இங்கிலாந்தின் ஷ்ரோப்ஷையர் மாவட்டத்தில் உள்ள விட்சர்ச் பகுதியில் அமைந்துள்ள ஒரு கால்வாயில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெரிய பள்ளம் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை பொலிஸார் “பெரிய அளவிலான அசம்பாவிதம்” என அறிவித்துள்ளனர்.
கால்வாயின் ஒரு முக்கிய பகுதி முழுமையாகச் சரிந்து விழுந்ததால், அந்தப் பகுதியில் வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. இந்த அனர்த்தத்தின் விளைவாக, கால்வாயில் இருந்த நீர் அனைத்தும் வெளியேறி, சுற்றியுள்ள பகுதிகளுக்கு பெருமளவு நீர் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணியளவில், கால்வாயில் நங்கூரமிடப்பட்டிருந்த இரண்டு குறுகிய படகுகள் பள்ளத்திற்குள் மூழ்கியுள்ளன. மேலும், இன்னும் இரண்டு படகுகள் பள்ளத்தின் விளிம்பில் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 50 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். கால்வாய் கரை உடைந்ததால் அருகிலுள்ள வயல்களில் பெருமளவு நீர் புகுந்துள்ளதாக ஷ்ரோப்ஷையர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி தெரிவித்துள்ளது.
விட்சர்ச் பகுதியிலுள்ள ‘கெமிஸ்ட்ரி’ என அழைக்கப்படும் இடத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் இதுவரை உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post இங்கிலாந்தில் கால்வாய் உடைந்து பெரும் பள்ளம் – படகுகள் ஆபத்தில், அவசரநிலை அறிவிப்பு! appeared first on Vanakkam London.