0
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் யூத வெறுப்பை தோற்கடிக்க வேண்டும் என்று பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.
அத்துடன், யூத சமூகத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.
மென்செஸ்ட்டர் சம்பவத்தைக் கண்டித்து விசேட உரையாற்றிய போதே பிரதமர் மேற்படி தெரிவித்தார்.
அவர் அதில் மேலும் தெரிவித்ததாவது, இங்கிலாந்து யூத வெறுப்பை (antisemitic hate) மீண்டும் தோற்கடிக்க வேண்டும். யூத மக்களுக்கான தகுதியான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த எமது அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் செய்வேன்.
மேலும், யூத சமூகத்தைப் பாதுகாக்க அதிக பொலிஸாரின் இருப்பை உறுதிசெய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் டென்மார்க்கில் இருந்து முன்கூட்டியே நாடு திரும்பிய பிரதமர் ஸ்டார்மர், அரசாங்கத்தின் அவசரகால கோப்ரா (Cobra) குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
அதேவேளை, யூத சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளமையைக் கேட்டு தாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி : மென்செஸ்ட்டர் சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு; கொல்லப்பட்ட தாக்குதலாளியின் பெயர் வெளியானது!
மேலும், இது ஒரு மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டித்துள்ளார். பலவீனத்தால் பயங்கரவாதம் அதிகரிக்கும் என்றும், பலமும் ஒற்றுமையும் மட்டுமே அதைத் தோற்கடிக்க முடியும் என்றும் அவர் எச்சரித்தார்.
இங்கிலாந்தில் தலைவிரித்தாடும் யூத வெறுப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புத் தூண்டுதலைக் கட்டுப்படுத்த ஸ்டார்மர் அரசாங்கம் தவறிவிட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சாஆர் குற்றம் சாட்டினார்.
இந்த யூத வெறுப்பு பயங்கரவாதச் செயலால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களின் இழப்பு குறித்து இங்கிலாந்து யூதர்களின் பிரதிநிதிகள் சபை (Board of Deputies of British Jews) மற்றும் யூத தலைமை கவுன்சில் (Jewish Leadership Council) ஆகியன வேதனை தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாகக் கூறினர்.
மென்செஸ்ட்டர் நடந்த காட்சிகள் சமூகத்தில் இருக்கக்கூடாது என்றும், எல்லா வடிவங்களிலும் உள்ள யூத வெறுப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இங்கிலாந்து முஸ்லிம் நெட்வொர்க்கின் இணைத் தலைவர் இமாம் காரி அசிம் கூறினார்.