாற்றிவிடாதீர்கள். அவரே இருக்கட்டும்.
அதேபோன்றுதான், நீங்கள் யாரை நம்பிச் சென்றீர்களோ, அது வீணாகிவிட்டது என்ற வருத்தத்தோடு வந்திருக்கிறீர்களோ, அவர்கள் இன்னும் அதுபோன்று பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பேசிக் கொண்டே இருந்தால்தான், மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். மக்கள் யாரும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் நமது வேலையைப் பார்ப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.