1
இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே நேரடி ரயில் இணைப்புகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, எல்லைகளைக் கடந்து இயங்கும் யூரோஸ்டார் ரயில் நிறுவனமும், ஜெர்மனியின் அரசுக்குச் சொந்தமான ரயில் நிறுவனமான டாய்ச் பான் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலண்டனுக்கும் கோலோன் மற்றும் பிராங்பேர்ட் போன்ற முக்கிய ஜெர்மானிய நகரங்களுக்கும் இடையே ரயில் சேவைகளை நிறுவுவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காகும்.
இந்தச் சேவைகளை 2030களின் ஆரம்பத்தில் தொடங்க வேண்டும் என்ற இலக்கு உள்ளது. இலண்டன் மற்றும் கோலோன் இடையே பயண நேரம் நான்கு மணிநேரமாகவும், இலண்டன் மற்றும் பிராங்பேர்ட்டுக்கு இடையே ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாகவும் இருக்கும்.
இந்த ரயில் இணைப்பில், யூரோஸ்டாரால் ஆர்டர் செய்யப்பட்ட புதிய இரட்டை அடுக்கு செலிஸ்டியா ரயில்கள் பயன்படுத்தப்படும்; இவை மே 2031 முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு, நவம்பர் 25 அன்று பெர்லினில் நடைபெற்ற பிரிட்டன் மற்றும் ஜெர்மனி நாடுகளின் போக்குவரத்து வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்துறையினரைக் கொண்ட கூட்டுப் பணிக்குழுவின் முதல் சந்திப்பைத் தொடர்ந்து வந்துள்ளது.
இந்தச் சேவைகள் தொடங்குவதற்கு முன், நிலையங்களில் போதுமான பயணிகள் இடவசதியை உருவாக்குவது, புதிய எல்லை சோதனைச் சாவடிகளை நிறுவுவது மற்றும் தண்டவாளங்களை அணுகுவதற்கு அனுமதி பெறுவது போன்ற பல தடைகளை கடக்க வேண்டியுள்ளது.
பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இந்த முன்னேற்றத்தை வரவேற்றுள்ளார். “இது இங்கிலாந்தை நன்கு இணைக்கப்பட்ட ஐரோப்பாவின் மையத்தில் வைக்கும் ஒரு புதிய ரயில் இணைப்பை நோக்கி நம்மை ஒரு படி நெருக்கமாக கொண்டு வந்துள்ளது, மேலும் அதிகரித்த வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கு வழி வகுக்கிறது” என்று கூறியுள்ளார்.