0
இங்கிலாந்து எல்லையில் இதுவரை கைப்பற்றப்பட்ட சுமார் £3.5 மில்லியன் மதிப்புள்ள போலியான பொம்மைகளில், 90 சதவீதமானவை லாபுபு (Labubu) பொம்மைகள் என உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
லாபுபு என்பது ஹாங்காங்கைச் சேர்ந்த கலைஞர் காசிங் லங் (Kasing Lung) என்பவரால் உருவாக்கப்பட்ட பாப் மார்ட் (Pop Mart) நிறுவனத்துடனான கூட்டுப்பணியால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு விசித்திரமான அசுர பொம்மை பாத்திரம் ஆகும்.
இந்தப் பொம்மைகள், பெரும்பாலும் வயது வந்தோரின் சேகரிப்புப் பொருட்களாக விற்கப்படுகின்றன. சில பெட்டிகளில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவை குழந்தைகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.
அறிவுசார் சொத்து அலுவலகத்தின் (IPO) கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட போலியான பொம்மைகளில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு பாதுகாப்புச் சோதனைகளில் தோல்வியடைந்துள்ளன.
இந்தப் போலியான பொம்மைகளில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அல்லது மூச்சுத் திணறல் அபாயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
போலிகளை வாங்குபவர்களில் ஏழு பேரில் ஒருவர் விலையின் காரணமாகவே வாங்குகிறார்கள் என்றும், 27 சதவீதம் பேர் மட்டுமே வாங்கும் போது, பாதுகாப்பைக் கருத்தில் கொள்கிறார்கள் என்றும் IPO கண்டறிந்துள்ளது.
குறித்த நிஜ பொம்மைகளுக்கான தேவை மிகவும் அதிகரித்ததால், வாடிக்கையாளர்கள் சண்டையிட்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் பாப் மார்ட் தனது 16 இங்கிலாந்து கடைகளிலும் விற்பனையை நிறுத்தியது. இப்போது இந்தப் பொம்மைகள் ஆன்லைன் லாட்டரி அமைப்பு மூலம் மட்டுமே விற்கப்படுகின்றன.
இந்நிலையிலேயே, 2025ஆம் ஆண்டில் IPOஆல் கைப்பற்றப்பட்ட 259,000 போலியான பொம்மைகளில், 236,000 பொம்மைகள் லாபுபு போலிகளாகும்.
போலியான பொம்மைகளை வாங்கியவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தாங்கள் வாங்கிய பொருட்களில் பிரச்சினைகள் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளில் பொம்மைகள் உடனடியாக உடைவது, பாதுகாப்பற்ற லேபிளிங், நச்சுத்தன்மை கொண்ட வாசனை மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.