ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் சர்வதேச டி20 தொடரின் மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) ஹோபர்ட் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 என்ற இலக்கை 18.3 ஓவர்களில் எட்டியது இந்திய அணி. இதன்மூலம் இந்தத் தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் ஆடியிருந்த சஞ்ச சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஜித்தேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் இந்தப் போட்டியில் இடம்பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட்டுக்குப் பதிலாக ஷான் அபாட் இடம்பெற்றார்.
முதலில் டேவிட் அதிரடி
முதல் முறையாக இந்தத் தொடரில் வாய்ப்பு பெற்ற அர்ஷ்தீப் சிங் நான்காவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். 6 ரன்கள் எடுத்திருந்த அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் ஓவரிலேயே பெரிய விக்கெட்டை வீழ்த்திய அர்ஷ்தீப், அவர் வீசிய அடுத்த ஓவரில் ஜாஷ் இங்லிஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார். அதனால் 14/2 என ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.
இந்நிலையில் கேப்டன் மிட்செல் மார்ஷ் உடன் கைகோர்த்தார் டிம் டேவிட். தான் சந்தித்த முதல் பந்திலேயே பௌண்டரி விளாசிய அவர், அந்த அணுகுமுறையையே தொடர்ந்தார். மறுபக்கம் மிட்செல் மார்ஷ் நிதானமாக விளையாடினார். டேவிட் ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது அடித்துக்கொண்டிருந்ததால் ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது. அதோடு அவர்களின் ரன்ரேட்டும் முன்னேற்றம் கண்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 38 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார் டிம் டேவிட்
ஸ்பின், வேகம் என அனைத்து விதமான பந்துவீச்சையும் சிறப்பாக எதிர்கொண்ட டிம் டேவிட், 23 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
அதேசமயம் 9வது ஓவர் வீசவந்த தமிழ்நாட்டு ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்செல் மார்ஷை வெளியேற்றிய அவர், அடுத்த பந்திலேயே மிட்செல் ஓவனை போல்டாக்கினார். ஆஸ்திரேலியா 73/4 என்ற நிலைக்குச் செல்ல அது அவர்களுக்குப் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டேவிட் உடன் இணைந்து அந்த எண்ணத்தை மாற்றினார் அடுத்து களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்.
அடுத்ததாக ஸ்டாய்னிஸ் அதிரடி
ஷிவம் துபே வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி தன் அதிரடியைத் தொடங்கினார் ஸ்டாய்னிஸ். முதலில் ‘ஷார்ட் லென்த்தில்’ வீசப்பட்ட பந்தை சிக்ஸராக்கிய அவர், ஃபுல் டாஸாக வீசப்பட்ட அடுத்த பந்தையும் எல்லைக்கோட்டு வெளியே அனுப்பினார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக சென்றுகொண்டிருந்த அந்த ஓவரின் கடைசிப் பந்தில் எதிர்பாராத விதமாக டேவிட் அவுட் ஆனார். பெரிய ஷாட் அடிக்க அவர் முற்பட, லாங் ஆஃப் திசையில் நின்றிருந்த திலக் வர்மாவிடம் கேட்சானார். ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய அவர், 38 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் அவர் 8 ஃபோர்களும், 5 சிக்ஸர்களும் அடித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தன் அதிரடியால் கடைசி கட்டத்தில் ரன் விகிதத்தை அதிகப்படுத்தினார் ஸ்டாய்னிஸ்
அவர் அவுட்டானாலும், ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார் ஸ்டாய்னிஸ். டேவிட்டைப் போல் ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது வரும் வகையில் அவர் ஆடினார்.
அபிஷேக் ஷர்மா வீசிய 16வது ஓவரில், ஒரு ஃபோரும் ஒரு சிக்ஸரும் அடித்து மேத்யூ ஷார்ட்டும் தன் அதிரடியைத் தொடங்கினார்.
அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் 3 ஃபோர்கள் அடித்த ஸ்டாய்னிஸ், 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த அவர், கடைசி ஓவரில் அர்ஷ்தீப் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச கொடுக்கப்படவில்லை.
சிறிய அதிரடி இன்னிங்ஸ்கள்
187 என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள்.
தன் வழக்கமான அதிரடி பாணியையே கடைபிடித்த அபிஷேக் மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கினார். ஷான் அபாட் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் 4, 6, 4 என 14 ரன்கள் எடுத்தார் அவர். தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தியவர் நாதன் எல்லிஸ் வீசிய நான்காவது ஓவரில் ஆட்டமிழந்தார். 16 பந்திகளில் 25 ரன்கள் எடுத்த அவர் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அபிஷேக், கில், அக்ஷர் என 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் எல்லிஸ்
அவர் மட்டுமல்லாது இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அனைவருமே அதே பாணியில் சிறிது நேரம் அதிரடியாக ஆடி அவுட் ஆகிச் சென்றனர்.
துணைக் கேப்டன் சுப்மன் கில் 15 ரன்களில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில், அக்ஷர் பட்டேல் 17 ரன்களில் வெளியேறினர். 11.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அந்த நான்கில் 3 விக்கெட்டுகளை நாதன் எல்லிஸே கைப்பற்றியிருந்தார். எல்லோரும் பெரிய இன்னிங்ஸைக் கட்டமைக்க முடியாமல் வெளியேறியிருக்க, அடுத்து வந்த தமிழ்நாட்டு வீரர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடினார்.
‘பேட்டிங்கில்’ கலக்கிய வாஷிங்டன் சுந்தர்
இந்தப் போட்டியில் பந்துவீச்சில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வாஷிங்டன் சுந்தருக்கு பேட்டிங்கில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஷிவம் துபே, ஜித்தேஷ் ஷர்மா ஆகியோருக்கு முன்பாக ஆறாவது வீரராகவே அவர் களமிறக்கப்பட்டார். அந்த வாய்ப்பையும் அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் வாஷிங்டன். ஸ்பின்னர் கூனமன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு ஃபோர் அடித்தார். ஷான் அபாட் வீசிய 14வது ஓவரில் தன் அதிரடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் அவர். அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஃபோர் அடித்த அவர், அடுத்த இரு பந்துகளிலுமே சிக்ஸர் விளாசினார். அதனால் இந்திய அணி இலக்கை நோக்கி விரைந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பந்துவீச வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பேட்டிங்கில் கலக்கினார் வாஷிங்டன் சுந்தர்
திலக் வெளியேறிய பின்னர் (29 ரன்கள்) களமிறங்கிய ஜித்தேஷ் வாஷிங்டன் உடன் இணைந்து சிறப்பாக விளையாட, இந்திய அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. 23 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களுடன் (3 ஃபோர்கள், 4 சிக்ஸர்கள்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அர்ஷ்தீப் ஆட்ட நாயகன்
இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பௌலர் அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த செயல்பாடு பற்றிப் பேசிய அவர், “நான் என் திறன் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து உழைக்கிறேன். உங்களை ஒரு பேட்டர் அட்டாக் செய்து ஆடும்போது விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன். மற்றொரு முணையில் இருந்து ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீசியதும் எனக்கு உதவிகரமாக இருந்தது. நான் என்னவெல்லாம் பயிற்சி செய்தேனோ அதை நடைமுறைப்படுத்த நினைக்கிறேன் அவ்வளவுதான்” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தத் தொடரில் கிடைத்த முதல் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார் அர்ஷ்தீப் சிங்
இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என சமநிலையை எட்டியிருக்கிறது. முதல் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்தத் தொடரின் நான்காவது போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் வரும் ஆறாம் தேதி நடக்கிறது.