5
சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் தங்கும் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில், அவர்களிடம் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்யும் திட்டத்தை இங்கிலாந்து அரசு முன்வைத்துள்ளது.
திருமண மோதிரங்களைத் தவிர, நகைகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் பிற பெறுமதியான பொருட்கள் ஆகியன அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக இங்கிலாந்து சுமார் 15 பில்லியன் டாலர்கள் செலவிட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேசமயம், சிலர் இங்கிலாந்துக்குள் புகலிடம் கோரி தங்கியிருந்தாலும், கார்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த சொத்துகளை வைத்திருக்கிறார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தில் இவர்களின் செலவுகளை ஈடுசெய்வதற்குப் பதிலாக, அவர்களுடைய விலைமதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்து, அவற்றை விற்பனை செய்யும் திட்டத்தை, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் முன்னெடுத்து வருகிறார்.
இதில் நெக்லஸ்கள், கைக்கடிகாரங்கள், வாகனங்கள் போன்றவையும் அடங்கும்.
மேலும், சட்டப்படி இங்கிலாந்துக்குள் வந்து ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் கார்கள் கூட இத்திட்டத்திலிருந்து விலக்கப்படமாட்டாது.
கூடுதலாக, சட்டவிரோதமாக நுழைந்து உணவு டெலிவரி அல்லது அதேபோன்ற வேலைகள் செய்து வரும் நபர்களின் மின்சார பைக்குகளையும் பறிமுதல் செய்து, அவற்றை விற்று அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களின் செலவுகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டங்கள் அனைத்தும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதைத் தவிர்க்கும் வகையில் கடுமையான எச்சரிக்கை சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்படுவதாகவும், மஹ்மூத் தலைமையிலான உள்துறை அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.