• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

ஆஸ்திரேலியா விசா விதிகளில் அதிரடி மாற்றம்! மாணவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள்

Byadmin

Sep 17, 2026


ஆஸ்திரேலியாவில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளைக் கட்டாயமாக நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான புதிய சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை அந்நாட்டு தொழிற்கட்சி (லேபர்) அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச மாணவர்கள் காலவரையறையின்றி நாட்டில் தங்குவதைத் தடுக்கும் வகையிலான கடுமையான விசா விதிமுறை மாற்றங்களையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய புலம்பெயர்வு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் இன்று வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, நாட்டின் நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோர் எண்ணிக்கையை நடப்பு நிதியாண்டில் இரண்டு லட்சத்து 45 ஆயிரமாகவும், எதிர்வரும் 2027-28 நிதியாண்டில் இரண்டு லட்சத்து இரண்டு ஆயிரமாகவும் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதத்தில் இரண்டு லட்சத்து 99 ஆயிரமாகப் பதிவாகியிருந்த நிகர வெளிநாட்டு புலம்பெயர்வு, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலப்பகுதியில் இரண்டு லட்சத்து 92 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாகத் தங்கியிருப்போரைக் கண்டறிந்து வெளியேற்றும் பணிகளுக்காக மெல்போர்னில் உள்ள முன்னாள் தனிமைப்படுத்தல் நிலையத்தைத் தடுப்பு முகாமாக மாற்றுவதற்கும், மேலதிகமாக 100 சட்ட அமுலாக்க அதிகாரிகளைப் பணியமர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவு (ICE) ஏனைய நாடுகளில் முன்னெடுக்கும் நடைமுறைகளைப் போன்றதொரு அதிரடி நடவடிக்கை இதுவல்ல என உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெளிவுபடுத்தியுள்ளார்.

By admin