1
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோர் லண்டனில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்து மற்றும் அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சா் 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
தனது பயணத்தின் முதல்கட்டமாக இங்கிலாந்து தலைநகா் லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், இங்கிலாந்து பிரதமா் கியா் ஸ்டாா்மரை சந்தித்தாா்.
பின்னா், வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியின் ‘செவனிங் ஹவுஸ்’ இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் வந்த ஜெய்சங்கா், நேற்று புதன்கிழமை வரை இரண்டு நாள்களுக்கு விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
இருதரப்பு உறவுகள், ரஷியா-உக்ரைன் போா், வங்கதேச நிலவரம் உள்பட பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
இப்பேச்சுவாா்த்தை தொடா்பாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, தில்லியில் கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தச் சூழலில், 41 பில்லியன் பவுண்ட் (ரூ.4.58 லட்சம் கோடி) மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்துக்கு நாங்கள் உத்வேகமளித்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பல்வேறு துறைகளில் வியூக-அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு, தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, கல்வி, தொழில்நுட்பம், போக்குவரத்து, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட இருதரப்பு நல்லுறவின் ஒட்டுமொத்த அம்சங்களும் பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. தற்போதைய ஸ்திரமற்ற உலகச் சூழலில் இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவில் நிலைத் தன்மையும் மேம்பாடும் அவசியம்’ என்று தெரிவித்துள்ளாா்.