ஆஸ்திரேலிய அரசு உலகில் முதல் முறையாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கச் சட்டம் இயற்றப்போவதாகத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதைப் பற்றி கூறுகையில், இது தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்தார். சமூக வலைதங்கள் மூலம் ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தச் சட்டம் தாய் மற்றும் தந்தைகளுக்கானது. அவர்களும் என்னைப் போன்றே, இணையத்தில் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் குடும்பங்களுக்குப் பின்னால் அரசு இருப்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் கூறிக்கொள்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தின் விவரங்கள் பற்றி விவாதங்கள் இன்னும் நடைபெறாத போதிலும், தற்போது சமூக வலைதளங்களில் உள்ள இளம் பயன்பாட்டாளர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.
பெற்றோர் சம்மதத்துடன் சமூக வலைதளங்களில் உள்ள சிறார்களுக்கும் வயது வரம்பில் எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது. சிறார்களுக்குப் பயன்பாட்டைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை சமூக வலைதள நிறுவனங்கள் எடுக்க வேண்டும் எனவும், அதற்கான பொறுப்பும் அவர்கள் மீதே உள்ளதெனவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இது எந்த அளவுக்குச் சாத்தியம்?
பயன்பாட்டாளர்களுக்கு தண்டனைகள் ஏதும் விதிக்கப்படாது என்றும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது ஆஸ்திரேலியாவின் இணைய ஒழுங்குமுறை ஆணையத்தின் இணைய பாதுகாப்பு ஆணையரின் பொறுப்பு என அல்பானீஸ் தெரிவித்தார்.
இந்தச் சட்டம் இயற்றப்பட்ட ஒரு வருடத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும், அதன்பிறகு அது மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
பெரும்பாலான வல்லுர்கள் சமுக வலைதளங்கள் இளம் பருவத்தினரின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், சிறுவர்களுக்கு அவற்றை முற்றிலுமாகத் தடுப்பது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இந்தத் தடை இளம் வயதினருக்கு டிக்டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் அறிமுகத்தை தாமதப்படுத்தும், ஆனால், சிக்கலான இணைய வெளியை எப்படிக் கையாள்வது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்காது எனச் சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதற்குமுன் சிறார்களுக்குச் சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முடக்குவதற்கு ஐரோப்பிய யூனியன் உட்படச் சில அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பெரும்பாலும் தோல்வியுற்றன, அல்லது சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்தன.
அதற்கும் மேலாக, வயதை மாற்றிச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வகையில் பல தொழில்நுட்பச் சாதனங்கள் இருக்கும் வேளையில் இதனை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆதரவும் எதிர்ப்பும்
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் குழந்தைகள் உரிமை குழு ஒன்று இந்தச் சட்டத்தை ‘நுட்பமில்லாத ஒரு கருவி’ என்று கூறியுள்ளது.
‘நுட்பமில்லாத ஒரு கருவி’ (Too blunt an Instrument) என்ற வரி 1969-ஆம் ஆண்டு ஆங்கிலப் பெண் கவிஞர் ஆன் ஸ்டீவன்சன் எழுதிய ஒரு கவிதையின் வரி. ‘Too blunt an Instrument’ என்ற வரியை ‘மனிதர்கள் அறிவீனமாகச் செயல்படுவதை’ விமர்சிக்க அன்னே ஸ்டீவன்சன் உவமையாக பயன்படுத்தியிருப்பார்.
அக்டோபர் மாதம் 100 கல்வியாளர்கள் மற்றும் 20 பொதுச் சமூக அமைப்புகள் கையப்பமிட்டு, அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், ஆஸ்திரேலிய குழந்தைகள் உரிமைப் பணிக்குழு, சமூக வலைதளங்களைச் சிறார்கள் பயன்படுத்தத் தடை விதிப்பதற்கு மாற்றாக சமூக வலைதளங்கள் மீது பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவது பற்றி அல்பானீஸ்க்கு பரிந்துரை செய்துள்ளனர்.
மேலும் அந்தக் குழு இணையதளத்தை ஒழுங்குபடுத்த ஐ.நா-வால் அறிவுறுத்தப்பட்ட ‘தேசியக் கொள்கைகளின்’ படி, ‘குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில் இணையதளப் பயன்பாட்டைச் சமூக வலைதளங்கள் மூலம் பாதுகாப்பான வழியில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், மற்றொரு தரப்பினர், சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகள் எதிர்கொள்ளும் தவறான செய்திகள், வன்முறை, ஆபத்தான பதிவுகள் மற்றும் சமூக அழுத்தம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இந்தத் தடை தேவை என்று கூறுகின்றனர். அவர்கள் ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவாக உள்ளனர்.
1.25 லட்சம் கையொப்பங்களுடன் ‘36 மாதங்கள்’ (36 Months) என்ற இயக்கம் அனுப்பியுள்ள மனுவில், தற்போது குறைந்தது 16 வயது வரை சிறார்கள் ‘சமூக வலைதளங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தத் தயாராகவில்லை’ என்றும் ‘அதிகப்படியான சமூக வலைதளப் பயன்பாடு மிக முக்கியமான உளவியல் ரீதியான வளர்ச்சிக்கான காலத்தில் இளம் தலைமுறையினரின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி, ஒருவித உளவியல் தொற்று நோயை உருவாக்குகிறது,” எனக் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குச் சமூக வலைதளத்திலிருந்து எப்படிப் பயனடைவது என்றும், சமூக வலைதளங்களில் உள்ள சிக்கல்கள் பற்றியும் கற்பிக்கப் பரந்த அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என பிரதமர் அல்பானீஸிடம் கேட்கப்பட்ட போது, ‘அதற்கான தேவைகள் எதுவும் இல்லை ஏனெனில், சிறார்களைவிட சமூக வலைதளங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை’ எனத் தெரிவித்தார்.
“எனக்கு உங்களைப் பற்றி தெரியாது, அனால் என் கம்ப்யூட்டரில் தேவையில்லாத சில ‘பாப் அப்களை’ வருகின்றன. அவற்றால் 14 வயதுடைய சிறார்கள் பாதிப்படைவார்கள்,” என்று வியாழக்கிழமை (நவம்பர் 7) அவர் செய்தியாளரிடம் பேசும்போது தெரிவித்தார்.
“தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் பலமானவை. அவற்றின் செயலிகளின் அல்காரிதம்கள் மக்களைச் சில குறிப்பிட்ட நடத்தைகளை நோக்கி ஈர்க்கும் வகையில் உள்ளன,” என்றார்.