பட மூலாதாரம், Getty Images
கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் வென்றதில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் நாளை (மார்ச் 04) ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.
இந்திய அணிக்கு சாதகமான அம்சங்கள் என்ன? காத்திருக்கும் சவால்கள் என்ன?
சாதகமான அம்சங்கள்
இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வலுவாக இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையில் வலுவான சுழற்பந்துவீச்சுப் படை, பேட்டிங் வரிசை என மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகிறது.
இந்திய அணிக்கு சாதகமாக பல அம்சங்கள் இந்த முறை உள்ளன. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான துபை மைதானம், அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள், ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது, சுழற்பந்துவீச்சுக்கு திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஐசிசி தொடர்களில் வல்லவர்கள்
முக்கிய வீரர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணி வந்திருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 352 ரன்களை சேஸ் செய்து பேட்டிங்கில் மிரட்டல் விடுத்தது ஆஸ்திரேலியா.
அந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் விரைவாகவே ஆட்டமிழந்தநிலையில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கி தங்களின் பேட்டிங் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினர்.
அனுபவம் குறைந்த வீரர்களைத்தான் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு அனுப்பி இருந்தாலும், இதுபோன்ற ஐசிசியின் முக்கியமான தொடர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள் என்பதை நிரூபித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
தோல்விக்கு பழிதீர்க்குமா இந்திய அணி
2011ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் யுவராஜ் சிங்கின் அற்புதமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியானது. ஆனால் அதன்பின் இந்திய அணியை நாக்அவுட் சுற்றில் வீழ்த்திவந்தது ஆஸ்திரேலிய அணி.
2015 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என அனைத்திலும் இந்திய அணியின் கனவுகளை தகர்த்தது ஆஸ்திரேலிய அணி.
ஆனால், அந்தப் போட்டிகளில் எல்லாம் ஆஸ்திரேலிய அணி முழுவலிமையுடன், திறமையான பந்துவீச்சுப்படையுடன், பேட்டிங் வரிசையுடன் இருந்தது.
ஆனால், இந்தமுறை ஆஸ்திரேலியா அணி அவ்வாறே இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். இந்த அம்சத்தைத்தான் இந்திய அணி பயன்படுத்தலாம்.
பட மூலாதாரம், Getty Images
எப்படி தயாராக வேண்டும்?
ஆஸ்திரேலிய அணியிடம் கடந்த 2015 முதல் 2024ம் ஆண்டுவரை அடைந்த தோல்விகளுக்கு எல்லாம் மொத்தமாக பதில் அளிக்கும் களமாக இந்த அரையிறுதியைப் பயன்படுத்த வேண்டும் இந்திய அணி நினைக்கலாம். இந்திய அணியிடம் என்னென்ன உத்திகள் உள்ளன?
இந்திய அணியின் வெற்றி பெறுவதற்கு முழுமையாக துணை செய்ய இருப்பது சுழற்பந்துவீச்சுதான்.
துபையில் நடக்கும் ஆட்டம் என்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவாக 5 சுழற்பந்துவீச்சாளர்களை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தேர்வு செய்தது.
துபை மைதானம் கருப்பு மண்ணால் உருவாக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தொடக்கத்தில் 10 ஓவர்கள்வரைதான் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஆடுகளம் நெகிழ்வுத்தன்மை அடைந்து,பந்து தேயத்தொடங்கியதம், சுழற்பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கும்.
பேட்ஸ்மேன்கள் ரன் சேர்ப்பது கடினமாக இருக்கும். ஆதலால், ஆட்டத்தின் பெரும்பகுதியை ஆளப்போவது சுழற்பந்துவீச்சாளர்கள்தான் இவர்களை எவ்வாறு பயன்படுத்துவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
குறிப்பாக டிராவிஸ் ஹெட்டை தொடக்கத்திலேயே ஆட்டமிழக்கச் செய்தால் வெற்றியை நெருங்குவது எளிதாக அமையும். டிராவிஸ் ஹெட் வலதுகை சுழற்பந்துவீச்சாளர்கள், குறிப்பாக ஆஃப்ஸ்பின்னுக்கு திணறக்கூடியவர் என்பதால், வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவை இவருக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இலங்கைக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இலங்கை சுழற்பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் திணறினர். ஆதலால், தரமான, துல்லியமான சுழற்பந்துவீச்சை வெளிப்படுத்தினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்வது உறுதி.
பட மூலாதாரம், Getty Images
மிஸ்ட்ரி ஸ்பின்னர் – வருண் சக்ரவர்த்தி
சாம்பியன்ஸ் டிராபியின் அறிமுக ஆட்டத்திலேயே வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். “மிஸ்ட்ரி ஸ்பின்னர்” என அழைக்கப்படும் வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துவீச்சை புதிதாக களத்துக்கு வரும் பேட்ஸ்மேன் அனுமானித்து ஆடுவது கடினம்.
