1
ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டிற்கான இஸ்ரேலிய தூதர் அமீர் மைமோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிசெம்பர் 14ஆம் திகதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், கடந்த 30 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்திய இஸ்ரேலிய தூதர், இந்தச் சம்பவம் தன்னை ஆழமாக பாதித்துள்ளதாகவும், மனம் உடைந்துவிட்டதாகவும் தெரிவித்தார். கடந்த 16 மாதங்களாக ஆஸ்திரேலியாவில் யூத விரோதச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யூதர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சிட்னியின் போண்டாய் கடற்கரையில் நடைபெற்ற இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள், இன்று (17) நடைபெறவுள்ளன. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இரண்டு யூத சமயத் தலைவர்களின் இறுதிச் சடங்குகளில் பெரும் மக்கள் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அழைப்பு விடுக்கப்பட்டால் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதாக பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சஜித் அக்ரம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சஜித் அக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன்களில் ஒருவரான நவீட், தற்போது நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.