4
இங்கிலாந்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை (09) நிலவரப்படி நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே நிலப்பரப்பு அதிக ஈரப்பதத்துடன் இருப்பதுடன், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இங்கிலாந்து முழுவதும் 107 வெள்ள எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 209 பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அபாய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸ் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. டெவன், ஹாம்ப்ஷயர், க்ளோசெஸ்டர் மற்றும் வொர்செஸ்டர் பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகமாக பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சுமார் 300 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் 16,200 வீடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீதிகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 30 சென்டிமீட்டர் அளவு ஓடும் நீரே ஒரு காரை மிதக்கச் செய்யும் என்பதால் வெள்ள நீரில் வாகனங்களை இயக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இங்கிலாந்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பதிவாகியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் கடந்த 149 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக ஈரமான ஜனவரி மாதம் பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் பிப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களிலேயே முழு மாதத்திற்கு சமமான மழை பெய்துள்ளது. சமீபத்தில் தாக்கிய ‘சந்திரா’ புயல் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வானிலை முன்னறிவிப்பின்படி திங்கள் முதல் புதன் வரை மேகமூட்டத்துடன் இடையிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்தின் நடுப்பகுதியிலிருந்து வானிலை வறண்டதாகவும் குளிர்ச்சியாகவும் மாறும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூரிய ஒளியுடன் கூடிய வறண்ட வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.