2
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் முடிவடைந்த 12 மாதங்களில் இங்கிலாந்தின் பணவீக்க விகிதம் 3.8%ஆக நிலைபெற்றுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டிலிருந்தைவிட பணவீக்கம் மிக உயர்ந்த அளவில் இருப்பதைக் காட்டுகிறது.
இந்த பணவீக்க விகிதத்தில், ஒரு வருடத்திற்கு முன்பு £10ஆக இருந்த ஒரு பொருளின் விலை இப்போது £10.38ஆக அதிகரித்துள்ளது.
மொத்த பணவீக்க விகிதம் மாறாமல் இருந்தாலும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து ஐந்தாவது மாதமாக அதிகரித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் முடிவடைந்த 12 மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை 5.1% உயர்ந்துள்ளது. இதன் பொருள், கடந்த ஆண்டு இதே நேரத்தில் £100க்கு வாங்கிய மளிகைப் பொருட்கள் இப்போது £105.10ஆக இருக்கும்.
காய்கறிகள், சீஸ் மற்றும் மீன் வகைகளில் சிறிய விலை உயர்வுகள் காணப்படுவதாக ONS தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் இந்த விலையேற்றம், சமீபத்திய ஆண்டுகளில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து மத்திய வங்கி பணவீக்கத்தை 2% இல் வைத்திருக்க விரும்புகிறது. பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த மட்டத்தில் இருப்பதால், மத்திய வங்கி நாளை வட்டி விகிதங்களை மாற்றியமைக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆண்டு வட்டி விகிதங்கள் மீண்டும் குறைக்கப்பட வாய்ப்பில்லை என்றும் சிலர் கணித்துள்ளனர். வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் மக்கள் செலவு செய்வதைக் குறைத்து, நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வை மெதுவாக்க மத்திய வங்கி முயற்சிக்கிறது.
இருப்பினும், பணவீக்க விகிதம் குறைகிறது என்பது பொருட்களின் விலை குறைகிறது என்று அர்த்தமல்ல, மாறாக அவை முன்புபோல் வேகமாக உயராது என்பதே இதன் பொருள்.
இம்மாதத்தில் பணவீக்கம் 4% ஆக உயரும் என மத்திய வங்கி கணித்துள்ளது. இது வங்கியின் 2% இலக்கின் இரு மடங்காகும்.
சமீபத்திய புள்ளிவிவரங்களுக்குப் பதிலளித்த இங்கிலாந்து நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், குடும்பங்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதாகவும், அரசாங்கம், மக்கள் பாக்கெட்டுகளில் அதிக பணத்தைப் போடுவதற்கும், அதே நேரத்தில் வலுவான, நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.