• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்கவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் | Mano Thangaraj explains aavin milk is not being sold at a higher price

Byadmin

May 22, 2025


சென்னை: ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார். ஆவின் முகவர்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களுக்கு உறைகலன் (ஃப்ரீசர் பாக்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 320 மற்றும் 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட உரைகலன்களை 60 பயனாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: ஆவின் நிறுவனம் 2 நோக்கங்களை கொண்டு பணியாற்றுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை வழங்கி கொள்முதல் செய்கிறது. பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க உறுதி செய்கிறது. பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்ய 10,000-க்கும் மேற்பட்ட முகவர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இதை மேலும் உயர்த்த முயற்சி செய்யப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, ரூ.2.10 கோடி செலவில் 600 தொழில் முனைவோர்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக 60 பேருக்கு ஃப்ரீசர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஆவின் விற்பனையை பெருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.மீதமுள்ள பயனாளிகளுக்கு அடுத்தடுத்த கட்டங்களில் ஃபிரீசர் பாக்ஸ் வழங்கப்படும்.

ஆவின் பொருட்கள் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு கடந்தாண்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்யப்படவில்லை. ஆவின் பொருட்கள் மட்டுமல்ல, எந்த பொருளும் எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது. அப்படி விற்கும் பட்சத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

தற்போது ஒரு நாளைக்கு 33.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட ஆவின் பொருட்கள் இருக்கிறது. தேவை ஏற்பட்டால் புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்படும்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பதை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்ச்சித்துள்ளார். இக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பதை பாராட்ட வேண்டும். என்னென்ன விஷயங்களை முன் வைக்க வேண்டும் என்று கருத்து இருந்தால் சொல்ல வேண்டும். நிதி ஆயோக் கூட்டத்தில் குடும்ப கதையை யாரும் பேச முடியாது.

நிதியை பற்றி தான் பேச முடியும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியி்ல், கால் நடை பராமரிப்பு, பால்வளத்துறை செயலர் சுப்பையன், ஆவின் மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.



By admin