ஆடுகளத்தில் பிட்ச்ஆகும் பந்து லெக் ஸ்பின்னாக வருகிறதா அல்லது ஆஃப் ஸ்பின்னாக வருகிறதா என்பதை பந்து நெருங்கிவரும்போதுதான் பேட்ஸ்மேன்களால் கண்டறிய முடிகிறது.
மேலும், வருணின் பந்துவீச்சு வேகம் குறைவாக இருப்பதால், பந்து நன்கு டர்ன் ஆகி, பெரிய ஷாட்களை அடிக்க பேட்ஸ்மேன்கள் சரியான இடத்தில் பந்தை பிக் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாலும் கேட்ச் ஆவதற்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் வேரியேஷனோடு பந்துவீசுவதில் வருண் திறமையானவர்.
ஆதலால், நாளை ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு கைகொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
டாப் ஆர்டர் ஜொலிப்பது அவசியம்
இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரே போட்டியில் அனைவருமே சிறந்த ஸ்கோரை அடித்து நீண்டகாலம் ஆகிவிட்டது. டாப் ஆர்டரில் யாரேனும் இருவர், அல்லது ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
டாப்ஆர்டரில் இந்த 3 பேட்ஸ்மேன்களும் சிறந்த பங்களிப்பை ரன்களாக வழங்கினாலே ஆட்டத்தின் பெரும்பகுதி இந்திய அணியின் ஆதிக்கத்தின் கீழ்வந்துவிடும். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 7வது ஓவருக்குள் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்துவிட்டனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரும் குறைந்தபட்சம் 30 ஓவர்கள் விளையாடிக் கொடுத்து 200 ரன்களை சேர்த்தால் மிகப்பெரிய ஸ்கோருக்கு இந்திய அணியை அழைத்துச் செல்ல முடியும்.
அடுத்துவரும் நடுவரிசை வீரர்கள் ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்ஸர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு அழுத்தம் குறைந்து, பெரிய ஸ்கோருக்கு இந்திய அணி செல்ல டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவது அவசியமாகும்.
பட மூலாதாரம், Getty Images
ஆபத்பாந்தவன் ஸ்ரேயஸ் ஐயர்
சாம்பியன்ஸ் டிராபியிலும் சரி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சரி ஸ்ரேயஸ் ஐயரின் பங்களிப்பு சத்தமில்லாமல் அற்புதமாக இருந்து வருகிறது. இந்திய அணி தடுமாறும் நேரங்களில் தாங்கிப் பிடிக்கும் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக, சூழலுக்கு ஏற்ப ஆடும் பேட்ஸ்மேனாக ஸ்ரேயஸ் ஐயர் இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் நடுவரிசைக்கு தூணாகவும், பேட்டிங்கில் துருப்புச்சீட்டாகவும் இருக்கப்போவது ஸ்ரேயஸ் ஐயரின் ஆட்டமாக இருக்கும். ஆதலால், ஸ்ரேயஸ் ஐயர் நடுவரிசையில் நிலைத்து நின்று ஆடினால் பெரிய ஸ்கோரை பெற முடியும்.
முதல் 10 ஓவர்களை பயன்படுத்த வேண்டும்
இந்திய அணி நாளை நடக்கும் ஆட்டத்தில் 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறதா அல்லது 2 வேகப்பந்துவீச்சாளர்கள் 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என கணக்கில் விளையாடுகிறதா எனத் தெரியவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சிறப்பாகச் செயல்பட்டதால், 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடும் பட்சத்தில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக வருண் சேர்க்கப்படலாம். வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஷமி இருவரும் விளையாடலாம்.
இல்லாவிட்டால் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய அதே அணி மாற்றமில்லாமல் களமிறங்கும் எனத் தெரிகிறது.
துபை ஆடுகளத்தில் முதல் 10 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்ஸருக்கும் ஒத்துழைக்கும் என்பதால், அதைப் பயன்படுத்தி இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியம். அதன்பின் ஸ்விங் இருக்காது என்பதால், முதல் 10 ஓவர்களை ஷமி, அர்ஷ்தீப், ராணா ஆகியோர் பயன்படுத்தி விக்கெட் வீழ்த்துவது அவசியம்.
பட மூலாதாரம், Getty Images
நடுப்பகுதி ஓவர்கள் முக்கியம்
ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்து நடுப்பகுதி ஓவர்களில் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
20 முதல் 40 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ரன்குவிப்பை கட்டுப்படுத்திவிட்டாலே கடைசி 10 ஓவர்களில் நெருக்கடிக்கு தள்ளப்படுவார்கள். இந்த நடுப்பகுதி 20 ஓவர்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்தும்பட்சத்தில் ஆட்டம் இந்திய அணி பக்கம் இருக்கும். ஆதலால் நடுப்பகுதி ஓவர்களை பந்துவீசினாலும், பேட் செய்தாலும் சிறப்பாகப் பயன்படுத்துவது அவசியம்.
ஆஸ்திரேலிய அணியில் முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை
ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்பா தவிர முழுநேர சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோர் மட்டுமே இருக்கிறார்கள். கூடுதலாக தன்வீர் சங்காவை தேவைப்பட்டால் களமிறக்கலாம். ஆதலால் தேர்ச்சி பெற்ற சுழற்பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். மேத்யூ ஷார்ட் கனுக்கால் காயத்தால் தொடரிலிருந்து விலகியிருப்பது கூடுதல் சாதகம்.
நடுப்பகுதி ஓவர்கள்தான் முக்கியமானது. இந்த ஓவர்களில் இந்திய அணியைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச தேர்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் அவசியம். ஆனால், பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை வைத்திருப்பது எந்த அளவு ஆஸ்திரேலியாவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியாது.
ஸ்மித், ஹெட், மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் மிகுந்த பேட்ஸ்மேன்கள் என்றால் அது ஸ்மித்,ஹெட், மேக்ஸ்வெல், லாபுஷேன் ஆகியோர்தான். இவர்கள் ஓரளவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சை ஆடக்கூடிய அனுபவம் கொண்டவர்கள். அதிலும் ஆபத்தான டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெலை மட்டும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிடுவது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும். மற்ற பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே அனுபவம் கொண்டவர்கள், இவர்களால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை ஐசிசி தொடர்களில் கணிக்கவும், எடைபோட முடியாது.
பட மூலாதாரம், Getty Images
அனுபவம் இல்லாத வேகப்பந்துவீச்சு
ஆஸ்திரேலிய அணி அனுபவம் இல்லாத வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தத் தொடரை சந்திக்கிறது. ஸ்பென்சர் ஜான்சன், நேதன் எல்லீஸ், இங்கிலிஸ், ஷான் அபாட், பென் வார்சூஸ் என 20 ஒருநாள் போட்டிகளில்கூட விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள்.
துபை மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதை அறிந்துள்ள ஆஸ்திரேலிய அணி எந்தமாதிரியான வியூகத்தில் களமிறங்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்திய அணிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு இல்லை என்பது ஆறுதலானது. அதிலும் குறிப்பாக கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சம்.
எளிதில் எடைபோட முடியாது
ஆஸ்திரேலிய அணி அனுபவம் குறைந்த வீரர்களுடன் களமிறங்கினாலும், ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி கடந்த காலங்களில் விஸ்வரூபமெடுத்து பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் செயல்படும். ஆதலால் இந்திய பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் எச்சரிக்கையுடனே அணுக வேண்டும். சர்வதேச போட்டிகளில் அதிகமாக ஆடி அனுபவம் இல்லாவிட்டாலும்கூட, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள வீரர்களை ஆஸ்திரேலிய அணி களமிறக்கியுள்ளது. 352 ரன்களை எளிதாக சேஸ் செய்துள்ளதால் பேட்டிங்கில் எளிதாக எந்த வீரரையும் எடை போட முடியாது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு 6-வதுமுறையாக முன்னேறியுள்ளது. இதற்கு முன் 1998, 2000, 2002, 2013, 2017 ஆண்டுகளில் அரையிறுதிவரை இந்திய அணி வந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 4 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளநிலையில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது, ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றியுடன் இருக்கிறது, ஒருபோட்டியில் முடிவு இல்லை.
ஒட்டுமொத்த ஐசிசியின் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டி20 தொடர் , டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் என 4 வகையான தொடர்களிலும் இரு அணிகளும் ஏறக்குறைய சிறிய வித்தியாசத்தில்தான் உள்ளன.
38 போட்டிகளில் இரு அணிகளும் மோதிய நிலையில் அதில் இந்திய அணி 16 வெற்றிகளும், ஆஸ்திரேலிய அணி 18 வெற்றிகளும் பெற்றுள்ளன, 4 போட்டிகளில் முடிவில்லை.
ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை இரு அணிகளும் 151 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளன அதில் ஆஸ்திரேலிய அணி 84 போட்டிகளிலும், இந்திய அணி 57 போட்டிகளிலும் வென்றுள்ளன, 10 போட்டிகளில் முடிவு இல்லை.
இந்திய அணி விவரம்
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஷான் அபாட், அலெக்ஸ் கேரெ, பென் வார்சூயஸ், நேதன் எல்லீஸ், பேரேசர் மெக்ருக், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்கஸ் லாபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஜம்பா, கூப்பர் கான்லே
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.