0
கடந்த தசாப்தங்களில் தமிழகத்தின் அரசியல் – சினிமா – ஆன்மீகம்- தொழில் வளர்ச்சி- சமூக மேம்பாடு – போன்ற துறைகளில் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கி இன்றும் லட்சக்கணக்கான தமிழர்களால் ‘அருளாளர்’ என போற்றப்படும் மறைந்த ஆர். எம். வீரப்பனின் சுயசரிதையை ‘ஆர் எம் வி: தி கிங் மேக்கர் ‘ எனும் பெயரில் ஆவணப்படம் தயாராகி இருக்கிறது. இந்த ஆவண படத்தை சத்யா மூவிஸ் மற்றும் தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட தந்தை பெரியார்- அறிஞர் அண்ணா -புரட்சித் தலைவர் எம்ஜிஆர் – ஆகியோருக்கு நம்பிக்கை அளிக்கும் பின்புலமாக திகழ்ந்தவர் ஆர். எம். வீரப்பன். இவரது ஆக்கப்பூர்வ சிந்தனையால் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி அவருடன் நெருங்கி பழகிய பலரும்.. அவரது தீர்க்கதரிசனத்தை இந்த ஆவணப்படத்தில் விவரித்திருக்கிறார்கள்.
அரிய நிகழ்வுகளின் காணொளிகள் – நேர்காணல்கள் – வரலாற்று பூர்வ தகவல்கள் – ஆகியவற்றை கொண்டதாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப் படத்தை பற்றி, இதன் தயாரிப்பாளரும், ஆர் எம் வீரப்பனின் வாரிசுமான தங்கராஜ் வீரப்பன் பேசுகையில், ” தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறோம். அவரின் பாரம்பரியம் – பண்புகள் – சமூகப் பணிகள் – ஆகியவற்றை இதில் நேர்காணல்கள் மூலமாகவும், காணொளி காட்சிகள் மூலமாகவும் விவரித்திருக்கிறோம் ” என்றார்.
இந்த ஆவண படத்தை இயக்கிய இயக்குநர் பினு சுப்பிரமணியம் பேசுகையில், ” ஆர். எம். வீரப்பனை பற்றிய உண்மையையும், வரலாறையும் எளிமையாகவும், ஆழமாகவும் பதிவு செய்திட வேண்டும் என்பதற்காகவும்… அடுத்த தலைமுறைக்கு இவரைப் போன்றதொரு சமூக முன்னேற்ற சிந்தனையாளரை பற்றிய வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இதனை உருவாக்க திட்டமிட்டோம்.
முப்பது மணி தியாலத்திற்கும் மேற்பட்ட இந்த ஆவண படத்தை பார்வையாளர்களுக்கு நேர்த்தியாகவும் தொய்வில்லாமலும் அவருடைய முழு வரலாறையும் விவரித்திடும் வகையில் இரண்டு மணி தியாலம் ஏழு நிமிடங்கள் வரையிலான ஆவண படைப்பாக தொகுத்திருக்கிறோம். ” என்றார்.
ஆர் எம் வீரப்பன் பற்றிய இந்த ஆவணப்படத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர்- தொல் திருமாவளவன்- ஜெகத் ரட்சகன்- தமிழச்சி தங்கபாண்டியன்- முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏசி சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், முன்னாள் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ. கு. தமிழரசன், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி என பல்வேறு அரசியல் இயக்கங்களை சார்ந்த அரசியல்வாதிகள்….
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, சரத்குமார், சத்யராஜ், இயக்குநர்கள் எஸ்பி முத்துராமன் , சுரேஷ் கிருஷ்ணா, பி. வாசு, பாடலாசிரியர்கள் வாலி, ஆர். முத்துலிங்கம், வைரமுத்து, ஊடகவியலாளர்கள் எஸ் .விஜயன், ரங்கராஜ் பாண்டே, ரவீந்திரன் துரைசாமி, தொழிலதிபர்கள் பழனி ஜி. பெரியசாமி, நல்லி குப்புசாமி கல்வியாளர்கள் ஆர். எஸ். முனிரத்னம் , சமய சொற்பொழிவாளர் சாரதா நம்பி ஆரூரன், ஆன்மீக மடாதிபதிகள் காஞ்சி சங்கராச்சாரியார், தருமபுர ஆதீனம், வரலாற்று ஆய்வாளர் ரா. கண்ணன், இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் ஆர். எம். வீரப்பனின் பன்முக திறன் மற்றும் ஆளுமையையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆவணப்படம் சாதனை படைத்த ஆர் எம் வீரப்பனின் சவாலான வாழ்வியலை விவரிப்பதுடன் அடுத்த தலைமுறைக்கு ஒப்பற்ற முன்னுதாரணமாகவும் திகழ்கிறது.