உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை(நவம்பர்22) தொடங்குகிறது.
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது.
தொடர்ந்து இருமுறை
ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் 2018-19 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி தனது வலிமையை நிரூபித்தது.
சொந்த மண்ணில் வைத்து ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து 2 முறை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல.
இதனால் இந்த முறை ஆஸ்திரேலியா வந்துள்ள இந்திய அணி மீது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அனுபவமில்லா வீரர்கள்
கடந்த 2 முறை இந்திய அணி கோப்பையை வென்ற போது அணியில் இருந்த பல வீரர்கள் இந்த முறை அணியில் இல்லை. குறிப்பாக, ரஹானே, புஜாரா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், புவனேஷ்வர் குமார், ஷமி, உமேஷ் யாதவ், சஹா, பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இல்லை.
ஆனால், முற்றிலுமாக இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இந்திய அணி மாற்றப்பட்டுள்ளது. விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா, கில், கே.எல்.ராகுல் தவிர பலர் புதியவர்கள்.
குறிப்பாக, நிதிஷ்குமார் ரெட்டி, அபிமன்யு ஈஸ்வரன், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல், சர்ஃபிராஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணுக்குப் புதியவர்கள்.
கேப்டனாக பொறுப்பேற்கும் பும்ராவும் புதியவர், இவர்களை வைத்து டெஸ்ட் தொடரை எவ்வாறு இந்திய அணி அணுகப்போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாகும்.
வலுவான அணியாக ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணியிலும் புதிய வீரர்கள் இருந்தாலும் கடந்த முறை ஆடிய வீரர்களில் இருந்து பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
கேப்டன் டிம் பெய்னுக்குப் பதிலாக கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி பல வெற்றிகளை சமீபத்தில் பெற்றுள்ளது.
கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நாதன் லேயான், டிராவிஸ் ஹெட், ஸ்மித், லாபுஷேன், மிட்ஷெல் மார்ஷ், கவாஜா, அலெக்ஸ் கேரி ஆகியோர் கடந்த இரு டெஸ்ட் தொடர்களிலும் விளையாடியவர்கள்.
போலாந்த், நாதன் நெக்ஸ்வீனே ஆகிய இருவர் மட்டுமே புதியவர்கள். இந்திய அணியைவிட அனுபவம் மிக்க வீரர்கள் கொண்ட அணியாகவே ஆஸ்திரேலிய அணி தயாராகியுள்ளயுள்ளது.
இந்திய அணிக்கு அழுத்தம்
கடந்த 2 முறை டெஸ்ட் தொடரை வென்றதைப் போல் இந்த முறையும் அனுபவமில்லா இளம் படையை வைத்து ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அது மட்டுமல்ல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணி குறைந்தபட்சம் 4 டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். ஆதலால், இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மேலும், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கோலி, அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் ஒன்றாக பங்குபெறும் கடைசி தொடராக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆதலால், தங்களின் சிறப்பான பங்களிப்பை அளிக்க முயல்வார்கள்.
பெர்த் ஆடுகளம் எப்படி?
பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள்தான் நடந்துள்ளன.
அந்த 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிதான் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வென்றுள்ளது. இதே பெர்த் மைதானத்தில்தான் கடந்த 2017-18-ஆம் ஆண்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
சுழற்பந்து வீச்சாளர் நாதன் லேயான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியது நினைவிருக்கும்.
மற்ற 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தான் அணிகளையும் ஆஸ்திரேலியா துவம்சம் செய்து வலிமையை நிரூபித்துள்ளது.
இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 450 ரன்களுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்புக்கு 598 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது.
பெர்த் ஆடுகளம் “ட்ராப் இன் பிட்ச்” மூலம் அமைக்கப்பட்டது. அதாவது, வெளியே ஆடுகளத்தை தனியாக வடிவமைத்து, இங்கு கொண்டு வந்து பதித்து உருவாக்குவதாகும்.
இந்த ஆடுகளத்தில் வழக்கத்துக்கு மாறாக பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகும், பந்து நன்கு எகிறி பேட்டரை நோக்கி வேகமாக வரும். இதனால் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டரும் சீராக நகர்ந்து விளையாடினால் விக்கெட்டை காப்பாற்றலாம்.
அதிலும் கூக்கபுரா பந்து டெஸ்ட் போட்டிக்கு பயன்படுவதால், பந்து தேயும் வரை பொறுமையாக இந்திய பேட்டர்கள் பேட் செய்ய வேண்டும். பந்து தேய்ந்து மெதுவாகிவிட்டால், அதன்பின் அடித்து, நொறுக்கி ஸ்கோர் செய்யலாம்.
வேகப்பந்து வீச்சாளர்களால் ஸ்விங் செய்ய முடியாத நிலை உருவாகும் போது, பேட்டர்கள் கை ஓங்கும். ஆதலால், முதல் 30 ஓவர்கள் வரை இந்திய பேட்டர்கள் நிதானமாக, விக்கெட்டை இழக்காமல் ஆடுவது அவசியம்.
இந்த புதிய ஆடுகளத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் 4 போட்டிகளில் 33 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியுள்ளனர். அதேசமயம், பழைய பெர்த் மைதானத்தில் 44 போட்டிகளில் 233 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி இருந்தனர். புதிதாக அமைக்கப்பட்ட இந்த பெர்த் மைதானத்தில் சுழற்பந்துவீச்சைவிட வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என ஆடுகள வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ஐசக் மெக்டோனல்ட் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் “இது ஆஸ்திரேலியா, இது பெர்த் நகரம். இங்கு உள்ள எங்கள் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்றார்போல் இருக்கும். பந்து நன்கு பவுன்ஸ் ஆகும், வேகமாக பேட்டரை நோக்கி வரும், திறமையான பேட்டர்கள் நன்கு விளையாடலாம். இந்த ஆடுகளத்தில் 10 மி.மீ அளவு புற்கள் வளர்ந்திருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
ஆதலால், இரு அணிகளும் தங்கள் அணியில் 4வது வேகப்பந்துவீச்சாளர் அல்லது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் எனத் தெரிகிறது.
இந்திய அணியில் பும்ரா, சிராஜ், தவிர நிதிஷ்குமார் ரெட்டி அல்லது ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு இருக்கும். ஜடேஜா அல்லது அஸ்வின் இருவரில் ஒருவர் மட்டுமே இடம் பெறலாம் எனத் தெரிகிறது.
இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த 4 ஆட்டங்களிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து வென்றுள்ளதால், இந்திய அணி டாஸ் வென்றால் பேட் செய்வது சிறந்தது.
இந்திய அணி நிலை என்ன?
கடந்த இருமுறை இதே ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி இருக்கிறது. ஆனால்,சமீபத்தில் உள்நாட்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஒயிட்வாஷ் ஆகியது இந்திய அணியின் திறமைக்கு பெரிய பின்னடைவாக மாறிவிட்டது.
நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்குப்பின் இந்திய அணிக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வேண்டிய அழுத்தம், பயிற்சியாளர் கம்பீருக்கு நெருக்கடி, கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களுக்கு நெருக்கடி போன்றவை ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்தத் தொடரை இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்வார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்திய அணி 4-0 என ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்போதுதான் 3வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணியால் செல்ல முடியும்.
ஆனால், ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணியை 4-0 என வீழ்த்துவது, கால்பந்தில் அர்ஜென்டினா, பிரேசில் அணியை அவர்களின் சொந்த மண்ணில் 4-0 என சாய்ப்பதற்கு சமமாகும்.
ரோஹித் சர்மா, சுப்மான் கில், முகமது ஷமி ஆகியோர் இல்லாத வலு குறைந்த இந்திய அணியாகத்தான் முதல் போட்டியில் களமிறங்குகிறது. இந்திய அணியில் டாப்-6 பேட்டர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் அதிலும் இருவர் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.
அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை தொடக்கூட முடியாமல் அடிபட்ட புலியாக ஆஸ்திரேலிய அணியினர் காத்திருக்கிறார்கள். ஆதலால், இந்திய அணிக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் கடினமான சவாலை ஆஸ்திரேலியர்கள் அளிப்பார்கள்.
பேட்டிங் பிரிவில் கோலி என்ற ஒற்றை வார்த்தை மட்டும் நம்பிக்கைத் தரக்கூடியதாக இருக்கிறது. கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சர்ஃபிராஸ்கான், அபிமன்யு ஈஸ்வரன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணுக்குப் புதியவர்கள். ரிஷப் பந்த் இரு முறை ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய அனுபவம் உள்ளவர் என்பதால் அவர் மீது நம்பிக்கை உள்ளது. பயிற்சி ஆட்டத்தில் துருவ் ஜூரெல் ஆடியவிதமும் நம்பிக்கையளித்தது.
இந்திய அணி முதலில் பேட் செய்ய நேர்ந்தால் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து கே.எல்.ராகுல் அல்லது ஈஸ்வரன், அல்லது தேவ்தத் படிக்கல் இதில் யார் களமிறங்குவார்கள் என்பது கடைசிநேரத்தில்தான் முடிவாகும்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் மின்னல் வேக பவுன்ஸரையும், எகிறும் பந்தையும் சமாளிக்கும் திறமையான பேட்டராக இருப்பது அவசியம்.
கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரின் அனுபவ பேட்டிங்கை மட்டுமே இந்திய அணி நம்பியுள்ளது. மற்ற வகையில் ஜெய்ஸ்வால், படிக்கல், ஈஸ்வரன், துருவ் ஜூரெல், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் இந்த மண்ணுக்குப் புதியவர்கள்.
பந்துவீச்சில் பும்ராவுடன் இணைந்து சிராஜ் பந்துவீசலாம். இவர்களுக்குத் துணையாக ஆகாஷ் தீப் அல்லது ஹர்சித் ராணா களமிறங்கக்கூடும். ஏனென்றால், வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால், 4வது பந்துவீச்சாளருடன் களமிறங்கலாம்.
4வதாக ஒரு பந்துவீச்சாளர் இருந்தால் தினசரி 10 முதல் 15 ஓவர்கள் வீச முடியும். சுழற்பந்துவீச்சைப் பொருத்தவரை ஆஸ்திரேலிய அணியில் 3 இடதுகை பேட்டர்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னருக்காக அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
கவனிக்கப்பட வேண்டிய நால்வர்
தேவ்தத் படிக்கலைப் பொருத்தவரை டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் பெரிதாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் களமிறங்கி படிக்கல் அரைசதம் அடித்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் ஆடிய அனுபவமுள்ள தேவ்தத் படிக்கல், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக 151 ரன்கள் விளாசியதால் ஃபார்மில் இருப்பதாக நம்பலாம்.
துருவ் ஜூரெல் களமிறங்கினால் இது அவருக்கு 3வது டெஸ்ட் போட்டியாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 90 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து ஜூரெல் தன்னை நிரூபித்துள்ளார்.
21 வயதாகிய நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணியில் மிக இளம்வயது வீரர். உள்நாட்டுப் போட்டிகள், சர்வதேச போட்டிகள் என பெரிதாக எந்த அனுபவமும் இல்லை.
ஆனால், ஐபிஎல் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியிலும் 34 பந்துகளில் 74 ரன்கலும், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நிதிஷ் குமார் பாராட்டைப் பெற்றார்.
ஹர்சித் ராணா இளம் வேகப்பந்துவீச்சாளர். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று கடந்த சீசனில் கலக்கினார். கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.
இந்திய ஆடுகளத்திலேயே அதிவேகமாக பந்துவீசக்கூடிய ராணாவால் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக பந்துவீச முடியும். குறிப்பாக ஆஸ்திரேலியர்களின் ஸ்லெட்ஜிங்கிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இவரின் மனநிலையும் இருக்கும் அளவுக்கு துடுக்கானவர்.
முதல் தரப்போட்டிகள், உள்நாட்டுப் போட்டிகளில் 20க்கும் குறைவான ஆட்டங்களில்தான் விளையாடி இருந்தாலும், ராணாவின் பந்துவீச்சில் இருக்கும் வேகம், ஸ்விங் ஆகியவை ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் நின்று பேசும்.
“அடிபட்ட புலி” ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணியைப் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் அடிப்பட்ட புலி. 5 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் ஆவேசத்துடன் காத்திருக்கிறார்கள். ஆதலால் இந்த முறை இந்திய அணியிடம் இருந்து கோப்பையை பறிக்கும் வகையில் தங்களின் உச்சபட்ச திறமையை களத்தில் வெளிப்படுத்தி விளையாடுவார்கள்.
அதனால்தான் ஆஸ்திரேலிய அணியில் வீரர்கள் தேர்வில் பெரிதாக எந்த மாற்றத்தையும் அந்த நிர்வாகம் செய்யவில்லை. ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் என வலுவான, அனுபவமான வேகப்பந்துவீச்சாளர்கள், 4வது பந்துவீச்சாளராக போலந்த், பேட்டிங்கில் ஸ்மித், லாபுஷேன், கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, இங்கிலிஸ், மிட்ஷெல் மார்ஷ், சுழற்பந்துவீச்சுக்கு அனுபவம் வாய்ந்த நாதன் லேயான் என வலுவான அணியை வடிவமைத்துள்ளது.
ஆனால், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித்தின் சராசரி 30 ரன்கள்தான். ஆனால் டெஸ்ட் அளவில் இருவரும் சிறப்பாக ஆடி சராசரி வைத்துள்ளனர். உலகக் கோப்பையில் இந்திய அணியை புரட்டி எடுத்த டிராவிஸ் ஹெட்டும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 28 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார்.
இவர்கள் இந்த சீசனில் குறைவான சராசரி வைத்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை சிறப்பாக ஆடக்கூடியவர்கள். இது தவிர மிட்ஷெல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீன் ஆகிய ஆல்ரவுண்டர்களும் உள்ளது பெரிய பலமாகும்.
பந்துவீச்சில் கம்மிஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் கம்மின்ஸ், ஹேசல்வுட்டின் ரிவர்ஸ் ஸ்விங், அவுட் ஸ்விங் இந்திய பேட்டர்களை திணறவைக்கும். இவர்கள் 3 பேரின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய வலிமையாகும்.
நாதன் லேயன் மட்டுமே சுழற்பந்துவீச்சுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மட்டுமல்ல எந்த ஆடுகளத்திலும் பந்தை டர்ன் செய்யும் திறமையானவர் லேயான் என்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்துள்ளது அந்நாட்டு வாரியம்.
இந்திய அணி எந்த நிலையிலும் விஸ்வரூபமெடுக்கும் என்பதால் அதைச் சமாளிக்க அனுபவமுள்ள வீரர்களை மாற்றாமல் வலுவாக அணியாக ஆஸ்திரேலியா வடிவமைக்கப்பட்டுள்ளது.
உத்தேச அணி (ப்ளேயிங் லெவன்)
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ஆர்.எஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா(கேப்டன்), சிராஜ்.
ஆஸ்திரேலியா:
நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, மிட்ஷெல் மார்ஷ், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஹேசல்வுட், மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லேயான்
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு