0
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் சீன ஜனாதிபதி Xi Jinping ஆகியோருக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு, தற்போது அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் முன்னெடுத்த வர்த்தகப் போரின் விளைவாக, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள்கூட கடும் பொருளாதார தாக்கங்களை எதிர்கொண்டு வருகின்றன. இதன் பின்னணியில், அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்திருக்காமல், ஏனைய பொருளாதார வலிமை கொண்ட நாடுகளில் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பல நாடுகள் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளன.
கனடா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சீனாவின் பொருளாதார சக்தி மீது கவனம் செலுத்தி வரும் நிலையில், இங்கிலாந்தும் தனது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வந்துள்ளது. அதற்கான வெளிப்பாடாக பிரதமர் ஸ்டார்மர், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு, உயர்மட்ட மற்றும் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
இச்சந்திப்பின் முதன்மை நோக்கம் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவை மீண்டும் வலுப்படுத்துவதாக இருந்தாலும், இது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நிலவி வந்த ராஜதந்திர மோதல்களைத் தாண்டி, வணிகம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த புதிய முன்னேற்றப் பாதையை உருவாக்க இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை சமாளிக்க, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியுடன் உறவு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, பிரதமர் ஸ்டார்மர் இந்த முக்கியமான பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகள் தொடர்ந்தாலும், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உறவைச் சீரமைப்பதற்கு லேபர் கட்சி முன்னுரிமை அளித்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தாண்டி, மூலோபாயக் கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் தொடக்கமாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது. உலகளாவிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இங்கிலாந்து தனது சர்வதேச வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைத்து வருவதை இந்த சீனப் பயணம் வெளிப்படுத்துகிறது.