0
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பொண்ட் (Bondi) கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் மீது 59 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் சஜித் அக்ரம், பொலிஸாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையின் போது, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மகன் நவீட் என அடையாளம் காணப்பட்ட நபர், முன்னதாக மருத்துவமனையில் நினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சுயநினைவு பெற்றுள்ள நிலையில், அவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிட்னி பொலிஸ் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், போண்டாய் கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் பிலிப்பீன்ஸில் தீவிரவாதப் பயிற்சி பெற்றதாக எந்த ஆதாரமும் இல்லை என அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு தீவில் கடந்த நவம்பர் மாதம் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இடத்தை பயிற்சிக் களமாக பயன்படுத்தியதாக எந்த சான்றுகளும் இல்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.