இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை சமாளித்து இந்தியா இந்தத் தொடரை வெல்வதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய 5 விஷயங்கள் என்னென்ன?
1. ரோஹித் மற்றும் கோலியின் கம்பேக்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய கோலி மற்றும் ரோஹித் அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் மறுபடியும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது இந்தத் தொடர் மீது வழக்கத்தை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2025 ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பிறகு எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களை மறுபடியும் இந்திய ஜெர்ஸியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அதேசமயம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்கள் மண்ணில் சமாளிக்க இந்த இரண்டு சீனியர் வீரர்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பொதுவாகவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். அப்படியிருக்கும்போது பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் அடங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு கூட்டணி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அந்த சவால்களை சமாளிக்க கோலி மற்றும் ரோஹித் இருவரின் அனுபவமும் முக்கியம். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 50+ சராசரியில் இருவரும் ஆடியிருக்கிறார்கள். அதை அவர்கள் தொடரும்பட்சத்தில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கும்.
அதேசமயம் கடைசியாக அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியில் இருவரின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை. கடைசி 4 போட்டிகளில் கோலி 85 ரன்கள் மட்டும் அடித்திருக்க, விளையாடிய 3 போட்டிகளிலும் சேர்த்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் ரோஹித். அந்த செயல்பாட்டை மறக்கடிக்கும் வகையில் கோலியும், ரோஹித்தும் விளையாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
2. புதிய கேப்டன் ஷுப்மன் கில்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பு கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்தத் தொடரில் முதல் முறையாக ஷுப்மன் கில் தலைமையில் ஓர் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. 2027 உலகக் கோப்பையை நோக்கிய இந்தப் பயணத்தில் அவர் மீது நிச்சயம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.
அதேசமயம் டெஸ்ட் கேப்டனாக அவரது பயணம் சிறப்பாகவே தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கில் தலைமையில் சமன் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வென்றது. இந்த செயல்பாடுகள் அவருக்கு நம்பிக்கை தருவதாக இருக்கும்.
மறுபக்கம் கோலி, ரோஹித் என இரண்டு முன்னாள் கேப்டன்களுக்குத் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பும் கில்லுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் இளம் கேப்டனுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனால், தான் இந்த வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக கூறியிருந்தார் கில்.
ஆஸ்திரேலியா போன்ற ஒரு பெரிய அணியை அவர்கள் மண்ணில் எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும். வீரர்களின் ஸ்லெட்ஜிங் மட்டுமல்லாமல், ரசிகர்களை சமாளிப்பதும்கூட ஒரு பெரிய சவால் தான். அதுபோன்ற தருணங்களில் கேப்டனாக கில் எடுக்கும் முடிவுகள் ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இத்தொடருக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த அக்ஷர் படேல், “ஷுப்மன் கில் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறார். அவர் நெருக்கடியை தனக்குள் எடுத்துக்கொள்ளவேயில்லை. ஒரு தலைவருக்கான மிக முக்கிய குணம் அது” என்று கூறியிருந்தார். அதை இந்தத் தொடர் முழுவதும் கில் வெளிப்படுத்துவது அவசியம்.
3. பும்ரா இல்லாத வேகப்பந்துவீச்சு குழு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும்.
வேலைப்பளுவை சரியாகக் கையாள்வதற்காக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னணி பௌலரான பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலுமே விளையாடியிருந்தார்.
2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடர் நாயகனான பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். அதனால் மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பும் நெருக்கடியும் அதிகரிக்கும். அதிரடி காட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு எதிராக இந்த பௌலர்களுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
முகமது சிராஜ் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்பதால் அவர் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா மூவரில் இருவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகம். அவர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும்.
குறிப்பாக ஹர்ஷித் ராணாவின் செயல்பாடுகள் மீது அனைவரின் கவனமும் இருக்கும். பயிற்சியாளர் கம்பீரின் தயவால் தான் அவர் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார் என்று சமீபத்தில் பேசப்பட, அதை சில தினங்கள் முன் கடுமையாக விமர்சித்திருந்தார் கம்பீர். அப்படியிருக்கும்போது ஹர்ஷித் ராணாவின் ஒவ்வொரு அசைவுமே பேசுபொருளாக்கப்படும். இதுவும் அந்த இளம் வீரருக்குக் கூடுதல் நெருக்கடி கொடுப்பதாக அமையலாம்.
பிரசித், அர்ஷ்தீப் ஆகியோருக்கும் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவேண்டும் என்ற தேவை இருப்பதால், அதுவும் உளவியல் ரீதியாக அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம்.
இந்த அனைத்து சவால்களையும் சமாளித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஜொலிக்கவேண்டும்.
4. துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான்.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றுவது பற்றித்தான் டீம் மீட்டிங்கில் விவாதித்தோம் என்று கூறியிருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். அந்த அளவுக்கு அவரது விக்கெட் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அந்த இறுதிப் போட்டியில் அவர் டக் அவுட் ஆனதில் இருந்துதான் இந்தியா பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் சீரான செயல்பாட்டை அவர் கொடுத்துக்கொண்டிருப்பதும், எந்தவித பந்துவீச்சையும் அவர் நன்றாக எதிர்கொள்வதும் அதற்கான முக்கியக் காரணங்கள். கடைசியாக விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் (5 இன்னிங்ஸ்களில் 243) எடுத்திருந்தது ஷ்ரேயாஸ் தான். அதனால் அவருக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் சிறப்பு வியூகம் வகுப்பார்கள். அதனால் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இப்போது துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஷ்ரேயாஸ் மிடில் ஆர்டரில் இந்தியாவுக்கு நல்ல பங்களிப்பைக் கொடுத்தால் அது ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு நிச்சயம் தலைவலியாக அமையும்.
5. நித்திஷ் குமார் ரெட்டியின் இன்னொரு அறிமுகம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ்.
மிகவும் முக்கியமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்துக்கு நித்திஷ் ரெட்டியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்திய அணி. ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படுவதால் நித்திஷை அனைத்து ஃபார்மட் வீரராக நிலைநிறுத்த விரும்புகிறார்கள். அதனால் இப்போது ஒருநாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
காரணம் 2023 உலகக் கோப்பையின் பிற்பகுதியில் ஹர்திக் இல்லாததால் அந்த ஒரு இடத்தை நிரப்ப சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி என இரண்டு வீரர்களை இந்தியா பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படியொரு நிலை மறுபடியும் வராமல் இருக்க அதேபோல் இன்னொரு வீரரையும் வளர்த்தி வைத்திருப்பது அவசியமாகிறது.
இந்த வாய்ப்பை நித்திஷ் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கும் மிகவும் அவசியம். அந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடம் சரியாக நிரப்பப்பட்டால் அணியின் காம்பினேஷனில் தேவையான மாற்றங்களை செய்ய கேப்டனுக்கு அது உதவியாக இருக்கும். ஒருவேளை அவர்கள் ஒரு கூடுதல் ஸ்பின்னரை பயன்படுத்தவும் அது உதவலாம். அதனால் அவரது அறிமுகம் மீதும் அதிக கவனம் இருக்கும்.
தன் அறிமுக டெஸ்ட் தொடரில் இதே ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் நித்திஷ். இப்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்த ஒருநாள் அறிமுகத்திலும் அவர் ஜொலித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும்.