• Tue. Mar 18th, 2025

24×7 Live News

Apdin News

ஆவினுக்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு தரவேண்டிய ஊக்க தொகையை அரசு வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல் | G K Vasan says govt should immediately pay the incentive amount due to farmers

Byadmin

Mar 18, 2025


சென்னை: ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய ஊக்கத்தொகையை அரசு உடனடியாக வழங்கி, அவர்களின் நலன் காக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். சுமார் 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கின்றனர்.

விவசாயிகளிடம் இருந்து தினசரி 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 35 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவனம் சிறு, குறு விவசாயிகளுக்கு பேருதவியாக செயல்பட வேண்டும்.

ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ. 3 ஊக்கத்தொகையை காலத்தே வழங்க வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என தாமதமாக வழங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஊக்கத்தொகையை 4 மாதமாக தமிழக அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதால் சாதாரண விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊக்கத்தொகையை உடனடியாக கொடுக்காத பட்சத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆவின் நிறுவன வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ரூ.120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி, சுமார் 8 லட்சம் விவசாயிகளின் நலனை தமிழக அரசு காக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.



By admin