- எழுதியவர், கேட்டி வாட்சன்
- பதவி, ஆஸ்திரேலியா நிருபர்
-
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டார்வின் துறைமுகத்தில் ஒரு விடியற்காலையில் இருள் சூழ்ந்திருந்தது. முதலைகளைப் பிடிக்க அரசாங்க ரேஞ்சரான கெல்லி எவின் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
அதுவே அவரது அன்றாடப் பணி. இதற்காக அவர் ஒரு மிதக்கும் பொறியில் ஆபத்தான சூழலில் சமநிலையைத் தக்க வைத்துக்கொண்டு பணியை மேற்கொள்கிறார்.
சமீபத்தில் அங்கு கரையைக் கடந்த புயலின் விளைவாக தீவிர மழை மேகங்கள் காணப்பட்டன. நாங்கள் சென்ற படகு, எஞ்சின் நிறுத்தப்பட்டு அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. இடையிடையே முதலைகளைப் பிடிக்க வைத்துள்ள பொறியில் இருந்து நீர் தெறிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
“முதலைகள் பொறியில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு” என்று கூறும் எவின் சீற்றம் கொண்டிருக்கும் முதலைகளின் தாடையைச் சுற்றி ஒரு சுருக்குக் கயிற்றை வீசி, சுற்றி வளைக்க முயல்கிறார்.
“நாங்கள் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் இருக்கிறோம். உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு இங்குள்ள காட்டுப் பகுதிகளில் மட்டும் 100,000 உப்புநீர் முதலைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.”
வடக்குப் பிரதேசத்தின் தலைநகரான டார்வின், கடற்கரைகள் மற்றும் ஈரநிலங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய கடற்கரை நகரமாகும். இந்தப் பகுதியில் நீர் இருக்கும் இடத்தில் எல்லாம் முதலைகள் இருக்கும்.
வியத்தகு முறையில் அதிகரித்த முதலைகளின் எண்ணிக்கை
`சால்ட்டிஸ்’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் உப்புநீர் முதலைகள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு அதீத வேட்டையால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, முதலைத் தோல் வர்த்தகம் காரணமாக வேட்டையாடுதல் தீவிரமடைந்தது. அதன் விளைவாக, அவற்றின் எண்ணிக்கை சுமார் 3,000 ஆகக் குறைந்தது.
ஆனால் 1971இல் அவற்றை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டபோது, முதலைகளின் என்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. அவை இப்போது பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் உள்ளன, ஆனால் அழிந்து வரும் நிலையில் இல்லை.
உப்புநீர் முதலைகளின் எண்ணிக்கை உயர்வு மிகவும் வியத்தகு முறையில் நிகழ்ந்தது. இப்போது ஆஸ்திரேலியா வேறு மாதிரியான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. உப்புநீர் முதலைகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதால், பொது மக்களின் பாதுகாப்புக்காக அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் அங்கு ஏற்பட்டுள்ளது.
முதலைகளின் எண்ணிக்கையால் மக்கள் அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு மாறி வருவதாக முதலை நிபுணர் பேராசிரியர் கிரஹாம் வெப் கூறுகிறார்.
“இந்தச் சூழலில்தான் அரசியல்வாதிகள் தலையிட்டு முதலை பிரச்னைக்குத் தீர்வு காண்போம் என்று உறுதியளித்து வருகின்றனர்” என்றார்.
முதலைகளுடன் வாழ்க்கை
வடக்குப் பிரதேசத்தின் வெப்பமான சூழல் மற்றும் ஏராளமான கடலோரப் பகுதிகள் இந்த முதலைகளுக்கு உகந்த வாழ்விடமாக உள்ளன. அவற்றுடைய உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க வெப்பம் தேவைப்படுகிறது.
தென் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள், வடக்கு குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் உப்புநீர் முதலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
பெரும்பாலான முதலை இனங்கள் பாதிப்பில்லாதவை என்றாலும், இந்த உப்புநீர் முதலைகள் ஆக்ரோஷமானவை. முதலைகள் சம்பந்தப்பட்ட அபாயகரமான சம்பவங்கள் ஆஸ்திரேலியாவில் அரிதானவை. ஆனால் சில பகுதிகளில் அவ்வாறு நடந்ததற்கான சான்றுகள் உள்ளன.
கடந்த ஆண்டு, 12 வயது சிறுமி முதலைகளால் கொல்லப்பட்டார், இது 2018க்கு பிறகு வடக்கு பிராந்தியத்தில் நடந்த முதல் மரணம். எவின் மற்றும் அவரது சக ஊழியர்களுக்கு இது ஆண்டின் பரபரப்பான மாதம்.
முதலைகளின் இனவிருத்தி காலம் தொடங்கிவிட்டதே அதற்குக் காரணம். இந்தப் பருவத்தில், அவை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்கின்றன.
எவின் மற்றும் அவரது குழுவினர் வாரத்தில் பல முறை தண்ணீரில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. டார்வின் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள 24 முதலைப் பொறிகளை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தப் பகுதி மீன்பிடித்தலுக்கும், சில துணிச்சலான நீச்சல் வீரர்களின் செயல்பாடுகளுக்கும் பெயர்போனது. டார்வின் துறைமுகத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட முதலைகள் கொல்லப்படுகின்றன. ஏனென்றால் அவை வேறு இடத்தில் விடுவிக்கப்பட்டாலும், இப்பகுதிக்குத் திரும்பி வர வாய்ப்புள்ளது.
“எங்களால் முடிந்தவரை மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முயல்கிறோம்” என்று இரண்டு ஆண்டுகளாகத் தனது “கனவு வேலையை” செய்து வரும் எவின் கூறுகிறார். அதற்கு முன், அவர் காவல் அதிகாரியாக இருந்தார்.
“அனைத்து முதலையையும் நாங்கள் பிடிப்பதில்லை. ஆனால் முடிந்த வரை முதலைகளை துறைமுகத்திற்கு வெளியே கொண்டு வருகிறோம். அதனால் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது,” என்கிறார் எவின்.
முதலைகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான், பொது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் முக்கியக் கருவி.
வட மாகாண அரசு, பள்ளிகளில் “Be Crockwise” என்ற விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதலை வாழ்விடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது.
இது மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஃப்ளோரிடாவும், பிலிப்பைன்ஸும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பரிசீலித்து வருகின்றன.
“நாங்கள் முதலைகள் இருக்கும் நாட்டில் வாழ்கிறோம், எனவே தண்ணீர் இருக்கும் பகுதிகளில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொள்கிறோம்” என்று நிகழ்ச்சியின் அமைப்பாளர் நடாஷா ஹாஃப்மேன் கூறினார்.
“நீங்கள் படகில் மீன்பிடிக்கச் சென்றால், முதலைகளும் அங்கு இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை பதுங்கியிருந்து வேட்டையாடும் விலங்குகள். அவை இரைக்காக மிகவும் பொறுமையாகக் காத்திருக்கின்றன. உணவுக்கு வாய்ப்பு இருப்பதாக அவற்றுக்குத் தோன்றினால், தாக்குதல் நடத்தத் தொடங்கும்” என்று அவர் விளக்கினார் .
வடக்கு பிராந்தியத்தில் முதலைகள் பாதுகாக்கப்பட்ட இனமாக இருப்பதால், பெரிய அளவில் முதலைகள் கொல்லப்படுவதில்லை. இருப்பினும், பத்தாண்டு கால முதலை மேலாண்மை திட்டத்திற்குக் கடந்த ஆண்டு அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, ஆண்டுக்கு 1,200 முதலைகள் வரை கொல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக அந்த எண்ணிக்கை 300 ஆக இருந்தது.
முதலைகள் ஏதேனும் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என எவின் குழுவினர் நம்பினால், உடனடியாக அவற்றை அகற்றி விடுவார்கள். ஒவ்வொரு முறை முதலைகளால் மரணம் ஏற்படும்போதும், அது மக்களுக்கு அருகில் வாழும் இந்த முதலைகள் பற்றிய விவாதத்தை எழுப்புகிறது.
கடந்த ஆண்டு 12 வயது சிறுமி ஒருவர் இறந்தபோது, வடக்கு பிராந்தியத்தின் தலைவர் ஈவா லாலர் முதலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தற்போது அங்கு இரண்டரை லட்சம் உப்புநீர் முதலைகள் உள்ளன.
வடக்குப் பிராந்தியத்தில் இருக்கும் முதலைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு குயின்ஸ்லாந்தில் உள்ளது. அங்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே அங்கு அதிகமான இறப்புகள் நிகழ்கின்றன, சில நேரம் தேர்தல் விவாதங்களில் முதலை சார்ந்த பிரச்னைகள் பற்றிய பேச்சு இடம் பெறுகிறது.
பெரிய வியாபாரம்
இந்த முதலைகளின் எண்ணிக்கை இங்கு சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அவற்றின் தோல்களை வாங்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வடக்கு மண்டலம் பெரும் வரப் பிரசாதமாக உள்ளது.
அதே போன்று அடிலெய்டு ஆற்றுக்கு முதலைகளுக்கு உணவளிக்கும் காட்சிகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். இதை “கிராக் ஜம்பிங்” என்கின்றனர்.
அதாவது ஒரு குச்சியின் நுனியில் இறைச்சித் துண்டுகளை வைத்து முதலைகளுக்கு ஊட்டுகின்றனர். அவ்வாறு உணவளிக்கும்போது முதலைகள் உணவைப் பெறுவதற்காக குதிப்பதைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஸ்பெக்டாகுலர் ஜம்பிங் க்ரோக் க்ரூஸ் என்னும் படகின் தலைமை கேப்டன் அலெக்ஸ் ‘வூக்கி’ வில்லியம்ஸ் இந்த நிகழ்வை மேற்பார்வையிடுகிறார்.
அவர் சிறுவயதில் இருந்தே முதலைகளை நேசித்தார். அதோடு, அவற்றுடன் இணைந்து பணியாற்ற அவருக்குப் பல சந்தர்பங்கள் கிடைத்தன.
“கடந்த பத்து ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது,” என்கிறார் வில்லியம்ஸ்.
முதலைகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை வளர்ப்பது பொருளாதார ரீதியாக லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. வடக்குப் பிராந்தியத்தில் தற்போது 1,50,000 முதலைகள் வளர்க்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
லூயிஸ் உய்ட்டன் மற்றும் ஹெர்ம்ஸ் போன்ற ஃபேஷன் பிராண்டுகள் முதலை வளர்ப்பில் முதலீடு செய்துள்ளன. ஹெர்ம்ஸ் தயாரித்த `பிர்கின் 35′ என்னும் கிராக் கைப்பையின் விலை சுமார் 42 லட்சம் ரூபாய் (A$800,000) வரை விற்கப்படுகிறது. இவை முதலை தோலில் செய்யப்பட்ட கைப்பைகள்.
“முதலைகளை வளர்ப்பதற்கு அரசு வணிக ரீதியாக ஊக்குவிக்கிறது” என்கிறார் மிக் பர்ன்ஸ். அவர் வடக்குப் பிராந்தியத்தில் ஆடம்பர பிராண்டுகளுடன் இணைந்து பணிபுரிகிறார். டார்வின் புறநகரில் அவருக்கு அலுவலகம் உள்ளது. ஒரு தளம் முழுவதையும் முதலை தோலால் அவர் அலங்கரித்துள்ளார்.
டார்வினில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்ன்ஹெம் லேண்டில் பர்ன்ஸ் ஒரு பண்ணை வைத்திருக்கிறார், அங்கு அவர் உள்ளூர் பழங்குடியின ரேஞ்சர்களுடன் சேர்ந்து முதலை முட்டைகளை எடுத்து குஞ்சு பொரிக்க வைக்கும் வேலையைச் செய்கிறார். அதன் தோலை ஆடம்பரப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலுக்கு விற்கப்படுகிறது.
காட்டுயிர் ஆர்வலர்கள் கவலை
இந்தப் பகுதிகளில் முதலை வளர்ப்பில் ஆர்வம் காட்டுபவர்கள் இருந்தாலும்கூட, காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியில் முதலைகள் சிறை பிடிக்கப்படும் விதம் குறித்த கவலைகள் உள்ளன.
பண்ணைகளில் முதலைகள் சிறைபிடிக்கப்படுவதாக காட்டுயிர் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முதலைகள் கூட்டமாக வாழும் உயிரினங்களாக இருந்தாலும், அவற்றின் தோல்களுக்கு எந்தச் சின்ன சிராய்வும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவை தனித்தனி உறைகளில் வைக்கப்படுகின்றன.
ஏனெனில் இரண்டு முதலைகளுக்கு இடையிலான சண்டை நிச்சயமாக விலையுயர்ந்த அதன் தோலுக்குச் சேதம் விளைவிக்கும் என்று பண்ணை வைத்திருப்பவர்கள் நம்புகின்றனர்.
`இங்கு வாழும் மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்’
முதலைகள் அதிக எண்ணிக்கையில் வேட்டையாடப்படுவதைப் பார்க்க விரும்புபவர்கள் ஒருபுறம் இருக்க, அதைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரும் மக்கள் ஒருபுறம் இருக்க, டார்வினில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த ஆக்ரோஷமான உயிரினங்களைப் பற்றிச் சொல்ல ஒரு கதை நிச்சயமாக இருக்கும்.
அதேநேரம் அவற்றால் இங்கு வாழும் மக்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது என்பதையும் பார்க்க முடிகிறது. “டார்வினுக்கு அடுத்துள்ள அடிலெய்டு ஆற்றில் நீச்சலடிக்கச் சென்றால், நீங்கள் கொல்லப்படுவதற்கு 100% வாய்ப்பு உள்ளது” என்று பேராசிரியர் வெப் எச்சரிக்கிறார்.
“நீங்கள் 5-10 நிமிடங்களில் கொல்லப்படலாம். சில நிமிடங்களில் உங்கள் உடலை முற்றிலுமாகச் சேதப்படுத்தும் வல்லமை இவற்றுக்கு உண்டு” என்று கூறிய அவர் தனது காலில் இருந்த ஒரு பெரிய வடுவைக் காட்டினார். அது முதலைத் தாக்குதலால் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் முட்டைகளைச் சேகரிக்கும்போது ஒரு கோபமான பெண் முதலையால் தாக்கப்பட்டதற்கான சான்று அது.
“மிகச் சிலரே செய்யக்கூடியதை நாங்கள் செய்துள்ளோம், இது மிகவும் தீவிரமான வேட்டைத் திறன் கொண்ட விலங்குகளை அகற்றும் முயற்சி. பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்காத எண்ணிக்கையில் அவற்றை நிர்வகிக்கிறோம்,” என்றார்.
“நான் இங்கு செய்யும் வேலையை, சிட்னி, லண்டன் அல்லது நியூயார்க்கில் உள்ளவர்களை செய்யச் சொன்னால், அவர்களால் கண்டிப்பாக முடியாது. அவர்களால் இந்த ஆக்ரோஷமான முதலைகளைச் சமாளிக்க முடியாது” என்னும் அவர் முதலைகளை பண்ணைகளில் வளர்ப்பதையும், தொழில் செய்வதையும் நினைத்து கவலைப் படவில்லை என்கிறார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு