படக்குறிப்பு, கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்
சிட்னியின் பிரபலமான போன்டை கடற்கரையில் நடைபெற்ற யூதர்களின் நிகழ்வின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகியும், இது தொடர்பான பல கேள்விகள் உள்ளன.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களும் நவம்பர் மாதம் பிலிப்பின்ஸுக்கு வந்ததாக பிலிப்பின்ஸ் குடிவரவுப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது விசாரித்து வருகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சஜித் அக்ரம் இந்திய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தங்கள் நாட்டுக்குப் பயணம் செய்ததாகவும், அவரது மகன் நவித் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டில் பிலிப்பின்ஸுக்கு வந்ததாகவும் பிலிப்பின்ஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சிட்னியில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள், நவம்பர் 1ஆம் தேதி பிலிப்பின்ஸுக்கு வந்து, நவம்பர் 28ஆம் தேதி திரும்பிச் சென்றனர் என்று பிலிப்பின்ஸ் குடிவரவுப் பணியகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
குடிவரவுப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் டானா சாண்டோவால் கூற்றுப்படி, 50 வயதான சஜித் அக்ரம் இந்திய கடவுச்சீட்டிலும், அவரது 24 வயது மகன் நவித் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டிலும் பயணித்துள்ளனர்.
இருவரும் (தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர்கள்) பிலிப்பின்ஸில் உள்ள டாவோதான் தங்களின் இறுதி இலக்கு என்றும், அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் சிட்னிக்குத் திரும்புவதாகவும் தெரிவித்தனர் என டானா சாண்டோவால் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் ‘ஐ.எஸ் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டது’ போல் தெரிகிறது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி தெரிவித்துள்ளார்.
‘ஐ.எஸ் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டது’
பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியப் பிரதமரின் அலுவலகம், ஏபிசி சிட்னிக்கு அல்பனீஸ் அளித்த வானொலி நேர்காணலில் இருந்து சில பகுதிகளை பகிர்ந்தது.
அல்பனீஸ் இந்த நேர்காணலில், “இது ஐ.எஸ் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது,” என்று கூறினார்.
இந்தத் தாக்குதலை அவர் “துல்லியமானது, திட்டமிடப்பட்டது மற்றும் இரக்கமற்றது” என்று விவரித்தார்.
ஆஸ்திரேலியா, ஐ.எஸ் குழுவை 2014 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது.
சதித்திட்டக்காரர்களின் வாகனத்தில் இருந்து ஐ.எஸ் குழு கொடி என சொல்லப்படும் கொடியும் மீட்கப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் மால் லான்யோன் தெரிவித்தார்.
படக்குறிப்பு, நவீத் அக்ரம்
வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க அவர் என்ன செய்கிறார் என்று கேட்கப்பட்டபோது, ஆஸ்திரேலியப் பிரதமர், தனது அரசாங்கம் முதலில் அவற்றைக் சட்டவிரோதமாக்க நாடாளுமன்றத்தில் மசோதாவைக் கொண்டுவரும் என்று கூறினார்.
இதுவரை கிடைத்துள்ள அனைத்து தகவல்களும் துப்பாக்கி ஏந்திய இரண்டு பேரும் தனியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் காட்டுவதாக அல்பனீஸ் கூறினார்.
சிட்னி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை யூத சமூகத்தினர் மீது நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய இருவரும் சமீபத்தில் பிலிப்பின்ஸுக்குச் சென்றனர் என்று காவல் ஆணையர் மால் லான்யோன் இப்போது கூடுதல் தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஏன் அங்கு சென்றார்கள், அவர்களின் நோக்கம் என்ன, அங்குச் சென்று அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
‘ஆயுத உரிமம் வைத்திருந்தனர்’
பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையர் மெல் லேனன், திங்கள்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில், சஜித் அக்ரமிடம் வேட்டையாடுவதற்கான துப்பாக்கி உரிமம் இருந்ததாகவும், அவர் ஒரு துப்பாக்கி கிளப்பின் உறுப்பினராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் டோனி பர்கேவின் கூற்றுப்படி, சஜித் அக்ரம் 1998 ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். 2001 ஆம் ஆண்டில் அவரது விசா பார்ட்னர் விசாவாக மாற்றப்பட்டது, பின்னர் அவருக்கு குடியிருப்புத் திரும்பும் விசா கிடைத்தது.
போண்டி கடற்கரை தாக்குதல் குறித்து வேறு என்ன தெரியும்?
நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிறிஸ் மின்ஸ், 10 வயது சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்தனர் என்றும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரும் கொல்லப்பட்டார் என்றும் உறுதிப்படுத்தினார்.
துப்பாக்கி ஏந்திய இருவரும் 50 வயதான தந்தை மற்றும் அவரது 24 வயதான மகன் என்று காவல் ஆணையர் மால் லான்யோன் தெரிவித்தார்.
50 வயதுடைய தாக்குதல் நடத்தியவர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார், அதே சமயம் 24 வயதுடைய மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரி உட்பட மொத்தம் 42 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
50 வயதுடைய தாக்குதல் நடத்தியவரிடம் செல்லுபடியாகும் ஆயுத உரிமம் இருந்தது என்று காவல்துறை கூறியது. அவர் பெயரில் ஆறு ஆயுதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் சம்பவம் நடந்த கடற்கரையில் இருந்து ஆறு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
சம்பவ இடத்தில் ‘இரண்டு வெடிபொருட்கள்’ கண்டுபிடிக்கப்பட்டன, அவை பின்னர் காவல்துறையால் மீட்கப்பட்டன.
மேற்கு சிட்னியின் கேம்ப்ஸி மற்றும் பான்னிரிக் பகுதிகளில் உள்ள இரண்டு சொத்துக்களை அதிகாரிகள் இரவு முழுவதும் சோதனை செய்தனர்.
சிட்னியில் யூத சமூகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் உதவிகள் வழங்க 328 காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை கூறியது.