1
இங்கிலாந்துவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த இலங்கைப் பெண் கொலை சம்பவம் தொடர்பாக, இலங்கையர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் தலைநகரான கார்டிஃப் நகரில் இந்த கொலை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று நடைபெற்ற விசாரணையின் போது, நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றம் முன்னிலையில், 37 வயதான திசாரா வெராகலேஜ் என்பவர், நிவுன்ஹெல்லேஜ் டோனா நிரோதா கலப்னி நிவுன்ஹெல்லா என்ற 32 வயதான இலங்கைப் பெண்ணை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2025 ஓகஸ்ட் 21 அன்று, கார்டிஃப் நகரின் ரிவர்சைடு பகுதியில் உள்ள தெற்கு மோர்கன் பிளேஸ் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையில், நிரோதா பலத்த காயங்களுடன் கிடந்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பென்ட்வைனைச் சேர்ந்த வெராகலேஜ், ஆரம்பத்தில் கொலை குற்றச்சாட்டை மறுத்திருந்தாலும், சமீபத்திய நீதிமன்ற விசாரணையின் போது தனது மனுவை மாற்றி குற்றவாளியாக ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற நடவடிக்கைகள் தெரிவித்தன. மேலும், அவர் முன்பு ஒரு கத்தி அல்லது கூர்மையான முனையுடன் கூடிய பொருளை வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
பிரேத பரிசோதனையில், நிரோதாவின் மரணம் பல கூர்மையான காயங்களால் ஏற்பட்டதாக ஆரம்பக் காரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து, வெராகலேஜ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை எதிர்வரும் பெப்ரவரி 20 அன்று அறிவிக்கப்பட உள்ளது.
நிரோதாவின் மரணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், அவரை “அன்பான மகள், குடும்ப உறுப்பினர் மற்றும் அன்பான தோழி” என வர்ணித்துள்ளனர். அவரது கருணையும் அன்பும் என்றும் நினைவில் நிற்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த அதிகாலை நேரத்தில், நிரோதாவின் உடல் தெருவில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக வெராகலேஜ் கைது செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு நடந்த விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.