• Wed. Feb 18th, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் பணவீக்கம் குறைந்தது: பெட்ரோல், உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சியே முக்கிய காரணம்

Byadmin

Feb 18, 2026


இங்கிலாந்தில் பணவீக்க விகிதம் ஜனவரி வரையிலான ஓராண்டு காலத்தில் 3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. இது டிசெம்பர் மாதத்தில் இருந்த 3.4 சதவீதத்திலிருந்து சரிவடைந்துள்ளது.

பெட்ரோல், பாண், தானியங்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் விலை குறைந்ததே இந்தப் பணவீக்கச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, 2025 டிசெம்பர் மற்றும் ஜனவரி 2026க்கு இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல் விலை லீட்டருக்கு சராசரியாக 3.1 பென்ஸ் குறைந்துள்ளது. இருப்பினும், ஹோட்டல் தங்குமிடம் மற்றும் ‘டேக்அவே’ (takeaway) உணவுகளின் விலை உயர்வு, இந்த சரிவை ஓரளவிற்கு ஈடுசெய்துள்ளன.

பணவீக்கம் குறைந்திருந்தாலும், அது இன்னும் இங்கிலாந்து வங்கியின் (Bank of England) 2 சதவீத இலக்கை விட அதிகமாகவே உள்ளது. இருந்தபோதிலும், எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிப்பதால், மார்ச் மாதத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

பணவீக்க விகிதம் குறைவது என்பது விலைகள் குறைவதைக் குறிக்காது; மாறாக விலையேற்றத்தின் வேகம் குறைந்துள்ளதையே இது குறிக்கிறது. உதாரணமாக, ஜனவரி 2025-ஐ விட ஜனவரி 2026-ல் பொருட்கள் சராசரியாக 3 சதவீதம் அதிக விலையிலேயே உள்ளன. “வாழ்க்கைச் செலவைக் குறைப்பதே எனது முதல் முன்னுரிமை” என்று சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எடுத்த பட்ஜெட் முடிவுகளே பணவீக்கத்தைக் குறைக்க உதவியதாக அவர் குறிப்பிட்டார். அதே வேளையில், “தொழிலாளர் கட்சியின் தவறான பொருளாதார மேலாண்மையால் குடும்பங்கள் இன்னும் நிதி நெருக்கடியை உணர்கின்றன” என்று நிழல் சான்சலர் மெல் ஸ்டிரைட் விமர்சித்துள்ளார்.

பணவீக்கத் தரவுகள் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 16-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை 16.1 சதவீதமாக உள்ளது, இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவாகும்.

தொடர்புடைய செய்தி – இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத உச்சம்: இளைஞர்கள் பாதிப்பு

By admin