23
இங்கிலாந்தில் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை மோசடி செய்த சிப்டைன் ஹுசைன் (Sibtain Hussain) என்ற 32 வயதான நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்றவியல் ஏஜென்சியின் (NCA) விசாரணையின் முடிவில், ஹுசைன் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து ‘நிதி திறன்’, ‘மாணவர் சேவைகள்’ மற்றும் ‘தங்குமிடம் வைப்புத்தொகை’ ஆகியவற்றுக்கான ஆதாரங்களை பெற கட்டணங்கள் வசூலித்துள்ளார் என்பது தெரியவந்தது.
அவர் மோசடியை நடத்த பல்வேறு போலியான மின்னஞ்சல்கள், மாற்றுப் பெயர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2017ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கிய ஹுசைன், 2018ஆம் ஆண்டு லங்காஸ்டர் பல்கலைக்கழகம் (Lancaster University) தரவுகளை திருடி, அதை 200 மாணவர்களை குறிவைத்து மோசடிக்குப் பயன்படுத்தினார்.
ஒவ்வொருவரிடமிருந்து £3,200 வரை வசூலித்த இவர், 23 மாணவர்களிடமிருந்து சுமார் £48,000 க்கும் மேலான பணத்தைப் பெற்றார். அதிகாரிகள் கூறியதற்க்படி, இந்த மோசடி மூலம் £493,000 க்கும் மேலான சட்டவிரோத இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் லங்காஸ்டர் பல்கலைக்கழகம் NCAக்கு தரவு மீறல் குறித்த புகாரை அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது, அதன்பின் ஹுசைன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் ஒரு பணப்பை பறிமுதல் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்த ஹுசைன், அக்டோபர் 2025 இல் லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதற்குப் பிறகு, அவர் மோசடிக்காக நான்கரை ஆண்டுகள் மற்றும் பணமோசடிக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.