• Sun. Apr 12th, 2026

24×7 Live News

Apdin News

ஆஷா போஸ்லே: சொந்த சகோதரியான லதா மங்கேஷ்கரின் நிழலில் இருந்து மீண்டு தனி அடையாளம் பெற்றது எப்படி?

Byadmin

Apr 12, 2026


ஆஷா போஸ்லேவுக்கு 92 வயது (கோப்புப் படம்)

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஆஷா போஸ்லேவுக்கு 92 வயது (கோப்புப் படம்)

உடல் மறைந்துவிடும், ஆனால் சில குரல்கள் காற்றில் தங்கிவிடுகின்றன, வெகுதூரம் வரை, வெகுநேரம் வரை, சில நேரங்களில் என்றென்றும்.

காலம் மாறியது, காட்சிகள் மாறின, தலைமுறைகள் மாறின, திரையில் நாயகிகள் மாறினர், ஆனால் ஆஷா போஸ்லேவின் குரல் எப்போதும் இளமையாகவே இருந்தது.

ஆனால், அவரது குரலில் உள்ள துள்ளல் மற்றும் குறும்புத்தனமான பாடல்களைக் குறிப்பிடும்போது, அவரது நீண்ட மற்றும் கடினமான போராட்டத்தைப் பற்றிய பேச்சு பெரும்பாலும் குறைவாகவே உள்ளது.

உண்மை என்னவென்றால், தனது அபூர்வமான திறமை இருந்தபோதிலும், ஆஷா போஸ்லே ‘இரண்டாம் இடம்’ என்பதோடு திருப்தி அடைய வேண்டியிருந்தது, ஏனெனில் இந்தித் திரைத்துறையில் ‘முதல் இடத்தில்’ அவரது சொந்த சகோதரியும், மாபெரும் இசை மேதையுமான லதா மங்கேஷ்கர் இருந்தார்.

இந்தித் திரைப்பின்னணிப் பாடகர்களின் வானில் லதா என்ற சூரியனின் பிரகாசத்திற்கு முன்னால், தனக்கென ஒரு தனிச் சுடரை ஏற்ற வேண்டும் என்பது ஆஷாவின் பிடிவாதமாக இருந்தது. அந்தக் காலத்தில் இது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. ஆனால் தனது பிடிவாதம் மற்றும் இணையற்ற திறமையின் பலத்தால், ஆஷா அந்த நிழலில் இருந்து வெளியே வந்து, இசை வானில் தனக்கென ஒரு முழுமையான இடத்தை உருவாக்கினார்.

இசை பாரம்பரியம் மற்றும் போராட்டத்தின் தொடக்கம்

2008-ஆம் ஆண்டு மும்பையில் தனது சகோதரர் இதயநாத் மங்கேஷ்கரின் (நடுவில் இருப்பவஇருப்பவர்) 72-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விழாவில் ஆஷா போஸ்லே (இடது) மற்றும் லதா மங்கேஷ்கர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, 2008-ஆம் ஆண்டு மும்பையில் தனது சகோதரர் இதயநாத் மங்கேஷ்கரின் (நடுவில் இருப்பவஇருப்பவர்) 72-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விழாவில் ஆஷா போஸ்லே (இடது) மற்றும் லதா மங்கேஷ்கர்.

இசையுடனான ஆஷாவின் தொடர்பு சிறுவயதிலேயே ஏற்பட்டுவிட்டது. அவரது தந்தை தீநாநாத் மங்கேஷ்கர் சாஸ்திரிய இசையில் வல்லுநர் மற்றும் மராத்தி நாடக உலகின் ஒரு மரியாதைக்குரிய ஆளுமை. அவரது ஐந்து குழந்தைகளான லதா, மீனா, ஆஷா, உஷா மற்றும் மகன் ஹிருதயநாத் ஆகியோருக்கு இடையே ஸ்வரங்களின் சர்கம் சிறுவயதிலிருந்தே எதிரொலித்தது. சிறுவயது நாட்களில் லதா மற்றும் சிறுமி ஆஷாவின் கூட்டணி பிரிக்க முடியாததாக இருந்தது. ஆஷா தனது அக்காவுக்குப் பின்னால் ஒரு நிழலைப் போலவே நடப்பார்.

ஆனால் ஆஷாவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, தந்தை காலமானார். தந்தை மறைந்ததால் மங்கேஷ்கர் குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. வாழ்வாதாரத்தைத் தேடி குடும்பம் புணே மற்றும் கோலாப்பூரில் இருந்து 1945-ல் அன்றைய பம்பாய் வந்து குடியேறியது.

இங்கே 14 வயது லதா முழுக் குடும்பத்தின் பொறுப்பையும் தன் தோள்களில் சுமந்து, திரையுலகின் கடினமான பாதைகளில் தனது போராட்டத்தைத் தொடங்கினார்.

விரைவிலேயே ஆஷாவும் அவரது போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

முதல் படி மற்றும் வெற்றியின் கண்ணாமூச்சி

ஆஷா போஸ்லே (கோப்புப் படம்)

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஆஷா போஸ்லே (கோப்புப் படம்)

1948 ஆம் ஆண்டு ‘சுனரியா’ படத்தின் மூலம் ஆஷா பின்னணிப் பாடல் உலகில் கால் பதித்தார். கீதா தத் மற்றும் ஷம்ஷாத் பேகமுடன் இணைந்து தனது முதல் பாடலான ‘சாவன் ஆயா ரே’ பாடினார். சரியாக ஒரு வருடம் கழித்து, 1949-ல் ‘ராத் கி ராணி’ படத்தின் மூலம் அவருக்கு முதல் தனிப் பாடல் கிடைத்தது.

இதே ஆண்டுதான் அக்கா லதா மங்கேஷ்கருக்கு ஒரு ‘திருப்புமுனையாக’ அமைந்தது. ‘மஹால்’ படத்தின் ‘ஆயேகா ஆனேவாலா’ பாடல் லதாவை ஒரே இரவில் வெற்றியின் உச்சிக்குக் கொண்டு சென்றது, அங்கிருந்து அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. 1950-களில் லதா வேகமாக வெற்றியின் ஏணிகளில் ஏறத் தொடங்கினார். நௌஷாத், சி. ராமச்சந்திரா, சங்கர்-ஜெய்கிஷன் மற்றும் எஸ்.டி. பர்மன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் முதல் தேர்வாக அவர் மாறினார்.

லதாவின் உயரம் மற்றும் ஆஷாவின் கடும் முயற்சி

ஆஷா போஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கர்  (கோப்புப் படம்)

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஆஷா போஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கர் (கோப்புப் படம்)

லதா இந்தி பின்னணிப் பாடலில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த நிலையில், ஆஷா கடும் உழைப்பிற்குப் பிறகும் அந்த இடத்தை அடைய முடியாமல் தவித்தார். அக்காலத்தில் ஆஷாவுக்கு குறைந்த பட்ஜெட் படங்களில் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தன. அவர் ஏ.ஆர். குரேஷி, சஜ்ஜாத் ஹுசைன் மற்றும் சர்தார் மாலிக் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்தாலும், பெரிய இசையமைப்பாளர்களும் பிரதானமான பெரிய பேனர்களும் அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தன.

ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய திரைப்பட வரலாற்றாசிரியர் ராஜு பாரதன், அவரது ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்து ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்: “ஆரம்பத்தில் ஆஷா போஸ்லே ஒரு அதிசயப் பிறவி அல்ல. அவர் வெறும் ஒரு ‘போராளி’தான். அவர் வேலைக்காகப் போராடுவதை நான் பார்த்திருக்கிறேன். தயாரிப்பாளர்களால் லதாவை ஒப்பந்தம் செய்ய முடியாவிட்டால், அவர்களின் அடுத்த தேர்வு கீதா தத் அல்லது ஷம்ஷாத் பேகமாகத்தான் இருக்கும். அந்தப் பட்டியலில் ஆஷாவின் பெயர் எங்குமே இருக்காது. எனவே, அவருக்குக் கிடைத்தது எதுவோ, அதை அவர் பாடினார். அவருடன் இருந்த ஒரு சிக்கல் அவரது ‘மராத்தி கலந்த ஹிந்தி’ மற்றும் உச்சரிப்பு; லதாவைப் போல அவர் தனது உருது மொழியை மேம்படுத்துவதில் அந்த அளவு உழைக்கவில்லை. இது தவிர, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் திருமண வாழ்க்கையும் மிகவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தது.”

ராஜு பாரதன் குறிப்பிட்ட அந்தத் தனிப்பட்ட நிகழ்வு, ஆஷாவுக்கு பதினாறு வயதாக இருந்தபோது நடந்தது. அவர் 31 வயது கணபத்ராவ் போஸ்லேவுடன் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக எடுத்த இந்த முடிவு, இரு சகோதரிகளுக்கும் இடையிலான உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்தியது, அது பல ஆண்டுகளாக மறையவே இல்லை.

லதா மங்கேஷ்கர் இந்த உறவு தனது தங்கைக்கும் சரியானது அல்ல என்று கருதினார். ஆஷா போஸ்லே, “லதா தீதி இந்தத் திருமணத்திற்கு முற்றிலும் எதிராக இருந்தார். ஒரு காலம் இருந்தது, எங்கள் உறவு மிகவும் கசப்பாக மாறி, பல ஆண்டுகளாக எங்களுக்குள் பேச்சுக் கூட இல்லாமல் இருந்தது,” என ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டார்,

கணபத்ராவ் போஸ்லேவுடனான திருமணம் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு ஒரு பேரழிவாகவே அமைந்தது. ஆஷா போஸ்லே அந்த நாட்களை நினைவு கூர்ந்து எழுதினார், “அது ஒரு பாரம்பரியமான குடும்பம், அவர்களுக்கு ஒரு ‘பாடும் நட்சத்திரம்’ மருமகளாக இருப்பது பிடிக்கவில்லை. என் கணவர் மிகவும் மோசமான குணம் கொண்டவர், ஒருவேளை மற்றவர்களுக்கு வலியைத் தருவதில் அவர் மகிழ்ச்சி அடைந்தார் போலும். ஆனால் வெளியே யாருக்கும் இது பற்றித் தெரியாது.”

மன அழுத்தம் மற்றும் கொந்தளிப்பு நிறைந்த இந்த ஆண்டுகளில் ஆஷாவின் வாழ்க்கையும் பெரிய அளவில் முன்னேறவில்லை. ஆனால் லதா இந்த ஆண்டுகளில் வெற்றியின் உச்சிக்குச் சென்றிருந்தார்.

ஓ.பி. நய்யார் மற்றும் எஸ்.டி. பர்மனின் உதவி

எஸ்.டி. பர்மன்

பட மூலாதாரம், khagesh dev burman

படக்குறிப்பு, எஸ்.டி. பர்மன்

ஆஷாவின் வாழ்க்கைக்கு ஆரம்பகால வலிமையை பிமல் ராயின் ‘பரிணீதா’ (1953) மற்றும் ராஜ் கபூரின் ‘பூட் பாலிஷ்’ (1954) பாடல்கள் வழங்கின. ஆனால் அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது இசையமைப்பாளர் ஓ.பி. நய்யாரைச் சந்தித்தபோதுதான். லதா இல்லாமலும் தன்னால் சூப்பர் ஹிட் இசை வழங்க முடியும் என்று நய்யார் நம்பினார். லதாவும் அவருடன் பணிபுரியவில்லை. நய்யாரின் ஆரம்பகால தேர்வு கீதா தத், ஆனால் ‘சி.ஐ.டி.’ படத்திற்குப் பிறகு அவரது இசையில் ஆஷா போஸ்லே இடம் பிடித்தார்.

அவர் ஆஷாவின் குரலில் உள்ள கீழ்நிலைச் ஸ்வரங்களின் ஆழத்தை உணர்ந்து, ‘நயா தௌர்’ (1957) மூலம் ஒரு வரலாற்றைப் படைத்தார். ‘உடே ஜப்-ஜப் ஜுல்பே தேரி’ மற்றும் ‘மாங் கே சாத் தும்ஹாரா’ போன்ற பாடல்கள் ஆஷாவை முதன்முதலில் படத்தின் நாயகியின் குரலாக மாற்றியதுடன், அவரை பி.ஆர். சோப்ரா போன்ற பெரிய முகாம்களின் ஒரு அங்கமாக மாற்றின.

அதே ஆண்டு (1957), இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மனுக்கும் லதா மங்கேஷ்கருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு ஆஷாவுக்கு வெற்றியின் புதிய கதவுகளைத் திறந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எஸ்.டி. பர்மன் லதாவுடன் பணியாற்றாதபோது, ஆஷா அவரது முகாமின் முதன்மைப் பாடகியாக உருவெடுத்தார். திரைப்பட வட்டாரங்களிலும் இதழ்களிலும் இது குறித்து லதா தன் தங்கை மீது மிகவும் கோபமாக இருந்தார் என்ற பேச்சு பரவலாக இருந்தது. ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் ஆஷா தனது திறமையை நிரூபித்தார்.

எஸ்.டி. பர்மன், கிஷோர் குமார், ஆஷா போஸ்லே மற்றும் பாடலாசிரியர் மஜ்ரூ சுல்தான்புரி ஆகிய நால்வர் கூட்டணி காதல் மற்றும் துள்ளலான பாடல்களின் புதிய சகாப்தத்தைத் தொடங்கியது. ‘ஹால் கைசா ஹை ஜனாப் கா’ (சல்தி கா நாம் காடி), ‘ஆங்கோ மே க்யா ஜி’, ‘சோட் தோ ஆஞ்சல்’ (பேயிங் கெஸ்ட்) மற்றும் ‘தீவானா மஸ்தானா ஹுவா தில்’ (பம்பாய் கா பாபு) போன்ற மறக்க முடியாத பாடல்களை மக்கள் இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.

எஸ்.டி. பர்மன் ஆஷாவை வெறும் துள்ளல் மற்றும் குறும்புத்தனத்தோடு மட்டும் நிறுத்தாமல், அவரது குரலின் ஆழத்தையும் செதுக்கினார். ‘காலா பாணி’ திரைப்படத்தில் ஆஷாவின் ‘அச்சா ஜி மே ஹாரி’ போன்ற குறும்புத்தனமான காதல் பாடலும் இருந்தது, ‘நசர் லகி ராஜா தோரே பங்லே பர்’ போன்ற தும்ரி பாணியிலான பாடலும் இருந்தது. அதே சமயம் ‘சுஜாதா’ மற்றும் ‘லாஜ்வந்தி’ போன்ற படங்களில் மிகவும் ஆழமான மற்றும் தீவிரமான பாடல்களைப் பாட வைத்து, ஆஷா எல்லா வண்ணங்களிலும் வல்லவர் என்பதை அவர் நிரூபித்தார்.

நய்யார்: நெருக்கம் மற்றும் புதிய அடையாளம்

ஓ.பி. நய்யார் மற்றும் எஸ்.டி. பர்மனுடனான இந்த காலம் ஆஷாவுக்கு வேலைக்காக மட்டுமல்லாமல், தனது தனித்துவமான அடையாளத்தைச் செதுக்குவதற்கான ஒரு பொற்காலமாகும். ஆனால் இந்தப் பிரகாசத்திற்குப் பின்னால் ஒரு தனிப்பட்ட இருளும் இருந்தது.

1960-ல், மூன்று குழந்தைகளுடன் ஆஷாவின் திருமணம் ஒரு சோகமான முடிவுக்கு வந்தது. இந்தச் சிக்கல்களுக்கு இடையில், இசையமைப்பாளர் ஓ.பி. நய்யாருடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம் திரைப்பட வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. லதாவும் நய்யாரும் தனித்தனி பாதையில் இருந்ததால், ஆஷா நய்யாருக்கு நெருக்கமானது இரு சகோதரிகளுக்கும் இடையிலான கசப்பை இன்னும் அதிகரித்தது.

இருப்பினும், ஆஷாவின் வாழ்க்கையில் இது ஒரு சிறந்த காலமாக அமைந்தது. இந்த ஜோடி இந்தி இசைக்கு ‘ஆயியே மெஹர்பான்’ (ஹவுரா பிரிட்ஜ்), ‘ஆவோ ஹுசூர் தும்கோ’, ‘கஜ்ரா மொஹப்பத் வாலா’ (கிஸ்மத்) மற்றும் ‘யே ஹை ரேஷ்மி ஜுல்போம் கா அந்தேரா’ (மேரே சனம்) போன்ற காலத்தால் அழியாத பாடல்களை வழங்கியது.

ஆஷாவை லதாவின் நிழலில் இருந்து வெளியே கொண்டு வந்து, ஒரு ‘வித்தியாசமான பாணி கொண்ட பாடகியாக நிலைநிறுத்திய பெருமை ஓ.பி. நய்யாரையே சாரும். ஆஷா போஸ்லே ஓ.பி. நய்யாருடன் இணைந்து 60 படங்களில் 324 பாடல்களைப் பாடினார், அதாவது ஒவ்வொரு படத்திலும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட பாடல்கள்.

ஆனால் வெற்றிகரமான பாடல்களின் நீண்ட பட்டியல் இருந்தபோதிலும், ஹிட் பாடல்கள் இருந்தபோதிலும், இசை உலகின் ஒவ்வொரு பெரிய பாதையும் இன்னும் லதாவின் குரல் வழியாகவே கடந்து சென்றது. ஆஷா தனது இடத்தை உருவாக்கிக் கொண்டாலும், ஹிந்திப் பின்னணிப் பாடல் உலகில் லதா மங்கேஷ்கரின் ஏகபோக ஆட்சி நீடித்தது.

1950 மற்றும் 60-களில் இசை உலகில் லதாவின் ஆதிக்கம் எப்படி இருந்தது என்றால், அவர் ஒரு பாடலுக்கு 500 ரூபாய் வாங்கினார், அதே சமயம் ஆஷா வெறும் 100-150 ரூபாயிலேயே திருப்தி அடைய வேண்டியிருந்தது என ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை வரலாற்றில் ராஜு பாரதன் எழுதியுள்ளார்.

எதைப் பாட வேண்டும், யாருக்காகப் பாட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் லதாவிடம் இருந்தது, ஆஷாவிடம் அத்தகைய வாய்ப்பு இல்லை. இந்த பாகுபாடு அவரை உள்ளூர பாதித்தது. தமக்கையின் பாராமுகமும் ஆதரவின்மையும் இடைவெளியை அதிகரித்தது. ஆஷா இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார், தனது சொந்த பலத்தால் தன்னை நிரூபித்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தார்.

சகோதரிகளின் இந்த பரஸ்பர மோதல் மற்றும் பொறாமையின் எதிரொலி சினிமாத் திரையிலும் எதிரொலித்தது. இயக்குநர் சாய் பரஞ்பே தனது ‘சாஸ்’ (1997) படத்தில் இசை உலகில் இரு சகோதரிகளின் இந்தக் கதையைத் திரையில் கொண்டு வந்ததாகக் கருதப்படுகிறது.

பர்மனும் ஆஷாவும்

ஒரு பாடல் பதிவின் போது ஆஷா போஸ்லேயுடன் ஆர்.டி. பர்மன்

பட மூலாதாரம், Pancham Unmixed

படக்குறிப்பு, ஒரு பாடல் பதிவின் போது ஆஷா போஸ்லேவுடன் ஆர்.டி. பர்மன்

எஸ்.டி. பர்மனுடன் பணிபுரியும் போதே ஆஷா அவரது மகன் ஆர்.டி. பர்மனை (பஞ்சம்) சந்தித்தார். வயதில் இளையவரான பஞ்சம், தனது தந்தையின் பாரம்பரியத்திற்கு இடையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தார். வரும் ஆண்டுகளில் இந்த ஜோடி ஸ்வரங்களின் புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது என்று யாரும் ஊகிக்கவில்லை.

1966 ஆம் ஆண்டு நசீர் ஹுசைனின் ‘தீஸ்ரி மன்ஸில்’ படத்துடன் அவர்களின் முதல் தொழில்முறை ஒத்துழைப்பு தொடங்கியது. இங்கிருந்துதான் அந்த ஆக்கபூர்வமான கூட்டணியின் அடித்தளம் அமைக்கப்பட்டது, இது இந்தித் திரைப்பட இசையின் தன்மையையே மாற்றியது. ஒருபுறம் ‘ஓ மேரே சோனா ரே’ என்ற காதலின் இனிமை இருந்தது, மறுபுறம் ‘ஓ ஹசீனா ஜுல்ஃபோம் வாலி’ என்ற புயல் வேகம் இருந்தது, இதில் ஆஷா தனது சுவாசத்தை ஒரு மந்திரக் கட்டுப்பாட்டுடன் ஸ்வரங்களில் கட்டிப்போட்ட விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆர்.டி. பர்மன் திரையுலகிற்கு வந்தபோது, அவரது மனதில் உலகம் முழுவதிலும் உள்ள இசை இருந்தது. அவர் ஹிந்தி சினிமாவில் ஃபங்க், ஜாஸ், கேபரே மற்றும் ராக்-என்-ரோல் ஆகியவற்றை முயற்சிக்க விரும்பினார். ஆனால் இந்தச் சிக்கலான மெட்டுகளைப் பாட அவருக்கு ஒரு நெகிழ்வான குரல் தேவைப்பட்டது, அது ஆபத்துக்களை எதிர்கொள்ளும் தைரியம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆஷா போஸ்லே அந்த குரலாக அமைந்தார்.

பஞ்சம் தனது இசையில் மேற்கத்தியத் தன்மையைப் புகுத்தினார், ஆஷாவின் குரல் அந்த இசையில் ஒரு துணிச்சலான ஈர்ப்பு மற்றும் சுதந்திரமான சிந்தனையின் புதிய வண்ணங்களை நிரப்பியது. ஆனால் பஞ்சமின் பார்வை வெறும் சத்தம் போடும் பாடல்களோடு மட்டும் நின்றுவிடவில்லை; ஆஷாவின் குரலில் இதுவரை உலகம் கேட்டிராத அந்த விஸ்தாரத்தையும் அவர் அடையாளம் கண்டார்.

ஒருபுறம் ‘பியா தூ அப் தோ ஆஜா’ (காரவன்) மற்றும் ‘தம் மாரோ தம்’ (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா) ஆஷாவை ஒரு ‘கேபரே குயின்’ அல்லது நவீன ‘வெஸ்டர்ன் வைப்’ கொண்ட பாடகியாக நிலைநிறுத்தியது, மறுபுறம் ‘இஜாசத்’ (1987) திரைப்படத்தில் இந்த ஜோடி ‘மேரா குச் சாமான்’ மற்றும் ‘காலி ஹாத் ஷாம் ஆயி ஹை’ போன்ற பாடல்கள் மூலம் கவிதையின் வலியை எவ்வளவு அமைதியாக வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. குறிப்பாக ‘மேரா குச் சாமான்’ பாடலில் ஆஷா எந்த ஒரு முறையான தாளமும் இல்லாமல், அந்த உரைநடை போன்ற கவிதையை எவ்வளவு ஆன்மீகத் தன்மையுடன் பாடினார் என்பது இன்றும் பாடும் கலைக்கான ஒரு பாடசாலையாகக் கருதப்படுகிறது.

பஞ்சமின் இந்த படைப்புகளில் ஆஷா தன்னை ஒவ்வொரு அச்சுக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொண்டார், அது கேபரேவின் குறும்புத்தனமாக இருக்கட்டும், கஜலின் நிதானமாக இருக்கட்டும் அல்லது சாஸ்திரிய இசையின் சிக்கலானதாக இருக்கட்டும். குரலின் வண்ணங்களை மாற்றும் அவரது அபூர்வமான திறமைக்கு இசை உலகில் ஈடு இணை இல்லை என்பதை அவர் காட்டிவிட்டார்.

ஸ்வரங்களின் புதிய பாதை… ஆஷா ‘உம்ராவ் ஜான்’ ஆனபோது

ஆஷா போஸ்லே மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஆஷா போஸ்லே மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் (கோப்புப் படம்)

ஆனால் விதி அவருக்கு மற்றொரு சவாலைத் தேர்ந்தெடுத்திருந்தது, ஆஷாவின் குரலில் ஏற்பட்ட அந்த மாற்றம் அவரை ஒரு பாடகியிலிருந்து ஒரு ‘லெஜண்ட்’ ஆக மாற்றியது.

அதுவரை இந்திப் படத்தில் கஜல் என்றால் லதா மங்கேஷ்கர் மட்டும்தான் என்று கருதப்பட்டது. முசாஃபர் அலியின் ‘உம்ராவ் ஜான்’ படத்திற்காக இசையமைப்பாளர் கய்யாம் முன்னால் ‘பாகீசா’ போன்ற மாபெரும் பாரம்பரியத்திற்கு முன்னால் ஒரு புதிய கோட்டை வரைவதற்கான சவால் இருந்தது. கய்யாம் ஒரு துணிச்சலான முடிவை எடுத்து ஆஷா போஸ்லேவைத் தேர்ந்தெடுத்தார், ஆனால் ஒரு கடுமையான நிபந்தனையுடன்: “எங்களுக்குப் பாடல்களில் ‘ஆஷா’ வேண்டாம்.” அதாவது, ஆஷா தனது வழக்கமான துள்ளல் மற்றும் குறும்புத்தனத்தை விட்டுவிட்டு, ஒரு நிதானமான சாஸ்திரியப் பாணியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

ஆஷா தனது குரலை ஒன்றரை சுருதி குறைத்துப் பாட வேண்டும் என்று கய்யாம் விரும்பினார். இவ்வளவு குறைந்த சுருதியில் பாடுவது ஆஷாவுக்கு முற்றிலும் புதிய மற்றும் அச்சமூட்டும் ஒன்றாக இருந்தது. எட்டு நாட்களின் கடினமான பயிற்சிக்குப் பிறகு ரெக்கார்டிங் தொடங்கியபோது, ஒரு தருணத்தில் ஆஷாவின் தைரியம் குறையத் தொடங்கியது. அவரால் பாட முடியாது என்று அவர் நினைத்தார்.

ஆனால் ரெக்கார்டிங் முடிந்ததும் ஆஷா தன்னையே கேட்டபோது பிரமித்துப் போனார். ‘தில் சீஸ் க்யா ஹை’, ‘இன் ஆங்கோ கி மஸ்தி கே’ மற்றும் ‘யே க்யா ஜகா ஹை தோஸ்தோம்’ போன்ற காலத்தால் அழியாத கஜல்கள் உலகிற்கு ஆஷாவின் குரலில் உள்ள அந்த மென்மையான மற்றும் ஆழமான பக்கத்தைக் காட்டின, அதுவரை இது பற்றி யாருக்கும் தெரியாது. இதன் முடிவு வரலாற்றில் பதிவாகியுள்ளது. உம்ராவ் ஜான் படத்திற்காக கய்யாம் மற்றும் ஆஷா போஸ்லே இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது, இசைக்கருவிகள் மாறிக் கொண்டே இருந்தன, ஆனால் ஆஷாவின் குரலில் இருந்த ஆற்றல் மட்டும் என்றும் குறையவில்லை. பிற்கால ஆண்டுகளில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து ‘ரங்கீலா’, ‘லகான்’ மற்றும் ‘தால்’ போன்ற படங்களில் தனது குரலில் வயது என்ற ஒன்று கிடையாது என்பதை அவர் மீண்டும் நிரூபித்தார்.

அவரது காலத்து பாடகர்கள் பலரும் இசையின் மாறிவரும் வடிவம் மற்றும் ரீமிக்ஸ் குறித்து வருத்தப்பட்டபோது, ஆஷா புதிய காலத்தை மனதார வரவேற்றார். அவர் தனது பழைய பாடல்களின் ரீமிக்ஸ் ஆல்பங்களை வெளியிட்டு, புதிய தலைமுறைக்கு அந்த மாயாஜால இசையை அறிமுகப்படுத்தினார்.

ஆஷா போஸ்லேவின் பயணம் முட்கள் நிறைந்ததாக இருந்தது, தனது சொந்த சகோதரியின் பிரம்மாண்ட நிழலில் இருந்து வெளியே வர அவர் பெரும் போராட்டம் நடத்தினார், ஆனால் இறுதியில் அவரது பிடிவாதம் வென்றது. அவர் எல்லா வண்ணங்களிலும் பொருந்தக்கூடிய ஒரு முழுமையான கலைஞர் என்பதை உலகுக்குக் காட்டினார். நேற்றும் இளமையாக இருந்த, இன்றும் துள்ளல் குறையாத அவரது குரல் எல்லா காலங்களிலும் ஆன்மாவைத் தொட்டுக்கொண்டே இருக்கும்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin