பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மற்றும் கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட, 2-1 என தொடரை வென்றது சூர்யகுமார் யாதவின் அணி.
ஹோபர்ட்டில் மூன்றாவது போட்டியில் 186 ரன்களை சிரமம் இல்லாமல் சேஸ் செய்த இந்தியா, கோல்ட் கோஸ்ட்டில் நடந்த நான்காவது போட்டியில் 49 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிகளில் பேட்டிங், பௌலிங் இரண்டு பிரிவும் சிறப்பாக செயல்பட்டிருந்தன. மெல்போர்னில் இந்தியா தோற்றபோது, பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
இந்தத் தொடரில் நிறைய வீரர்களை, நிறைய காம்பினேஷன்களை இந்திய அணி முயற்சி செய்து பார்த்தது. பலதரப்பட்ட திறன் கொண்ட வீரர்கள் நல்ல பங்களிப்பைக் கொடுத்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
“வெவ்வேறு திறமைகள் கொண்ட வீரர்களை அணியில் கொண்டிருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். எல்லோரும் ஒவ்வொரு திறனை அணிக்குக் கொடுக்கிறார்கள். அவர்கள் அணிக்கு நல்ல உத்வேகத்தைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் ஒன்றாக மைதானத்துக்குள் போவதை மக்கள் ரசிக்கிறார்கள்” என்றார் சூர்யா.
திருப்தியளிக்கும் பேட்டிங்
இந்திய அணியின் பேட்டிங் தனக்கு ரொம்பவும் திருப்தியளிப்பதாகக் கூறினார் சூர்யகுமார் யாதவ்.
“பேட்டிங்கைப் பொறுத்தவரை கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதைத்தான் செய்கிறோம். எதையும் மாற்றவில்லை. வீரர்கள் அதை மிகவும் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். டாப் ஆர்டரில் அவர்கள் பேட்டிங் செய்யும் விதம் அனைவருக்கும் சந்தோஷம் கொடுக்கிறது” என்றார் சூர்யா.
டி20 போட்டிகளில் தொடர்ந்து அதிரடியாக ஆடும் அனுகுமுறையைக் கையில் எடுத்திருந்தது இந்திய அணி. அதை அவர்கள் ஆஸ்திரேலிய மண்ணிலும் தொடர்ந்தனர். அதனால் அது ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. இந்திய பெரிய ரன்கள் எடுப்பதில் டாப் ஆர்டர் கொடுக்கும் நல்ல தொடக்கம் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
குறிப்பாக இடது கை பேட்டர் அபிஷேக் ஷர்மா தன் அதிரடியை ஆஸ்திரேலியாவிலும் அப்படியே தொடர்ந்து நல்ல தாக்கம் ஏற்படுத்தினார்.
இந்தத் தொடரில் 163 ரன்கள் எடுத்து அவர் தொடர் நாயகன் விருதும் வென்றார். ஒவ்வொரு போட்டியிலும் எந்த ஆஸ்திரேலிய வீரராக இருந்தாலும், பந்தை பௌண்டரிக்கு அடிப்பதையே உறுதியாகக் கொண்டிருந்தார் அபிஷேக். இந்தத் தொடரில் 161.38 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார் அவர்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அவருக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்பட்டிருந்த நிலையில், அவர் அதை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். இதுபற்றி தொடர் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அபிஷேக், “இங்கு கூடுதல் வேகம் இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால், அணியின் பக்கமிருந்து யோசித்தபோது நான் என்னுடைய ஆட்டத்தை அப்படியே தொடரவேண்டும் என்று திட்டமிட்டேன். ஏனெனில், ஒரு ஓப்பனராக உங்களின் பங்கு என்ன என்பது உங்களுக்கு எளிதாகப் புரிந்துவிடும்” என்று கூறினார்.
மேலும், தன் அணுகுமுறைக்கு கேப்டனும், பயிற்சியாளரும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையே காரணம் என்றும் அவர் சொன்னார்.
“அதேசமயம் நீங்கள் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று நினைத்தால், அதற்கான திறனும் நம்பிக்கையும் இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் கேப்டனும் பயிற்சியாளரும் எனக்கு தொடர்ந்து ஆறுதல் கொடுத்திருக்கிறார்கள். நான் இதற்காக தீவிரமான பயிற்சி மேற்கொண்டேன். ஏனெ`னில், ஆஸ்திரேலியாவுக்கு வந்து அவர்களை வைட் பால் போட்டிகளில் வீழ்த்துவது என்பது எளிதல்ல. ஆசிய கோப்பைக்கு முன்பிருந்து என்ன மாதிரி ஆடினோமோ அதே வகையான ஆட்டத்தையே நான் விளையாட நினைத்தேன்” என்றார் அவர்.
கில் மீதான கேள்விகளும் பதில்களும்
அபிஷேக் ஒருபக்கம் அதிரடியாக ஆடியபோது அவருடைய சக ஓப்பனரான கில்லின் ஆட்டம் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமாக இருந்தது. சில போட்டிகளில் ரன் எடுக்க நேரம் எடுத்துகொண்ட அவர், ஓரிரு போட்டிகளில் ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். அவர் மெதுவாக ஆடிய போட்டிகளில் அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதை முன்வைத்து கேப்டன் சூர்யாவிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “அவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பு சிறப்பாக இருக்கிறது. நன்றாக விக்கெட்டுக்கு இடையே ஓடுகிறார்கள். ஆம், ஆட்டத்தில் மொத்தம் 120 பந்துகள்தான். ஆனால், சில நேரங்களில் நீங்கள் நினைப்பதை விட அதிக நேரம் இருக்கும். சில சமயங்களில் அவர்கள் சூழ்நிலைகளை அறிந்துகொள்ள கூடுதலாக நான்கைந்து பந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், பின்னால் அதற்கு ஈடுகட்டும் திறன் அவர்களுக்கு இருக்கிறது” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கில்லுடைய ஆட்டத்தைப் பற்றி தன் யூ-டியூப் சேனலில் பேசிய இந்திய முன்னாள் ஓப்பனர் ஆகாஷ் சோப்ரா, “கில் நன்றாக விளையாடிய 2 போட்டிகளிலுமே துருதிருஷ்டவசமாக மழை வந்துவிட்டது. கான்பெராவில் நடந்த முதல் போட்டியில் நன்றாக ஆடினார், இந்த ஐந்தாவது போட்டியிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், மழையால் அவரால் அதை பெரிய ஸ்கோர்களாக மாற்ற முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.
இந்தத் தொடரில் கில் ஸ்டிரைக் ரேட் போட்டி வாரியாக: 185, 50, 125, 117.94, 181.25
ஒருநாள் கேப்டனாக கில்லின் அறிமுகம், டி20 பேட்டிங் என அனைத்தையும் குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா, “இந்த சுற்றுப்பயணம் அவருடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக நிறைய கேள்விகளைத்தான் எழுப்பியிருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை கேள்விக்குறிகள் எதுவும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.
இந்த டி20 தொடருக்கு முன் கில் தலைமையில் ஒருநாள் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 1-2 என ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
சஞ்சு சாம்சன் இடம் என்ன?
இந்தத் தொடர் எழுப்பியிருக்கும் பெரும் கேள்விகளில் ஒன்று சஞ்சு சாம்சனின் இடம் என்ன என்பது.
“பெரிதாக எழுந்து கொண்டிருக்கும் கேள்வியெனில், சஞ்சு சாம்சனை என்ன செய்யப்போகிறோம் என்பதுதான். அவர் விளையாடாதது மிக மிக மிக பெரிய கேள்வியை எழுப்புகிறது. அவர் அபாரமாக ஆடினார் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நன்றாக ஆடியிருக்கிறார். ஆசிய கோப்பையில் மிடில் ஆர்டரிலிருந்து ஓமனுக்கு எதிராக டாப் ஆர்டரில் அனுப்பினார்கள், அங்கும் அவர் அரைசதம் அடித்தார்” என்று தன் யூ-டியூப் வீடியோவில் கூறியிருந்தார் ஆகாஷ் சோப்ரா.
பட மூலாதாரம், Getty Images
ஓப்பனராக ஆடிக்கொண்டிருந்த சாம்சன், சுப்மன் கில் துணைக் கேப்டன் ஆன பிறகு மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டார். ஆசிய கோப்பையில் ஐந்தாவது வீரராக ஆடினார். இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆக, அடுத்த போட்டிகளில் அவருக்குப் பதிலாக ஜித்தேஷ் ஷர்மாவைக் களமிறக்கியது இந்திய அணி. மூன்றாவது போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்து போட்டியை முடித்துக்கொடுத்ததால், அவரை ஃபினிஷராக இந்திய அணி பிரதானப்படுத்துகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள்.
சாம்சனின் இடம் இப்போது கேள்விக்குறியாகி இருப்பதால் பலரும் அதைப் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதுபற்றி தன் யூ-டியூப் சேனலில் பேசிய முன்னாள் இந்திய வீரர் மொஹம்மது கைஃப், “ஜித்தேஷ் ஷர்மாவை இந்திய அணி சாம்சனை விட நல்ல ஃபினிஷராகப் பார்க்கிறது. சுப்மன் கில்லை எதிர்கால கேப்டனாகக் கருதுவதால் ஓப்பனர் இடத்திலும் சாம்சனால் ஆட முடியவில்லை. அவர் மிகச் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால், பேட்டிங் பொசிஷனைப் பொறுத்து இப்போது வீரர்களைத் தேர்வு செய்வதால் அவருக்குப் பிரச்னை” என்று கூறியிருக்கிறார்.
சாம்சனுக்குப் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காதது பலதரப்பட்ட கருத்துகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆல்ரவுண்டராக ஜொலித்த வாஷிங்டன் சுந்தர்
பட மூலாதாரம், Getty Images
இந்தத் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு 3 போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக ஹோபர்ட்டில் களம் கண்டவருக்கு ஒரு ஓவர் கூடக் கொடுக்கப்படவில்லை. ஆனால், அடுத்த இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய வந்தவர், அதிரடியாக விளையாடினார். 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
நான்காவது போட்டியிலுமே அதே அதிரடி பாணியைக் கடைப்பிடித்து 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தப் போட்டியில் 8 பந்துகளே வீசிய அவர், 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.
‘அனைவரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்’
இந்திய அணியின் பந்துவீச்சை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா எளிதாக எதிர்கொண்டுவிட்டது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியிலும் நல்ல முன்னேற்றம் கண்டது இந்திய அணி. குல்தீப், துபே இருவரும் தாங்கள் பந்துவீசியபோது நிறைய ரன்கள் கொடுத்தனர். ஆனால், அவர்களும் கூட விக்கெட்டுகள் எடுத்துக்கொடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக தமிழ்நாட்டு வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
அணியின் பௌலிங் பற்றிப் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “பந்துவீச்சைப் பொறுத்தவரை எல்லோருமே பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். பும்ரா போன்ற ஒரு அனுபவ பௌலர் இருக்கும்போது, அனைவரும் அவரிடம் பேசுகிறார்கள், நிறைய கற்றுக்கொள்கிறார்கள். அது மிகவும் நல்ல விஷயம். அதனால் அணிக்குள் ஒரு நல்ல நட்பும் உருவாகிறது” என்று கூறினார்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்தத் தொடரில் இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஒருசில கேள்விகளும் எழுந்திருக்கின்றன. கேப்டன் சூர்யா கூட “எல்லாமே சிறப்பாக இருக்கிறது என்ற நிலை கிடையாது. நாங்கள் அதை அடைய முயற்சி செய்கிறோம். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலிருந்தும் கற்றுக்கொள்கிறோம். இதுவரை எல்லாம் சிறப்பாகவே செல்கிறது. இது தொடரும் என்று நம்புவோம்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு