• Wed. Feb 11th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் நீடிக்கும் வெள்ள அபாயம்: இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

Byadmin

Feb 11, 2026


இங்கிலாந்தில் நிலவி வரும் ஈரமான குளிர்காலம் காரணமாக, நாடு முழுவதும் 100 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 97 எச்சரிக்கைகள் இங்கிலாந்திற்கும், 3 எச்சரிக்கைகள் ஸ்காட்லாந்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு (10) மற்றும் இன்று புதன்கிழமை (11) வரை மேலும் 5-10 மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வெள்ள அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கார்ன்வால் (Cornwall) மற்றும் கவுண்டி டவுன் (County Down) ஆகிய பகுதிகளில் நகர வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மிக அதிக மழை பெய்துள்ளது.

கேட்ஸ் பிரிட்ஜ் மற்றும் அபோய்ன் பகுதிகளில் ஜனவரி மாத சராசரி மழைப்பொழிவை விட சுமார் நான்கு மடங்கு அதிக மழை பதிவாகியுள்ளது.

கார்ன்வாலில் உள்ள கார்டின்ஹாம் (Cardinham) பகுதியில் இந்த ஆண்டின் ஒவ்வொரு நாளும் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி – இங்கிலாந்தில் கடும் மழை – 100க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் வெளியீடு

பெரும்பாலான வெள்ள எச்சரிக்கைகள் டார்செட் (Dorset) மற்றும் சோமர்செட் (Somerset) பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் ஆறுகளில் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ளன. மேலும், மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள டிரெண்ட் (Trent) மற்றும் செவர்ன் (Severn) ஆறுகளிலும் வெள்ள அபாயம் நிலவுகிறது.

புயல் காரணமாக டாவ்லிஷ் (Dawlish) பகுதியில் உள்ள கடல் சுவர் சேதமடைந்துள்ளது. இது தென்மேற்கு இங்கிலாந்தை ஏனைய ரயில்வே வலையமைப்புடன் இணைக்கும் முக்கிய பாதையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காண்டிநேவியாவில் நிலைகொண்டுள்ள ஒரு உயர் அழுத்த மண்டலம் (High pressure area), குறைந்த அழுத்த மண்டலங்களை நகர விடாமல் தடுத்ததே இந்த தொடர் மழைக்கு முக்கிய காரணமாகும்.

இருப்பினும், இந்த வார இறுதியில் இந்த நிலை மாறி குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி மாத இறுதியில் வானிலை ஓரளவு சீரடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin