• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

“ஆளுநர் கூறியதை சச்சரவாக்க முயல்வது அரசின் தோல்விகளை மடைமாற்றவே” – அண்ணாமலை விமர்சனம் | “Trying to dispute what the governor said is just to turn the tide of the government’s failures” – Annamalai criticism

Byadmin

Jan 6, 2025


சென்னை: “வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசை ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயல்வது திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது. இன்று, நமது தமிழக ஆளுநர், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது. திமுக அரசுக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த நவம்பர் 23, 1970 அன்று, மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை, மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஓர் அரசாணை மூலம் அறிவித்தார். அரசு தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், 1991 வரை, தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. 1991-ம் ஆண்டு ஜூலை மாதம், ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோதுதான், முதல்முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் நடக்கும் முறையான அரசு நிகழ்ச்சிகளில், ஆளுநர் / துணைநிலை ஆளுநர் வருகையின் போதும், நிகழ்ச்சியிலிருந்து விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு, 1971-ம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆளுநர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin